இளமை புதுமை

என்னாச்சு ‘கராத்தே கிட்..?

ரிஷி

‘உதயகீதம்' என்றொரு திரைப்படம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. 'இளமை புதுமை'யைப் படிக்கும் இளைஞர்கள் யாரும் அந்தப் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் அவர்கள் இளைஞர்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கோயிலில் உடைப்பதற்காகத் தேங்காய் வாங்கச் செல்வார். ஆனால் தேங்காய்க் கடைக்காரர் சொல்லும் விலை அவருக்குக் கட்டுப்படி ஆகாது. தேங்காய் வாங்க முடியாத எரிச்சலில் தேங்காயில் வெடிகுண்டு இருப்பதாக சும்மா ஒரு பொய்யைச் சொல்லிவிடுவார். அது ஊர் முழுக்கப் பரவிவிடும். ஊர் பயங்கர பரபரப்பாக இருப்பதைப் பார்த்து கவுண்டமணி ஒருவரிடம் என்ன ஏது என்று விசாரிக்கும்போது அவர், தேங்காயில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்ற ரகசியத்தை கவுண்டமணியிடமே சொல்வார். இதை நீங்கள் வரிக்கு வரி படிக்கும்போது, உங்களுக்குச் சிரிப்பு வர வாய்ப்பில்லை. மொக்கையாகத்தான் தோன்றும். ஆனால் இது ஒரு காமெடிக் காட்சி. இந்த காமெடியைப் பார்த்தால் நீங்கள் சிரித்துவிடலாம். காமெடி யூட்யூபில் கிடைக்கிறது, விரும்புகிறவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

'தேங்காயில் வெடிகுண்டு' என்பது ஒரு வதந்திதான். இப்படியான வதந்திகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சமே இல்லை. வதந்திக்கு எப்படிக் கைகால் முளைக்கிறது, எப்படிப் பரவுகிறது என்ற ரகசியத்தை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஓர் உண்மையை நம்பவைக்கத் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதிருக்கும், ஆனால் ஒரு வதந்தி சட்டென்று எல்லாப் பக்கங்களிலும் நீக்கமற நிறைந்துவிடுகிறது. அதுவும் பிரபலங்கள் குறித்த வதந்தி என்றால் கேட்கவே வேண்டாம். உடனே நம்பிவிடுவார்கள். ‘வாட்ஸ் அப்'பில் வந்துவிட்டால் போதும், நூறு பேர் கொண்ட குழு ஒன்றுக்கு அனுப்பிவிட்டுத்தான் ஆசுவாசமாவார்கள். பின்னர்தான் அந்தச் செய்தியையே படிக்கத் தொடங்குவார்கள். ஒரு சாதாரணத் திரைப்படம் வெளியாகி மூன்று நாளில் ஐந்நூறு கோடி ரூபாய் வசூலித்து மிகப் பெரிய வெற்றிப்படமாகிவிட்டது என்றால்கூட அப்படியே நம்பிவிடுகிறார்கள். அது உண்மைதானா, ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளையே எழுப்ப மாட்டார்கள். அது என்னவோ மனிதர்களின் பழக்கம் இப்படித்தான் இருக்கிறது. இது நம் நாட்டில்தான் என்றில்லை. உலகம் முழுவதும் இப்படித்தான் மனிதர்கள் இருக்கிறார்கள்.

இப்படியொரு வதந்தி பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான வில் ஸ்மித்தின் மகனும், ‘தி கராத்தே கிட்' படத்தின் மூலம் நன்கு அறிமுகமான நடிகருமான ஜேடன் ஸ்மித் தொடர்பாகக் கடந்த வாரத்தில் பரவியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போலப் பரவியது. உலகமெங்கிலும் அவருடைய ரசிகர்கள் அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இரவு பகல் பாராது இணையத்தையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஃபேஸ்புக்கையும் வாட்ஸ் அப்பையும் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பின்னர்தான் அந்தச் செய்தி நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து வரவில்லை என்பதும், அது ஒரு வதந்தி என்பதும் தெரிய வந்தது.

