‘இப்போதெல்லாம் மாணவர்கள் நூலகம் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை, அப்படியே வந்தாலும், போட்டித் தேர்வு புத்தகங்களைத்தான் வாசிக்கிறார்கள்’. இதுபோல் எண்ணிக்கொண்டிருப்பவர்கள் கட்டாயம் வந்து பார்க்க வேண்டிய இடம் மதுரைக் கல்லூரி. இங்குள்ள பழமையான ஹார்வி நூலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் மாணவர்களின் வாசகர் வட்டக் கூட்டம் களைகட்டுகிறது.
ஒவ்வொரு புத்தகம் விரிக்கப்படும்போதும், புதிய உலகம் திறக்கிறது என்பார்கள். இங்கே, ஒரு புத்தகம் 40 உலகங்களைத் திறக்கின்றன. ஆம், ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தது 40 பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
நாம் சென்றிருந்த தினம் இரண்டாமாண்டு வேதியியல் மாணவர் பி.சுந்தரவேல், ரஷ்ய எழுத்தாளர் சேகவின் ‘மூன்று ஆண்டுகள்’ என்ற நாவலைத் திறனாய்வு செய்தார். அச்சில் வடிக்கப்பட்ட நாவலைக் காட்சியைப் போல கண் முன் நிறுத்திய அவர், “இதுவரையில் எந்த நாவலையும் நான் கடைசிவரை படித்ததில்லை. இதைத்தான் முழுமையாகப் படித்து முடித்தேன். காலச் சக்கரத்தில் ஏறியது போல், என்னை ரஷ்யாவின் நிலப் பிரபுக்கள் காலத்திற்கே கொண்டுசென்றுவிட்டது நாவல்” என்றார். பாக்கெட் நாவல்களைத் தொடாமல், முதல் பாய்ச்சலிலேயே சேகவைப் படித்திருக்கிறார் என்றால், வாசகர் வட்டத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ளலாம்.
அவரது திறனாய்வு முடிந்த கணமே, அமைதித் திரை விலகி நூலகம் விவாதக் களமாக மாறியது. இது காதல் கதையா சமூக கதையா என்று ஒரு மாணவன் கேள்வி எழுப்ப, இன்னொருவரோ இதனை சினிமாவாக எடுத்தால் வெற்றிபெறுமா என்று வினவினார். நாயகன் கீழ்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததாக நாவலில் வருகிறதே, அப்படியானால் ரஷ்யாவிலும் சாதி முறை இருந்ததா? என்று இன்னொருவர் வினா எழுப்பினார். அனைத்திற்கும் அழகாகவே பதில் சொன்னார் சுந்தரவடிவேல்.
“இங்கே பெரும்பாலும் புதியவர்கள் திறனாய்வு செய்வார்கள். ஆனால், அதைக் கண்டுபிடிக்கவே முடியாது. திறனாய்வைவிட, அதற்குப் பிறகு நடைபெறும் விவாதங்கள்தான் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். மாலை 3 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி சில நேரங்களில் 5:30க்குப் பிறகும் தொடர்ந்திருக்கிறது” என்கிறார் மாணவர் மணிமாறன்.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒரு துறையின் நிகழ்ச்சியாக இருந்த இந்த வாசகர் வட்டத்தை, ஒட்டுமொத்தக் கல்லூரியின் பெருமையாக மாற்றியிருக்கிறார் இப்போதைய கல்லூரி முதல்வர் முரளி. இப்போது மற்ற கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும்கூட இந்த வாசகர் வட்டத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
“எனக்கு அற்புதமான பல நூல்களும், எழுத்தாளர்களும் அறிமுகமாகி இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த வாசகர் வட்டம்தான். பலரை எழுதவும் வைத்திருக்கிறது. உதாரணமாக, மாணவர் பாபா பகுர்தீன் போதி தர்மர் என்ற புத்தகத்தை எழுதினார். புதியவர் தானே என்று மட்டம் தட்டாமல், அந்தப் புத்தகத்தையும் திறனாய்வு செய்து, முதலில் உற்சாகப்படுத்தியது இந்த வாசகர் வட்டம்தான்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் மாணவி பி.சாரா பேகம்.
இதுவரையில் 107 வாசகர் வட்ட கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, கு.ஞானசம்பந்தன் என்று நிறைய பிரபலங்களும் பங்கேற்று இருக்கிறார்கள். நூலக அலுவலராக உள்ள ஹேமா, துறை பேராசிரியர் ரபீக் ராஜா ஆகியோர் ஒத்துழைப்புடன் இது இன்னும் பல உயரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கின்றனர் மாணவர்கள்.