இளமை புதுமை

ஒரு டீன்ஏஜ் பெண்ணின் கதை

யாழினி

பதினாறு வயது இளம் எழுத்தாளர் இஷா நாகப்பனின் ‘ஜஸ்ட் அனதர் டீன்ஏஜ் கேர்ள்’ என்ற புத்தகம் சமீபத்தில் சென்னை ‘அமிதீஸ்ட் கஃபே’யில் வெளியிடப்பட்டது. அவருடைய முதல் நாவலான ‘அலிஷா - தி பிகினிங்’ 2013-ல் வெளியிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ‘ஜஸ்ட் அனதர் டீன்ஏஜ் கேர்ள்’ என்ற இந்தப் புத்தகம் அலிஷா புத்தகத் தொடரின் இரண்டாவது புத்தகமாகும்.

பதின்மூன்று வயதில் என்ற தன் முதல் நாவலை எழுதிய இஷா, மூன்று ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது தன் இரண்டாவது நாவலை எழுதியிருக்கிறார். “ஒரு ‘டெட் டாக்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் அடோரா ஸ்விதக் தான் ஏழு வயதில் எழுதிய ‘ஃபிளையிங் ஃபிங்கர்ஸ்’ (Flying Fingers) புத்தகத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்நிகழ்ச்சியில் அடோரா பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் எனக்கு எழுதுவதற்கு ஊக்கமளித்தன. அப்படித்தான், பன்னிரண்டு வயதில் நான் எழுதத் தொடங்கினேன்” என்று சொல்கிறார் இஷா.

கல்லூரிக்குச் செல்லத் தயாராகவிருக்கும் அலிஷா தன்னுடைய பள்ளி வாழ்க்கை நினைவுகளை அசைபோடுவதாக எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். ஒரு ‘டீன்ஏஜ்’ பெண்ணாகப் பள்ளியில் சக மாணவிகளிடமிருந்து சந்திக்கும் ‘சகாக்கள் நெருக்கடி'யை (பியர் பிரஷர்) அலிஷா எப்படிச் சமாளிக்கிறாள் என்பதையும் இந்நாவல் விளக்குகிறது. இன்றைய ‘டீன் ஏஜ்’ பெண்களின் நட்பு வட்டம் எப்படிச் சுழல்கிறது என்பதை இஷா விளக்க முயன்றிருக்கிறார்.

இந்த அலிஷா கதாபாத்திரம் இஷாவை வைத்து உருவாக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, “நான் அடையாளப்படுத்திக்கொள்ளும் விஷயங்கள் அலிஷா கதாபாத்திரத்தில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். ஏனென்றால், அப்போதுதான் என்னைப் போன்றவர்கள் அலிஷாவுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். என்னைச் சுற்றியிருந்த ‘டீன் ஏஜ்’ பெண்களின் கலவையாகத்தான் அலிஷாவை உருவாக்கினேன். அதனால், அலிஷா என்னிடம் இருக்கும் நிறைய விஷயங்களைப் பிரதிபலிப்பாள். ஆனால், முழுமையாக நான்தான் அலிஷா என்று சொல்ல முடியாது” என்று சொல்கிறார் அவர்.

இந்தியாவில் ‘டீன் ஏஜ் ஃபிக்‌ஷன்’ எழுதும் இளம் எழுத்தாளர்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று சொல்லும் இஷா, “நான் பன்னிரண்டு வயதில் எழுதத் தொடங்கியபோது, எனக்கு நாவல் எழுதுவதற்கு இன்னும் நிறையக் காலமிருக்கிறது என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், என்னுடைய பெற்றோர் நான் எழுதுவதில் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அதனால்தான் என் முதல் புத்தகம் வெளியானது. இப்போது என் இரண்டாவது புத்தகமும் அவர்களுடைய முயற்சியால்தான் வெளியாகியிருக்கிறது. ஆனால், எனக்குக் கிடைத்த ஊக்கமும் ஆதரவும் எழுதுவதில் ஆர்வமிருக்கும் ‘டீன் ஏஜ்’ எழுத்தாளர்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் நம்பிக்கை இழந்துவிடாமல் தொடர்ந்து எழுதுவது இந்திய ‘டீன்ஏஜ் ஃபிக்‌ஷன்’ உலகில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்” என்கிறார் இஷா.

பள்ளிப் படிப்பை முடித்த வுடன், அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பைத் தொடரப் போவதாகச் சொல்லும் இஷா, தொடர்ந்து எழுதுவதையும் தன் லட்சியமாகச் சொல்கிறார்.

SCROLL FOR NEXT