ஜேடன் ஸ்மித் பற்றிய‌ வதந்தி வருவது இது முதல் முறையல்ல. பல முறை இப்படியான வதந்திகள் அவரை மையமிட்டு எழுந்து அடங்கியிருக்கின்றன. சமீபத்தில் கூட அவருடைய கேர்ள் ஃப்ரண்டும் மாடலுமான‌ சாரா ஸ்னைடர், ஓர் ஒளிப்படக் கலைஞருடன் சேர்ந்துகொண்டு ஜேடனை ஏமாற்றிவிட்டதாகக் கிசுகிசு பரவியது. இந்தத் தகவல் குறித்து ஸ்மித் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்மித், சாரா உறவு எந்த ஓர் இடையூறுமின்றி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் இருவரும் கையோடு கைகோத்து இணைபிரியாத ஜோடி போல நியூயார்க் நகரில் ஷாப்பிங் செய்திருக்கிறார்கள். அதுவும் செய்தியாக வந்தது. அதையும் மாய்ந்து மாய்ந்து படிக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்னர் லில் பி என்னும் அமெரிக்கப் பாடகர் ஒருவருடன் ஸ்மித் தன்பாலின உறவு வைத்திருப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் செய்தி பரவியது. ஆனால் ஸ்மித் இன்னும் அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் பெண்களின் உடையை அணிந்துகொண்டு பாலின அடையாளத்துக்கு எதிராகத் தனது கருத்தைப் பதிவுசெய்திருந்தார். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான உடை என்பது பற்றிய தனது மாறுபாடான கருத்தைப் பதிவுசெய்ய அவர் தயங்கவில்லை. அப்போதும் அவர் பற்றிய சர்ச்சை எழுந்தது.

இந்த முறை ஸ்மித் இறந்துவிட்டதாக வதந்தி பரவியபோது, அவர் ‘நெட்ஃபிளிக்ஸ்' தொலைக்காட்சியில் வெளிவர இருக்கும் ‘தி கெட் டவுன்' என்ற தனது தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் தன் தந்தை வில் ஸ்மித்துடன் கலந்துகொண்டிருந்தார். வில் ஸ்மித்தும் தனது சமீபத்திய படமான ‘சூஸைடு ஸ்குவாட்'டை விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார். இந்த வேளையில்தான் சமூக வலைத்தளங்களில் ஸ்மித் தற்கொலை செய்துகொண்டதாக வதந்தி வெகு ஜோராகப் பரவிக்கொண்டிருந்தது.

இந்த வதந்தியை மிகவும் சாதாரணமான ஒன்றாக ஸ்மித்தால் எடுத்துகொள்ள முடியவில்லை என்கிறது அவருடைய நெருங்கிய‌ வட்டாரங்கள். ஆனாலும் இந்த வதந்தியால் அவருடைய சுறுசுறுப்பான அன்றாட நடவடிக்கையில் எந்தச் சுணக்கமும் ஏற்பட்டுவிடவில்லை. கடந்த ஜூலை 8 அன்று தனது 18-வது பிறந்ததினத்தைக் கொண்டாடியதற்குப் பின்னர் அவர் தனது ட்வீட் பக்கத்தில் எதுவும் பதிவிடவில்லை. இதனால்கூட வதந்தி தோன்றியிருக்கலாம். ஆனால் அவரோ தனது முதல் ஆல்பத்தை உருவாக்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மியூசிக் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துவிட்டதாம். அது அவரது முதல் சிங்கிள் வீடியோ காட்சியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஸ்மித்தை வதந்திகளும் சர்ச்சைகளும் நிழலைப் போலத் தொடர்ந்தபடியே இருக்கின்றன. ஆனால் பின்தொடரும் கரிய நிழலைப் பற்றிய கவலையற்று அவர் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டுவருகிறார் என்ற செய்தி நம்பிக்கை தரக்கூடியது. நமக்குத் தேவை நம்பிக்கைதானே?

SCROLL FOR NEXT