கண்களின் பயன்பாடு நமக்கு மிக முக்கியமானது. காலையில் எழுந்து, இரவு படுக்கைக்குச் செல்வது வரையிலும் ஒரு நாளில் கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் இடையறாது பணிபுரிந்து இந்த உலகின் ஒவ்வொரு காட்சிகளையும் நமக்குத் திறந்து காட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்குச் சோர்வு ஏற்படுகிறது. இந்தச் சோர்வால் கண்களில் கருவளையமும் ஏற்பட்டு நம் முகத்தையும் சோர்வுடையதாக மாற்றுகிறது. மனமும் சோர்வு அடைகிறது. கண்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தால் மனமும் முகமும் வசீகரமாகும். இதற்குச் சில மணித்துளிகளாவது நாம் ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.
#அதிகாலையில் குளிப்பது கண்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து நன்றாகத் தேய்த்துக் குளிர்ச்சி அளிக்க வேண்டும். அதுபோல தேங்காய் எண்ணெயைத் தொட்டுக் கண்களைச் சுற்றி மிருதுவாக வருடிக் கொடுக்கும்போது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை நீங்கும்.
#வெயிலில் ஊர்சுற்றிக் கண்கள் மிகவும் கலங்கிச் சோர்வடைந்து காணப்பட்டால் சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக்கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். அப்படியே கண்களை மூடியபடி இருந்து சில நிமிடங்கள் கழித்துத் திறந்து பாருங்கள். கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.
#வெள்ளரிக்காயைத் துருவி மெல்லிய துணியில் கட்டி, அதைக் கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுத்தும் கண்களுக்குப் புத்துணர்ச்சி தரலாம்.
#வெயிலில் சுற்றுவது, தூக்கமின்மை போன்றவற்றால் கருவளையம் தோன்றும். கறிவேப்பிலையை இடித்துச் சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயுடன் கலந்து கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.
#உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்கள் பொலிவு பெறும்.
#சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றித் தடவிவந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.