மாரியப்பன். சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இளைஞர், இன்று தேசிய அளவிலான வீல் சேர் டென்னிஸ் வீரர்! தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார். மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் சுழன்றபடி ஆடும் டென்னிஸ் விளையாட்டு, தற்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. அதில் குறிப்பிடத்தகுந்த சாதனை கள் செய்திருக்கும் மாரியப்பனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
“என்னோட மூணு வயசுல போலியோவால பாதிக்கப்பட்டேன். விளையாட்டுங்கிறது எனக்கு கனவாகிடுமோன்னு பயந்துட்டிருந்தேன். என்னமோ தெரியல, ஒன்பது வயசுல எனக்கு டென்னிஸ் மீது ரொம்ப ஆர்வம் வந்துச்சு. அப்பயிலிருந்து, சில நல்ல உள்ளங்களால டென்னிஸ் கத்துக்கிட்டேன். ஆனா எங்கயும் போய் போட்டியில கலந்துக்கிட்டது இல்லை.
அப்படியே வாழ்க்கை நகர்ந்துக்கிட்டிருந்தது. அப்போ 2005-ம் வருஷம் சர்வதேச டென்னிஸ் கழகம் சென்னையில இருக்கிற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) மைதானத்தில் வீல் சேர் டென்னிஸை அறிமுகப்படுத்தினாங்க. அப்ப அங்க நான் சேர்ந்து, நல்ல பயிற்சி எடுத்துக்கிட்டேன்.
மாற்றுத் திறனாளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு வகையான டென்னிஸ் விளையாட்டுத்தான் வீல் சேர் டென்னிஸ். டென்னிஸுக்கும் வீல் சேர் டென்னிஸுக்கும் பெரிய வித்தியாசம்னு எதுவுமில்லை. இங்க டென்னிஸ் பந்து இரண்டு தடவை பவுன்ஸ் ஆகலாம். மத்தபடி சாதா டென்னிஸுக்கு உள்ள அதே ரூல்ஸ் இதுக்கும் பொருந்தும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக தேசிய அளவில நடந்த பல போட்டிகள்ல கலந்துகிட்டேன். இரட்டையர் பிரிவு போட்டியில் நிறைய சாதிச்சேன். இதில் கிடைச்ச அனுபவங்களை வெச்சு, சர்வதேச போட்டிகள்ல விளையாட முயற்சி எடுத்துக்கிட்டேன். என்னோட விளையாட்டைப் பார்த்துட்டு, பாராலிம்பிக் மற்றும் பாரா ஆசிய விளையாட்டுக்களில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டேன்.
அப்படி 2006-ம் வருஷம் மலேசியாவில் நடந்த ஃபெஸ்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. அதான் என்னோட முதல் சர்வதேச போட்டி. அங்க கிடைச்ச அனுபவம், 2008-ம் வருஷம் மலேசிய ஓப்பனில் நான் வெண்கலப் பதக்கம் வெல்ல உதவுச்சு. அப்புறம் 2010-ம் வருஷம் லண்டனில் நடந்த பிரிட்டிஷ் ஓபன், சீனாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டுக்கள்னு பல போட்டிகள்ல விளையாடியிருக்கேன்” என்று சொல்லிப் புன்னகைக்கும் இவர், 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய வீல் சேர் டென்னிஸில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
“3 லட்ச ரூபாய் மதிப்புள்ள அதிநவீன வீல் சேரை யாராவது எனக்கு அளித்து உதவினால், என்னால் மேலும் நிறைய சாதிக்க முடியும்” என்று கூறும் மாரியப்பன், சர்வதேச அளவிலான வீல் சேர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 217-வது இடத்திலிருக்கிறார்.
மார்டினா நவரத்திலோவா என்னும் டென்னிஸ் நட்சத்திரத்தை மனதில்கொண்டு தன் குழந்தைக்கும் மார்டினா என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
பல நாடுகள் சென்றாலும் பல கடல்களைக் கடந்தாலும் தமிழன் என்று சொல்ல பெருமிதம் கொள்ளும் இவர், ‘பறக்க முடியாதபோது ஓடிடு, ஓட முடியாதபோது நடந்திடு, நடக்க இயலாதபோது தவிழ்ந்திடு... என்னவாக இருப்பினும் முன்னேறிக் கொண்டே இருக்கவேண்டும்’ என்னும் மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியை இவரது வாழ்க்கைத் தத்துவமாக வைத்திருக்கிறார்.
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னொரு தங்கப் பதக்கம் ரெடி!