இளமை புதுமை

ஆப்பிளின் 40 ஆண்டு!

செய்திப்பிரிவு

முதல் ஆப்பிள் கணினி வெளியானது, ஸ்டீவ் ஜோப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை விட்டுச் சென்றது, பின்பு திரும்பி வந்தது, ஐமேக்கின் வெளியீடு, மேக்புக் ஏர், ஐபாட், ஐபோன் வெளியீடு என்று வளமான ஒரு வரலாற்றைக் கொண்டது ஆப்பிள். அதன் 40 ஆண்டுகள் வரலாறு ஒளிப்படங்கள் வழியே இங்கே…

# 1976 இதுதான் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆப்பிள் கணினி, இதற்கு ஆப்பிள்-I என்று பெயர். இதிலிருந்துதான் ஆப்பிள் நிறுவனத்தின் பயணம் தொடங்குகிறது.

இதை வடிவமைத்து உருவாக்கியவர் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியக். வோஸ்னியக்கின் நண்பர் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தக் கணினியை எப்படி விற்பது என்று யோசித்ததன் விளைவாக ஆப்பிள் நிறுவனம் பிறந்தது.

# 1984 ‘எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய’ (portable) கணினி என்று 1984-ல் பெயர்வாங்கிய கணினி இது. இதன் பெயர் ஆப்பிள் IIc. இதற்கு மின்கலம் ஏதும் கிடையாது. மின்சார இணைப்பு கொடுத்து இயக்க வேண்டிய கணினி அது.

# 1991 ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கணினி இது. இதன் பெயர் பவர்புக் 100 (வலது பக்கம் இருப்பது). ஆப்பிளுக்காக இதை வடிவமைத்து, உற்பத்தி செய்தது சோனி நிறுவனம். அப்போது அதன் விலை 2,500 அமெரிக்க டாலர்கள்.

அளவை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்காக இடது பக்கம் 13 அங்குல மேக்புக் ப்ரோ மடிக்கணினி கூடவே வைக்கப்பட்டிருக்கிறது.

# 1998 ஐபோனின் வருகைக்கு முன்பு ஐமேக் கணினிதான் ஆப்பிள் நிறுவனத்தை எங்கெங்கும் பிரபலப்படுத்தியது. ஜோனி ஐவும் ஸ்டீவ் ஜாப்ஸும் சேர்ந்து உருவாக்கிய படைப்பு இது. இணைய தொடர்புக்கான 56கே.பி. மோடத்துடன் கூடிய கணினி இது.

# 2001 ஆப்பிள் நிறுவனத்தின் முகத்தையே மாற்றியமைத்த தயாரிப்பான ஐபாட் இந்த ஆண்டில்தான் பிறந்தது. 5ஜிபியையும் சிறிய எல்.சி.டி திரையையும் கொண்டிருந்த ஐபாட் ஒன்றும் புரட்சிகரமான தயாரிப்பு இல்லைதான்.

ஆனால், மிகவும் சிறியதாகவும் அதிக அளவில் சந்தைப்படுத்தப்பட்டதும், சந்தையில் முதலிடத்தில் இருந்ததுமான தயாரிப்பு இது.

# 2007 ஐபாடின் வெற்றிக்குப் பிறகு வந்த ஐபோன் ஆப்பிளைப் புது யுகம் நோக்கித் தள்ளியது. 4ஜிபி நினைவகம், 3.5 அங்குல தொடுதிரை, 620எம்.எச்.இசட் சாம்சங் புராசசர் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். ஐஃபோனை உருவாக்குவதற்கு 2.5 ஆண்டுகள் ஆயின. இணையத்துக்கும் கைபேசிக்கும் முடிச்சுப் போட்ட தற்போதைய யுகத்தின் கைபேசி இது.

# 2008 ஆப்பிளின் லேப்டாப்புகளில் பல ஆண்டுகள் கழித்துச் செய்யப்பட்ட பெரிய மாற்றம், ‘மேக்புக் ஏர்’. முதல் ‘மேக்புக் ஏர்’ லேப்டாப்பில் மெதுவான, சிறிய ஹார்ட் டிரைவ், மெதுவான புராசசர், சற்றே குறைந்த ஆயுளைக் கொண்ட பேட்டரி போன்ற பாதகமான அம்சங்கள் இருந்தாலும் மெல்லிய, எடை குறைந்த மடிக்கணினிகளின் யுகத்துக்கு இதுதான் முன்னுரை எழுதியது.

# 2015 ஐபேடுக்குப் பிறகும், ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்துக்குப் பிறகும் ஆப்பிள் வெளியிட்ட புதிய தயாரிப்பு ஆப்பிள் கடிகாரம். சாம்சங், எல்.ஜி, சோனி போன்ற போட்டியாளர்களை முந்திக்கொண்டு சந்தையில் பிரபலமான திறன்கடிகாரமாக இது விளங்குகிறது.

# 2006பவர்பிசி புராசசர் களைத் தூக்கியெறிந்து விட்டு, இன்னும் வேகமாகச் செயல்படக்கூடியதும், அதிகத் திறன் வாய்ந்ததுமான x86 சிப்புகளை இண்டெல் நிறுவனத்திடமிருந்து ஆப்பிள் பெற்றுக் கொண்டு தனது கணினிகளில் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த ஆண்டிலிருந்துதான். ஐபுக், பவர்புக், பவர் மேக்கின் காலமெல்லாம் முடிந்து மேக்புக், மேக்புக் ப்ரோ, மேக் ப்ரோ போன்றவற்றின் யுகம் பிறந்தது. ஆப்பிள் கணினிகளுக்கு இன்னும் அடிப்படையாக இருப்பது இவைதான்.

©தி கார்டியன்- தமிழில்: ஆசை

SCROLL FOR NEXT