இளமை புதுமை

வயலினில் கசிந்த ஆசை முகம்!

வா.ரவிக்குமார்

ஐக்கிய நாடுகளின் கிளாஸ்டன்பரி, அமெரிக்காவின் கென்னடி சென்டர் ஃபார் பர்பாமிங் ஆர்ட்ஸ், ஸ்பெயினின் வுமேட், பெர்த்தின் ஒன் மூவ்மென்ட் போன்ற உலகின் முக்கிய இசை சார்ந்த நிகழ்வுகளில் தன்னுடைய இசைப் பங்களிப்பைத் தந்திருப்பவர் வயலின் கலைஞர் கார்த்திக். இவர் தன்னுடைய `கார்த்திக் அய்யர் லைவ்’ குழுவின் சார்பாகச் சமீபத்தில் அமெரிக்காவில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார். கார்த்திக் அய்யர் `இண்டோ சோல்’ என்னும் தலைப்பில் மேக்ஸ்முல்லர் பவனில் ஓர் இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார். `கொட்டித் தீர்க்கப் போகிறேன்’ என்று திரளாக மேகக் கூட்டம் மிரட்ட, அரங்கிற்குள் கொட்டித் தீர்த்தது இசை மழை!

பன்முக இண்டோ சோல்

மேற்கத்திய இசை, ஜாஸ், ப்ளூ, கர்னாடக இசை என ஒவ்வொரு இசைக்கும் தனித் தனியே பல சிறப்புகள் உள்ளன. பல இசை வடிவங்களின் வழியாகவும் இந்திய இசையை ஆத்மார்த்தமாகப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியே இண்டோ சோல் என்கிறார் கார்த்திக்.

கலப்பில் விளைந்த உன்னதம்

விக்ரம் விவேகானந்தன் (கிடார்), கான்ரேட் சிம்மன்ஸ் (பாஸ்), ராம்குமார் கனகராஜன் (ஸ்னார், கஃவுன்), சுமேஷ் நாராயணன் (மிருதங்கம் மற்று தாள வாத்தியங்கள்) ஆகியோருடன் கார்த்திக்குக்கு உண்டான ஒன்றுபட்ட மனநிலையின் இசை விளைவாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. மனங்களைச் சங்கமிக்கச் செய்யும் இசையே நல்ல இசையாக இருக்க முடியும் என்பதை உணர்த்தியது அன்றைய நிகழ்ச்சி.

ஏற்கெனவே கார்த்திக் அய்யர் லைவ் குழு இசையமைத்து வெளியிட்டிருக்கும் இண்டோ சோல் ஆல்பத்திலிருந்து சில பாடல்களையும் அவர்கள் பாடி யூடியூபில் பிரபலமாகியிருக்கும் சில பாடல்களையும் பாரதியாரின் சில பாடல்களையும் அன்றைய நிகழ்ச்சியில் வாசித்தனர். காதல், மென்சோகம், உற்சாகம், துள்ளல் எனப் பல்வேறு உணர்ச்சிகளை அரங்கில் அமர்ந்திருந்தவர்களிடையே அந்தப் பாடல்கள் கொண்டுவந்தன.

எல்லைகளைக் கடந்த இசை

இந்த ஆல்பத்தின் முதல் டிராக் Boundless. அன்றைய நிகழ்ச்சியிலும் அந்த டிராக்கை வாசித்தார்கள். எல்லைகள் இல்லாதது இசை என்பதை உணர்த்தும் வகையில் அந்தப் பாடல் கம்பீரமாக ஒலித்தது. At the theatre என்னும் டிராக்கில் மட்டும் தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரு பாடலை எழுதிப் பாடினார் கார்த்திக். ஒரு நாடக அரங்குக்குள் பிரவேசிக்கும் அனுபவத்தை நமக்கு அளித்தது இந்தப் பாடல்.

உலகமே நாடக மேடை; நாம் அனைவருமே அதில் பாத்திரங்கள் என்னும் கருத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்தப் பாடலில் இழையோடும் மென் சோகம், மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது.

சமீபத்தில் குழுவினரோடு அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது பெல்டன் அவென்யூ என்னுமிடத்தில் தங்கியிருக்கின்றனர். அந்த இடத்தின் பெயரிலேயே ஒரு இசைக் கோவையை அளித்தனர்.

நளினகாந்தி ராகத்தில் அமைந்த தியாகராஜரின் `மனவியலா கிஞ்சரா’ என்னும் கிருதியை In My Mind என்னும் தலைப்பில் வாசித்தது இதம். `வாதாபி கணபதிம்’ பாடலையும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் `வெள்ளைப்பூக்கள்’ (இரண்டுமே ஹம்ஸத்வனி ராகம்) பாடலையும் குழைத்து, ஒரு சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றினார்கள். பாரதியாரின் `ஆசை முகம் மறந்து போச்சே…’ பாடலையும் உணர்ச்சிபூர்வமாகப் பாடி கார்த்திக் அசத்தினார்.

நவீன ஆர்.டி.பி.

தியாகராஜரின் `நகுமோமு’ கீர்த்தனையை ஒரு கர்னாடக இசைக் கச்சேரியில் செய்வது போல் ராகம்-தானம்-பல்லவி அமைப்பில் தனி ஆவர்த்தனங்களோடு வழங்கினர். எலக்ட்ரானிக் வயலினுடன் மிருதங்கம், கிடார், பாஸ் கிடார், கஃவூன், சினார் போன்ற வாத்தியங்களின் ஒலிச் சங்கமம் புதிய அனுபவத்தை அளித்தது.

நிகழ்ச்சியின் இறுதியாக ரகுவம்ச சுதா வாசித்தார்கள். இந்தப் பாடல் அமைந்த (கதனகுதூகலம்) ராகத்தின் பெயரிலேயே குதூகலம் இருப்ப தாலோ என்னவோ, அரங்கில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

SCROLL FOR NEXT