இந்தியாவில் ஹுண்டாய் ஐ20 காருக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, அந்நிறுவனத்திற்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது. தனது உற்சாகத்தை மற்றொரு காராக மாற்றும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கிவிட்டது. ஹுண்டாய் ஐ20 காரின் கிராஸ் ஓவர் மாடலை இந்தியாவுக்காகவே அது பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. இந்த காரின் சோதனை ஓட்டத்தைக்கூட ஹுண்டாய் நிறுவனம் நடத்திவிட்டது. அநேகமாக அடுத்த ஆண்டில் தொடக்கத்தில் இந்த காரின் விற்பனை தொடங்கிவிடும் என்று தெரிகிறது.
எலைட் ஐ 20 காரின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த கார் ஹுண்டாய் நிறுவனத்தின் இந்தியாவுக்கான முதல் கிராஸ் ஓவர் மாடல் காராகும். கிராஸ் ஓவர் கார்கள் என்பவை முந்தைய மாடலின் அடிப்படையில் சில சிறப்பு அம்சங்களை கூடுதலாக இணைத்து உருவாக்கப்படுகின்றன. பிற ஹேட்ச்பேக் அடிப்படையிலான கிராஸ்ஓவர் கார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
காரின் பல அம்சங்கள் எலைட் ஐ20 மாடலை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதே போல் 1.2 லிட்டர் கப்பா2 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் இன்ஜின் ஆகிவற்றையே கொண்டிருக்கும். காரின் முன்புறத்தையும் பின்புறத்தையும் கலக்கலான அம்சங்களுடன் வசீகரமாக அமைந்துள்ளார்கள்.
ஒரு ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றம் இந்த காருக்கு உள்ளது. காரின் இண்டீரியரும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதன் விலை வழக்கமான ஹேட்ச்பேக் கார்களைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஹேட்ச்பேக் கார்களைவிட ரூ. 80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகமாக இதன் விலை இருக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.