சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. வெளி உலகம் தங்களை மகிழ்ச்சியான தம்பதிகளாக அடையாளம்காண வேண்டும் என்று பெரும்பாலான தம்பதிகள் விரும்புவதே அதற்குக் காரணம். அதனால்தான், பேஸ்புக் மாதிரியான ஊடகங்களில் தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கைத் தருணங்களைப் பல தம்பதிகள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அத்துடன், தங்களுடைய பரஸ்பர அன்பையும் ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள் போன்றவை மூலம் பலவிதங்களில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் இப்படி மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தம்பதிகள் நிஜவாழ்க்கையில் மகிழ்ச்சியானவர்களாக இருப்பதில்லை என்கின்றன சில ஆய்வுகள். ஏனென்றால், உண்மையிலேயே மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதிகள் தங்களுடைய உறவை வெளி உலகம் அங்கீகரிக்கவோ புகழவோ வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன அவை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் தங்களுடைய உறவைப் பற்றிச் சமூக ஊடகங்களில் பேசுவதேயில்லை.
மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதிகள் மெய்நிகர் உலகத்தில் தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக் கொள்வதற்குப் பின்னாலிருக்கும் மனநிலையை இந்த ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
பாதுகாப்பின்மை
சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும் நிலைத்தகவல்களையும் பகிரும் தம்பதிகள் உண்மையில் தங்களுடைய உறவில் வாழ்க்கைத்துணையால் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள். ‘நார்த்வெஸ்ட்ர்ன்’ பல்கலைக்கழகம் நூறு தம்பதிகளிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.
மகிழ்ச்சிக்கான தேடல்
‘அல்பிரைட்’ கல்லூரியின் ஆய்வாளர்கள், “ சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவைப் மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அத்துடன், தங்களுடைய வாழ்க்கைத் துணையை உளவுபார்க்கவும் அதிகமானவற்றைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற சுயமரியாதை உணர்வால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்” என்கின்றனர். இந்த உணர்வு இருப்பவர்கள் அடுத்தவர்களிடம் தங்களுடைய உறவு சிறப்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்புவார்கள். அப்படிக் காட்டிக்கொள்வதால், தங்களுடைய உறவு வெற்றிகரமானதாக இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள்.
நிரூபிக்கத் தேவையில்லை
உண்மையிலேயே மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்குச் சமூக ஊடகங்களில் அதை நிரூபிக்க வேண்டிய தேவை எழுவதில்லை. அவர்களுக்கு யாருக்கும் பொறாமை ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதில்லை. இருவருக்குமிடையில் இருக்கும் பரஸ்பர முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. அவர்கள் தங்களுடைய உறவில் பாதுகாப்பையும் திருப்தியையும் உணர்பவர்களாக இருக்கிறார்கள்.
ஃபேஸ்புக்குக்கு வெளியே மகிழ்ச்சி
டென்மார்க்கின் மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், பேஸ்புக்கை ஒரு வாரம் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய நினைத்தது. அந்த மையம் 1,095 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியது. “ஒரு வாரம் பேஸ்புக்கை விட்டு விலகி இருந்தவர்களுக்கு வாழ்க்கையின் மீதான மன திருப்தி அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது” என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஆய்வில், பேஸ்புக் பயனாளிகளிடம் கோபம், மன அழுத்தம், கவலை அதிகமாக இருப்பதும் உறுதியாகியிருக்கிறது.
சுயமோகப் பிரச்சினை
தம்பதிகளில் யாராவது ஒருவர் சுயமோகப் (narcissism) பிரச்சினையாலும், மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அது சமூக ஊடகங்களில்தான் முதலில் வெளிப்படுகிறது. இவர்கள் தொடர்ந்து சுயபடங்களைப் பகிர்ந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மோசமான வாழ்க்கைத்துணைகளாக இருப்பதாக ஒஹியோ மாகாணத்தின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார்.
தங்களுக்கான சமாதானம்
ஒரு தம்பதி தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைக்கத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான திருப்தியான உறவில் இருப்பதாக சமாதானப்படுத்தியும்கொள்கிறார்கள்.