இளமை புதுமை

நட்பு பொங்க ஒரு காபி!

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் புகழ்பெற்ற F.R.I.E.N.D.S தொடரைப் பார்த்த ரசிகர்களின் ஒரே கனவு, அந்தத் தொடரில் அடிக்கடி வரும் ‘சென்ட்ரல் பெர்க்’ எனும் கஃபேயில் நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடிப்பதுதான். அந்தத் தொடரின் ரசிகர்களுக்கு ஓர் இன்பச் செய்தி!

‘சென்ட்ரல் பெர்க்’ போன்ற கஃபேக்கள் வட இந்தியாவில் பல இடங்களில் இருக்கின்றன. சென்னையில் அவை இல்லாதது நம் ரசிகர்களுக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்துவந்தது. இனி, கவலை வேண்டாம். நம் ரசிகர்களின் கனவை நனவாக்கும் விதமாக‌, DJ’S ENSOMNEACKS எனும் நாடக அமைப்பின் நிறுவனரான விக்ரம் தனசேகர், ஒரு பிரத்யேக கஃபே ஒன்றை அமைக்கவுள்ளார்.

அதுகுறித்து அவர் சொல்லும் தகவல்களைக் கேட்கும் முன்பு, ‘ஃபிரெண்ட்ஸ்’ தொடர் குறித்து ஒரு சின்ன அறிமுகம்...

‘ஃபிரெண்ட்ஸ்’ தொடர், ஆறு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அவர்கள் தினசரி சந்திக்கும் பிரச்சினைகளை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எப்படி யதார்த்தமாகக் கையாள்கிறார்கள் என்பதே கதை. இந்தத் தொடர், 1994-2004 காலகட்டத்தில் ஒளிபரப்பானது. ஆண்டுக்கு ஒரு பாகம் என, பத்து ஆண்டுகளுக்குப் பத்துப் பாகங்கள் வெளிவந்தன. இந்தத் தொடர் முடிந்து 12 ஆண்டுகளாகியும், இதற்கான ரசிகர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. யூடியூப்பில் இந்த நாடகத்துக்குக் கிடைத்துவரும் லைக்ஸ் எண்ணிக்கையே அதற்குச் சான்று!

அது மட்டுமில்லாமல், இந்தத் தொடர் பல நாடுகளில் இன்னும் மறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொடருக்கு நம் ஊரில் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்த விக்ரம் தனசேகர், இந்தத் தொடரை ‘தீம்’ ஆகக் கொண்ட உணவகம் ஒன்றைச் சென்னையில் அமைக்கவுள்ளார்.

ஓவர் டூ விக்ரம்...

“வெறுமனே ‘ஃபிரெண்ட்ஸ்’னு பேரை வெச்சிட்டு, ஒரு கஃபேயை உருவாக்க முடியாது. அந்தத் தொடரில் இருந்த உணர்வை இங்க வரும்போதும் நம் ரசிகர்கள் ‘ஃபீல்’ பண்ணனும். அதனால அந்தத் தொடரில் நாம் பார்த்து ரசித்த ஒவ்வொரு பொருளும் இங்கு இருக்கிற மாதிரி இந்த கஃபேயை டிசைன் பண்ணிட்டிருக்கோம். உதாரணத்துக்கு, தொடரின் டைட்டில் சாங்ல‌ வரும் ‘ஆரஞ்சு கவுச்’சைப் பிரத்யேகமாக நாங்களே உருவாக்கி இருக்கோம். அதில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து 90 நிமிடங்கள் செலவிடலாம். அது மட்டுமில்லாமல் பூஸ்பால் டேபிள், பெரிய காபி மக்ஸ், மோனிகாவின் வீட்டிலிருக்கும் கோல்டன் ஃபிரேம் என அனைத்தும் இங்கு இருக்கும். மெனுவில், அந்தத் தொடரின் கதாபாத்திரங்கள் விரும்பி உண்ணும் பீட்ஸா, பர்கர், பாஸ்டா, காபி போன்ற ஐட்டங்களும் கிடைக்கும்.

தவிர, இங்கு உணவகம் இயங்கும் நேரம் முழுக்க ‘ஃபிரண்ட்ஸ்’ தொடர் ஒளிபரப்பப்படும். எங்கள் சொந்த நாடக அமைப்பிலிருந்தும் நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறோம்” என்று குதூகலித்துச் சொல்லும் அவர், இங்கு ‘தீம் வீக்’ திட்டத்தையும் செயல்படுத்த நினைத்திருக்கிறார்.

“வாரம் முழுக்க ‘ஆடிஷன் வீக்’, ‘லவ் ஃபெய்லியர் வீக்’, ‘தேங்க்ஸ் கிவிங் வீக்’ போன்ற பல நிகழ்ச்சிகளையும் நடத்த‌வுள்ளோம். எங்கள் நாடகத்துக்குத் தேவையான நடிகர்களையும் இங்கு தேர்வு செய்ய உள்ளோம்” என்கிறார்.

ENSOMNEACKS எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கஃபே, இந்த ஆண்டுக்குள் திறக்கப்படுமாம். அப்புறமென்ன, வாங்க அரட்டை அடிக்கலாம் ஃபிரெண்ட்ஸ்!

- க. ஸ்வேதா

SCROLL FOR NEXT