இளமை புதுமை

ஒரு சித்திரம் சில சொற்கள்

செய்திப்பிரிவு

கல்லறை தோண்டும் போட்டி

தலைப்பைப் படித்ததும் எது எதற்குத்தான் போட்டி நடத்துவது என்ற விவஸ்தையே இல்லை என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் ஹங்கேரியில் நிலைமை அப்படியல்ல. அங்கே கல்லறை தோண்டும் தொழிலில் ஈடுபட இப்போது ஆட்கள் கிடைப்பது அரிதாகிவருகிறது. ஆகவே இளைஞர்கள் மத்தியில் இத்தொழிலுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காக தேசிய அளவிலான கல்லறை தோண்டும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இதற்கான முதல் சுற்று போன்ற போட்டி டெப்ரிசென் என்னும் நகரில் நடைபெற்றிருக்கிறது. இருவரை உறுப்பினராகக் கொண்ட 18 டீம்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டிருக்கின்றன. 2 அடி 7 அங்குல அகலமும், 6 அடி 6 அங்குல நீளமும், 5 அடி 3 அங்குல ஆழமும் கொண்ட குழியைத் தோண்ட வேண்டும். இதில் முதலிடம் பிடித்த ஜோடி அரை மணி நேரத்தில் குழியைத் தோண்டியிருக்கிறார்கள். இவர்கள் தேசிய அளவிலான போட்டியில் இடம்பெறத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

மணலுக்குக் கிடைத்த தங்கம்

ஒடிஷாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் (39). இவர் தனது மணல் சிற்பங்கள் மூலம் சமூகத்துக்குத் தேவையான விழிப்புணர்வை ஊட்டிவருகிறார்; இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துவருகிறார். இப்போது அவர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

பல்கேரியா நாட்டில் நடைபெற்ற உலக மணல் சிற்பக் கலைஞர்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். விளையாட்டுப் போட்டியில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் ஆபத்தை உணர்த்தி, அது தொடர்பான விழிப்புணர்வை வளர்ப்பதற்காக அவர் உருவாக்கிய ‘ட்ரக்ஸ் கில்ஸ் ஸ்போர்ட்ஸ்’ என்னும் மணல் சிற்பத்துக்காக இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

செல்ஃபிக்கு ஒரு சிலை

ஸ்மார்ட்போன் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் மொபைல் போன் வைத்திருப்போரில் செல்ஃபி எடுக்காதவர்கள் என யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் செல்ஃபி எடுக்கத் தோன்றியது ஆனால் அதற்கு சிலை எடுக்க வேண்டுமென இங்கே யாருக்காவது தோன்றியதா? அமெரிக்கருக்கு அப்படியொரு எண்ணம் தோன்றி செல்ஃபிக்குச் சிலையும் வைத்துவிட்டார்கள். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள நகரம் சுகர் லேண்ட்.

இந்த நகரத்தின் டவுண் ஹாலின் முன்னே வைக்கப்பட்டிருக்கும் சிலை ஒன்று அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இரண்டு பெண்கள் தங்களை செல்ஃபி எடுத்துக்கொள்ளும் காட்சிதான் அங்கே சிலையாக வடிவம் பெற்றிருக்கிறது. சிலர் இந்தச் சிலை அமைத்ததை வரவேற்றிருக்கிறார்கள் சிலரது எரிச்சலையும் இந்தச் சிலை சம்பாதித்திருக்கிறது.

பேட்மிண்டன் விளையாடும் ரோபோ

மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ரோபோக்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. மனிதரின் பொழுதுபோக்கான விளையாட்டை மட்டும் விட்டுவைக்குமா என்ன? அவை விளையாடவும் தொடங்கிவிட்டன. சீனாவின் செங்டு நகரத்தின் பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று இப்படிப்பட்ட ரோபோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த ரோபோ மனிதருடன் அழகாக பேட்மிண்டன் விளையாடுகிறது. விளையாடத் தேவையான அத்தனை திறனையும் அந்த ரோபோவுக்கு வழங்கியிருக்கிறது நவீனத் தொழில்நுட்பம். ரோபோவும் மனிதரும் விளையாடும் பேட்மிண்டனைப் பார்ப்பதே ஒரு அழகு தான். அந்த வீடியோவைக் காண: >http://www.newsflare.com/video/74001/sport/robot-plays-badminton-with-student-in-china

SCROLL FOR NEXT