இளமை புதுமை

காதல் வழிச் சாலை 31: காதல் என்னும் முடிவில்லாப் பெருங்கடல்

மோகன வெங்கடாசலபதி

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைச் சில ஆண்டுகளுக்கு முன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் சுவர். சுவரின் பிரம்மாண்டத்தில் கவரப்பட்டு, அதைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் ஒரு காதல் கதை கண்ணில் பட்டது. “இவ்வளவு நீளச் சுவரை யாராவது நடந்தே கடக்க முடியுமா?” என்று நான் யோசிக்க, காதலர்கள் இருவர் அதை ‘நடத்தி’க்காட்டிவிட்டனர். காதலி ஆப்ராமோவிச் (Abramovic) ஒரு முனையில் இருந்து நடக்க, காதலன் உலாய் (Ulay) இன்னொரு முனையில்… 90 நாட்கள் நடைப்பயணம். தனியாக நடந்த இருவரும் சீனப் பெருஞ்சுவரின் நடுவில் சந்தித்து ஆரத் தழுவிக்கொண்டனர். நாமிருவரும் இனி பிரியலாம் என்று சொல்லிவிட்டு அதை உலகத்துக்கும் அறிவித்துவிட்டு ஆளுக்கொரு திசையில் சென்றனர். என்ன குழப்பமாக இருக்கிறதா?

பிரிவிலும் காதல் உண்டு

இருவரும் நடனக் கலைஞர்கள். தீவிரக் காதலில் இருந்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து நடத்திய நிகழ்த்துக்கலை நடனங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவர்களின் காதலும் ஒரு கட்டத்தில் கசந்தது. பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்த அவர்கள், கடைசியாக ஒரு மெகா நிகழ்வுடன் தங்கள் காதலுக்கு விடைகொடுக்க முடிவுசெய்தனர். அதுதான் சீனப் பெருஞ்சுவரில் நடந்து சென்று சந்தித்துக்கொள்வது என்ற முடிவு.

“காதலை ஆரம்பிக்கும்போது பகீரத பிரயத்தனம் செய்யும் நாம், அதை முடித்துக்கொள்ளும்போது ரொம்ப சாதாரணமாகப் பிரிந்து விடுகிறோம். நாங்கள் அப்படி இருக்க விரும்பவில்லை” என்று தன் தோழியிடம் சொல்லியிருக்கிறார் ஆப்ராமோவிச். ‘The Lovers: The Great Wall Walk’ என்று இந்தச் சம்பவம் குறிப்பிடப்படுகிறது. காதலைப் பற்றிய சுவாரசியங்கள்தான் எத்தனை எத்தனை!

கவித்துவமாக இருந்தாலும் இந்தச் சம்பவம் நமக்குச் சில உண்மைகளைப் புரியவைக்கும். பிரிவதிலும் ஒரு நாகரிகத்தைக் கடைப்பிடித்தனர் இந்த வித்தியாசக் காதலர்கள்.

காதல் ஒரு காற்றைப் போல, அதை உணரத்தான் முடியும், பார்க்க முடியாது என்பார்கள். அது முகிழ்வதென்னவோ குறுகிய காலத்தில்தான். ஆனால் பல படிகளைத் தாண்டித்தான் காதல் ஆழம் அடைகிறது. முழுமை பெறுகிறது. ஆரம்பத்தில் வரும் உணர்வு மட்டுமே காதலாகாது. வாழ்க்கை அளிக்கும் பல சோதனைகளின்போது காதலின் பிடியும் தளரக்கூடும். ஹார்மோன்களின் விளையாட்டுதான் என்றாலும், அதையும் புரிந்துகொள்ள முயன்றால் பல சிக்கல்களிலிருந்து நாமே விடுபட முடியும்.

உணர்வுபூர்வமாகக் காதலிக்கும்போது நிலைமை வேறு. கொஞ்சக் காலம் கழித்து உடல், மன ஆரவாரங்கள் அடங்கும்போது நாம் உணர்வது வேறு. அதையும் நாமே புரிந்துகொண்டால் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கலாம்.

இரட்டையர்கள்

தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுத்து, ஒன்றுகூடி, சந்ததியை விருத்தி செய்வதற்கான முதல் படி ஆண்-பெண்ணுக்கு இடையே வரும் ரொமாண்டிக் காதல். காமம் இல்லாமல் காதல் இல்லை. காதல் இல்லாமல் காமமும் இல்லை. இவை இரண்டும் வேறு வேறு என்பவர்கள்கூட, “இவை இரண்டும் இணைந்திருத்தல் நலம்; அதுவே இயற்கை” என்றுதான் சொல்லி முடிக்கின்றனர். காதலின்றி வாழ்வது கடினம். நம்மை இன்னொருவரிடத்தில் தேடுவதே காதல். நம்மை நாமே புரிந்துகொள்ளும் ஒரு ஆத்ம விசாரணையே காதல். அது நம்மைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். அளவற்ற நேர்மறை மாற்றங்களை நம்முள் கொண்டுவருவது காதல். இன்னொன்றோடு சேர்ந்தால்தான் முழுமையடையும் என்பதற்காகவே இரண்டு பேரைப் படைத்தது இயற்கை.

