பார்ப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற மனத்தடை எதுவும் இல்லாமல் மேடையில் ஆடி, பாடி, குதித்து, நகைச்சுவை சரவெடியாக நடித்து அசத்தும் மாயாவுக்குக் கிடைக்கும் கைதட்டலிலும் சிரிப்பொலியிலும் அரங்கம் அதிர்கிறது. மேடை நாடக நடிகை மட்டுமல்லாமல் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு வீராங்கனை, பாடகி, கிளவுன் டாக்டர் என மாயா செய்யும் மாயாஜாலங்கள் ஏராளம். ஏகப்பட்ட திறமைகள் வாய்ந்த துறுதுறு சுட்டி இளம் பெண் என்பதையும் தாண்டி அவரைத் தனித்துக் காட்டுவது அங்க அசைவுகள் மூலமாக அவர் வெளிப்படுத்தும் ஹாஸ்யம்.
‘நடிக்கத் தெரியலனு புரிஞ்சது’
தமிழ் யூடியூப் சேனல்களின் குறும்படங்கள், வீடியோ பாடல்கள், பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சி புரொமோக்கள் என நடித்துவந்த இவர், தற்போது ஜோதிகாவுடன் ‘மகளிர் மட்டும்’, ரஜினிகாந்த்துடன் ‘2.0’ என வெள்ளித்திரையிலும் எகிறி குதித்திருக்கிறார். எப்படி திடீரென இந்த வாய்ப்பு கிடைத்தது எனக் கேட்டால், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலமாக 2015-லேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் மாயா.
“மதுரையில பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு பெங்களூருல பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். படிச்சு முடிச்ச பிறகுதான் புரிஞ்சது அது எனக்கான துறை இல்லன்னு. அந்தக் காலகட்டத்துல என்னுடைய அக்காவைத் தவிர வேற யாரையுமே எனக்குச் சென்னையில தெரியாது. அக்கா மூலமாக எதேச்சையாக ஜேம்ஸ் வசந்தன் படத்துல பாடுற, நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. ஆனால், அந்தப் படம் முடிச்ச பிறகு திரும்பவும் என்ன செய்றதுன்னு புரியாமத் தடுமாறினேன். வீட்டுப் பக்கத்துல ‘லிட்டில் தியேட்டர்’ நாடகக் குழுவின் வொர்க்ஷாப் நடக்குதுன்னு தெரிஞ்சதும் ஏதோ ஒரு உத்வேகத்துல கலந்துகிட்டேன். ஒரு படத்துல நடிச்ச எனக்கு நடிப்பே தெரியலைங்குறது அப்பத்தான் தெளிவா புரிஞ்சது. அந்த நாடகப் பயிற்சிதான் நான் என்னவாக ஆகணுங்குறதையும் எனக்குக் காட்டுச்சு” என்கிறார் மாயா.
நடிக்கத் தெரியவில்லை என்றாலும் ஆறு வயதிலிருந்து மாயா கற்றுக்கொண்ட ஜிம்னாஸ்டிக்ஸ் நாடகப் பயிலரங்கத்தில் கைகொடுத்தது. ரப்பர்போல உடலை முன்னும் பின்னும் வளைத்து நெகிழ்வாகத் தன்னைத் தானே கையாளும் திறனை அவர் கைவரப் பெற்றிருந்தார். இதைக் கவனித்த ‘லிட்டில் தியேட்டர்’ நாடகக் குழுவின் இயக்குநர் கிருஷ்ணகுமார் எடுத்த எடுப்பில் சர்வதேச மேடை நாடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பை மாயாவுக்குத் தந்தார். கனவுலகில் சிறகடித்துப் பறக்க ஆசைப்படும் சிறு பெண் ஒருத்தியைப் பற்றிய நாடகம் அது. ‘தி கராஜ் கேங்’ என்ற அந்த நாடகத்தில் நடித்த பின்புதான் நடிப்பின் அர்த்தம் மட்டுமில்லாமல், வாழ்க்கையின் பல்வேறு அர்த்தங்களையும் புரிந்துகொள்ள ஆரம்பித்ததாகக் கூறுகிறார் மாயா.
சிரிப்புதான் சிறந்த மருந்து
குறிப்பாக ‘கிளவுன் டாக்டர்’ ஆக மாறி நோய்வாய்ப்பட்டவர்கள் உட்படப் பலரைச் சிரிக்கவைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார். எழும்பூர் அரசு மருத்துவமனை, சில தனியார் மருத்துவமனைகளிலும் கோமாளிபோல வேடமிட்டு அனைவரையும் சிரிக்கவைக்கும் உரிமத்தை இவர்களுடைய குழு பெற்றுள்ளது. “சிரிப்புதான் சிறந்த மருந்து என்று சொல்வார்கள்.
உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்கான இடத்தில் எப்போதுமே சோகமும் வேதனையும் சூழ்ந்திருந்தால் எப்படி நோயாளிகள் தேறிவருவார்கள்? சொல்லப்போனால் நோயாளிகள் மட்டுமல்ல; மருத்துவமனையின் காப்பாளர் முதல் துப்புரவுத் தொழிலாளி, மருத்துவர்வரை அனைவரும் நல்ல மனநிலையில் இருந்தால்தானே ஆரோக்கியமான சூழல் சாத்தியம்! அதனால்தான் நாங்கள் வேடமிட்டு அனைவரையும் சிரிக்கவைக்க முயல்கிறோம். எங்களைப் பார்த்து நடிகர்கள் பலர் கிளவுன் டாக்டர் ஆக ஆசைப்படுறாங்க. ஆனால், கூடுதல் பொறுப்பும் நிதானமும் இதில் தேவை” என்கிறார்.
உடல் அசைவில் இத்தனை கேலியும் கிண்டலும் ததும்பும் பண்பு எப்போதுமே இவரிடம் இருந்ததா என்று கேட்டால், “இன்னைக்கு எல்லோருமே கலாய்க்கிறாங்க. எல்லாவற்றையும் கேலி பேசுற வழக்கம் எல்லாரிடத்திலும் இருக்கு. அதையும் தாண்டி உடல் அசைவு மூலமாக நகைச்சுவை செய்வதுதான் என்னுடைய பலம் என்பதை நாடக அனுபவம்தான் கற்றுக்கொடுத்தது. இதுவரை ஏழு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிச்சிருக்கேன். தொடர்ந்து என்னை மெருகேற்றிக்கொண்டு அடுத்த மனோரமா ஆச்சியாகணும்” என்ற கனவோடு துள்ளிக்குதிக்கிறார் மாயா.