இளமை புதுமை

சர்வதேச ஓவியத்தில் சாதிக்கும் பொறியாளர்

கிங் விஸ்வா

உலக அளவில் தலைசிறந்த ஓவியங்கள் இடம்பெறும் ஓவியக் கண்காட்சிக்கு, இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் இரண்டு ஓவியங்களை வரைந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் கணபதி சுப்ரமணியம்.

அமைதிக்கு ஓர் கண்காட்சி

மத்திய ஆசியாவும் கிழக்கு ஐரோப்பாவும் இணையும் புள்ளியில் இருக்கும் நாடு கஜகஸ்தான். இதுவே நிலத்தால் சூழப்பட்ட உலகின் மிகப் பெரிய நாடு. கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரான அலமாட்டியில் இருக்கிறது Academy of Ambitious Artists. நாடுகளுக்கிடையில் இருக்கும் வேறுபாடு களைக் களைந்து, கலாச்சாரப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, ஓவியக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டது அந்த கலை-கலாச்சார அமைப்பு.

நாடு, மதம், இனம் சார்ந்த அமைதியையும் ஒற்றுமையும் வலியுறுத்துவதற்கு உலகின் மிகச் சிறந்த ஓவியர்கள் தங்களுடைய படைப்புகளைத் தரும் கண்காட்சி இது. அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் இந்த ஓவியங்களில் சிறந்த வற்றைத் தேர்ந்தெடுத்துக் கண்காட்சியாக வைப்பது வழக்கம். அதை ஏலம் விட்டுக் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஒற்றுமைக்கான மேலும் பல முயற்சிகளையும், நாடுகளுக்கிடையே கலாச்சாரப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வார்கள்.

இந்திய ஓவியம் தேர்வு

‘கலை, கலாச்சாரத்தின் உலகமயமாக்கல் 2017’ என்பதுதான் இந்த ஆண்டுக்கான கண்காட்சியின் கருப்பொருள். லண்டனைச் சேர்ந்த ‘யுரேசியன் கிரியேட்டிவ் கில்டு’ அமைப்பின் உறுப்பினர்கள் இந்த ஓவியங்களை அலசி ஆராய்ந்து, மதிப்பீடு செய்து தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரியில் உலக நாடுகளின் முன்னணி ஓவியர்களிடமிருந்து இந்தக் கண்காட்சிக்கு ஓவியங்கள் கேட்கப்பட்டன. அவற்றுள் ரஷ்யா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஓவியங்கள் கண்காட்சிக்குத் தேர்வாகியிருக்கின்றன. இந்தக் கண்காட்சிக்குத்தான் கணபதி சுப்ரமணியத்தின் ஓவியம் தேர்வாகி இருக்கிறது.

பிப்ரவரி 5-ம் தேதி கஜகஸ்தானின் அல்மாட்டியிலும், மார்ச் ஒன்றாம் தேதி ஸ்பெயினின் மாட்ரிட்டிலும் இந்தக் கண்காட்சி நடக்கிறது. மார்ச் 7-ம் தேதியன்று இந்த ஓவியங்கள் ஏலத்தில் விடப்படும். கஜகஸ்தானின் பிரபல ஓவியரும் யுரேசியன் கிரியேட்டிவ் கில்டு அமைப்பின் செயற்குழு உறுப்பினருமான அலெஸ்யா அர்த்தமேயவா இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார். அடுத்த ஆண்டு டெல்லியில் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

காமிக்ஸ் அஸ்திவாரம்

கடந்த 20 ஆண்டுகளாக டாட்டா சயின்டிஸ்ட் ஆக இருக்கும் கணபதி சுப்ரமணியம், கிண்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பொறியியல் பயின்றவர். அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு இந்தியா திரும்பிய பிறகு, மென்பொருள் ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார். சிறுவயது முதலே அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்கள், இந்திரஜால் காமிக்ஸின் வேதாளர் கதைவரை பலவற்றையும் படித்து, ஓவியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தீவிர ஓவியப் பயிற்சியும் பெற்றுவந்தார்.

தன்னுடைய ஆர்வத்தின் மூலம் ஓவியக் கலையின் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்த கணபதி, கடந்த 3 ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார். பல ஓவிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துவருவதுடன், தனது வலைப்பூ, முகநூலிலும் தொடர்ந்து ஓவியங்களைப் பற்றிய விவாதங்களை இவர் முன்வைத்துவருகிறார். விஷ்ணு தர்மோத்திர புராணத்தின் சித்திரச் சூத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது, அஸ்டெரிக்ஸ் கதைகளுக்கு விமர்சனம் செய்வது எனத் தனக்கென்று ஒரு தனிப் பாணியைப் பின்பற்றிவருகிறார்.

உள்ளூருக்கு முன்னுரிமை

சென்னையில் ஓவியர்களுக்கென்று தனிப்பட்ட நிகழ்வு இல்லாததைக் கண்டு, தனது நண்பருடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் ‘ArtMart’ என்ற கூட்டு ஓவியக் கண்காட்சியையும் நடத்திவருகிறார். ஏறக்குறைய 100 ஓவியர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட கடந்த ஆண்டு நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது. இந்த ஆண்டு மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் இவர் நடத்தும் ஆர்ட்-மார்ட் நிகழ்வும், அவருடைய ஓவியம் பங்கேற்ற சர்வதேச ஓவியக் கண்காட்சியும் ஒரே நாளில் (பிப்ரவரி 5) நடைபெறுகின்றன. கண்காட்சிக்குச் செல்லாமல் நமது ஓவியர்களுக்கான பாலமாகத் திகழும் இந்த நிகழ்வுக்கு முன்னுரிமை தந்துள்ளார் கணபதி. அதேநேரம் ஸ்பெயினில் நடக்க இருக்கும் கண்காட்சிக்குச் செல்கிறார்.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

SCROLL FOR NEXT