காதல் ஒருவித தவம்தான். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் பலனையும் இன்பத்தையும் எதிர்பார்ப்பது மனித இயல்பு. வெறுமனே காதலியுங்கள், குழந்தை பெறுங்கள் என்று சொல்லிவிட்டால் நமக்குப் போரடித்துவிடும். அதனால் காமம் என்ற மின்சாரத்தைப் பாய்ச்சி, காதலுடன் அதைக் குழைத்துக் கொடுத்து நம்மைப் போதைகொண்டு இயங்கச் சொல்லியிருக்கலாம் இயற்கை. ஆனால், தற்போது காமத்துக்கான நாகரிக நுழைவுவாயிலாக மட்டுமே காதல் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காதல் சற்றுப் பாதை மாற்றி இயக்கப்படுகிறது. அதனால் காதல் அதன் மாண்பை, மரியாதையை, சக்தியை இழக்க நேரிடுகிறது. அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது அது தவறான பலன்களையே தருகிறது. எனவே, இளைஞர்கள் தங்கள் காதல் பாதையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.

இதற்குப் பெயர்தான் காதலா?

விளையாட்டாகக் காதலிக்க ஆரம்பிக்கலாம். பொய் சொல்லிக் காதலிக்கலாம். உடல் தேவைக்கான கருவியாகக் காதலைப் பயன்படுத்தி, பின்னர் பிரிந்துவிடும் முடிவில்கூடச் சிலர் காதலிக்கலாம். பணத்துக்காக, தன் இணையர் செய்யும் செலவுக்காக, வறட்டு கவுரவத்துக்காக, போலியான சமூக அங்கீகாரத்துக்காகக்கூடக் காதலிக்கலாம். ஆனால் எல்லாமே காதல் என்ற பெயருடன்தானே உலா வருகின்றன? காதலில் வென்றால் சரி. பிரிந்தால்? அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேறுபடுகிறது. தற்கொலை செய்பவர்கள் ஒரு புறம். ஆளையே கொலை செய்பவர்கள் ஒரு புறம். ‘அடப் போய்யா’ என்று சொல்லிவிட்டு, அடுத்த வாரத்திலேயே அடுத்த ஆளுக்கு மாறுபவர்கள் இன்னொருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவரவர் விருப்பம்.

காதலைக் காதலாகச் செய்தால், அதன் வழியில் அது நம்மைக் கொண்டு செல்லும். அது வெற்றியின் வழியாகத்தான் நிச்சயம் இருக்கும். வார்த்தையில் மட்டும் காதலை வைத்துக்கொண்டு, உடல் வேட்கைக்கான தீர்வாக மட்டுமே காதலைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? இப்போது சமூகத்தில் நாம் பார்க்கும் எல்லாமும் நடக்கும். காதல் தோல்வி, கவுரவக் கொலைகள், கூடா நட்பு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை, படிப்பும் தொழிலும் பாதிக்கப்படுதல், மனநோய்கள் என்று எதிர்மறையான செயல்களே நடக்கும்.

முடிவில்லா பயணம்

‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்றுதான் மகாகவியும் சொல்கிறார். எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும்போது, “காதலிக்கக் கற்றுக்கொடுப்பதா? அசட்டுத்தனமாக இருக்கிறதே,” என்று கோபம் வரலாம். ஒரு கைபேசி வாங்கினால்கூடச் செயல்முறை விளக்கக் கையேடு இருக்கிறது. என்னதான் பரிச்சயப்பட்டதாக இருந்தாலும், சில சந்தேகங்களுக்கு நமக்கு அந்தக் கையேடு தேவைப்படுகிறது. காதலிக்கும் முடிவை வேகமாக எடுத்தாலும் கொஞ்சம் விவேகமாக அதைச் செயல்படுத்த வேண்டும். காலங்கள் மாற மாற காதலுக்கான வழிமுறைகள் மாறுகின்றன. ஆனால், காதலுக்கான இலக்கணம் மாறுவதில்லை. அப்படிக் காதலின் இலக்கணம் தவறாக மாற்றி எழுதப்படும்போதுதான், வாழ்க்கையென்னும் இலக்கியமே தவறாகிப் போய்விடுகிறது.

கல்வியைப் போலக் காதலுக்கும் கரையில்லை. அனைத்தையும் புரிந்துகொண்டுதான் காதலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதற்குள் நம் வாழ்நாளில் பாதி கடந்து போய்விடும். இயல்பாக, இயற்கையாக முகிழ்ந்த காதலை, பிறந்த குழந்தைக்குச் சமமாகப் பாவிக்க வேண்டும். அதைப் பாராட்டி, சீராட்டித் தொட்டிலில் தாலாட்டி வளர்த்துப் பெரியவராக்குவதைப் போலக் காதலுடன் பயணப்படுங்கள். அதன் அத்தனை வளர்ச்சியையும் அணுஅணுவாக அனுபவியுங்கள்.

குழந்தை அழும்; அதற்கு உடல்நிலை சீர்கெடும்; சில நேரம் எரிச்சலூட்டும்; படிக்காதபோது கவலையும், பட்டம் வாங்கி வரும்போது பெருமையும் தரும். குழந்தையால் சுகப்படும்போது தூக்கி கொஞ்சும் நாம், சோகம் தரும்போது அதை வேண்டாம் என்று புறந்தள்ளி விடுவதில்லையே? உங்கள் காதல் பயணமும் இப்படித்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடல் அலைகளும் ஓயப் போவதில்லை. காதலுக்கே உரிய சிரமங்களும் ஓயப் போவதில்லை. ஆனால், பற்றிய கையை நழுவ விடாமல் நீந்திக் கடக்க முயற்சிப்பவர்களே, உண்மையான காதலர்கள்.

எல்லாச் சாலைகளும் ஓரிடத்தில் முடியத்தான் போகின்றன. காதல் வழிச்சாலை இங்கே முடிகிறது. உடன் பயணித்த அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

SCROLL FOR NEXT