தண்டனை என்பது தவற்றை உணர்ந்து திருந்துவதற்காகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகவே இருந்துவந்துள்ளது. ஜனநாயக ஆட்சி நடைமுறைக்கு வந்த பிறகும்கூட இது மாறவில்லை என்றே தோன்றுகிறது. இன்று ‘பொதுமனசாட்சிக்காக’ ஜனநாயகத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
மரண தண்டனையால் குற்றங்களை ஒழித்துவிட முடியாது என்பது காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமான கதை ஒன்று உள்ளது. பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்ன கதை. இங்கிலாந்து நாட்டுப் புறக் கதை எனவும் சொல்லப்படுகிறது. அது ஆறாம் மன்னன் ஜேம்ஸின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது நாட்டில் பிக்பாக்கெட் திருட்டுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. நாளும் அரச சபைக்குப் புகார்கள் வந்தன. செல்வந்தர்கள்தாம் அதில் பாதிக்கப்பட்டவர்கள். பணம் படைத்தவர்களின் துயரங்களைத் துடைப்பது ஒரு அரசின் தலையாயக் கடமை அல்லவா?
ஏன் குற்றங்கள் நடக்கின்றன? குற்றங்களுக்கான மூலகாரணம் சமத்துவமின்மைதான் என்பதை எல்லாம் பகுத்தறிய அந்த மன்னனுக்கு அவகாசம் இல்லை. பிக்பாக்கெட் திருட்டுகளைத் தடுக்க ஒரே வழி, அவர்களைத் தூக்கிலிடுவதுதான் என்று எண்ணினான். பிக்பாக்கெட் கொள்ளையர்களை மக்கள் கண்முன்னே பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் அதைப் பார்த்து மற்றவர்களும் திருந்துவார்கள் எனவும் அவனுக்கு யோசனை தோன்றியது. பேருக்கு தன் சபையில் ஆலோசனை கேட்டு முடிவும் எடுத்துவிட்டான். அதைக் காவலர்கள் ஊர் முழுக்க தண்டோரா போட்டுவிட்டார்கள். காவலர்கள் பிக்பாக்கெட் திருடர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். மக்கள் கூடும் ஒரு நெருக்கடியான தெருவில் ரோந்துபோன காவலன், ஒரு பிக்பாக்கெட் திருடனை கையும் களவுமாகப் பிடித்துவிட்டான். உடனே அவன் கைதுசெய்யப்பட்டான். அரசனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மன்னனும் குற்றம் தடுக்கப்பட வேண்டுமென்றால் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதுதான் வழி என தூக்குக்கு ஆணை பிறப்பித்தான். "கைதி பொது
இடத்திற்கு வரவழைக்கப்பட்டான். அங்கு அமைக்கப்பட்டிருந்த தூக்கு மேடையில் மக்கள் அனைவரும் காணத் தூக்கிலிடப்பட்டான். அதைச் சுற்றியிருந்த மக்கள் பதற்றத்துடன் கண்டனர். அவர்கள் கண்கள் பீதியில் உறைந்துபோனது. மக்கள் முகங்களின் கண்ட பயத்தைப் பார்த்த காவலர்கள், “இனி ஒருத்தனும் திருட மாட்டான்” என மன்னனுக்குத் தகவல் தெரிவித்தார்கள். குற்றத்தைத் தடுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்ததற்கான மன்னன் தன்னையே மெச்சிக் கொண்டிருந்தான். அப்போது உள்ளே நுழைந்த இன்னொரு காவலன் சொன்னான்: “கைதியைத் தூக்கிலிட்டபோது கூடியிருந்த மக்கள்திரளில் 10ன் பேரின் பண முடிச்சுகள் களவாடப்பட்டுள்ளன”.