‘விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஆரோமலே பாடல் மென்மையான கிட்டார் மீட்டலுடன் தொடங்கும். அந்த ஸ்டைலிஷான கிட்டார் மெலடி படம் முழுக்க தீம் மியூசிக்காக ஒலிக்கும். தமிழ் சினிமா இசை ரசிகர்கள் மனதில் இப்போதும் ரீங்காரமிடும் இசைத் துண்டு அது! அதை வாசித்து ஏ.ஆர்.ரஹ்மானின் லீட் கிட்டார் கலைஞராக இன்றுவரை ஜொலித்துக்கொண்டிருப்பவர் சஞ்சீவ் தாமஸ்.
ஆன்லைனிலும் இசை
கிட்டார் கலைஞர் என்பதைத் தாண்டி, பாடகர், இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்கள் இவருக்கு உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு வாசித்துவரும் சஞ்சீவ் தற்போது அடுத்த அவதாரத்துக்குத் தயார்! சென்னையில் விரைவில் ஒரு இசைப் பள்ளி தொடங்கவிருக்கிறார். ஆன்லைனிலும் கற்றுத்தரப்போகிறார்.
ஏற்கெனவே பெங்களூரிலும் சென்னையிலும் ‘ரெயின்போ பிரிட்ஜ் ஸ்கூல் அண்டு ஸ்டூடியோ’ நடத்திவரும் இவர் தற்போது கூடுதல் உற்சாகத்துடன் புதிய இசைப் பள்ளியைச் சென்னையில் தொடங்கப்போகிறார். காரணம் இவர் ஒரு விதத்தில் சென்னைப் பையன்தான்! சென்னைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது ‘புத்தாஸ் பேபி’ (‘Buddha’s Baby’) என்ற இசை பேண்டின் மூலம் இசையில் பல சோதனை முயற்சிகளைச் செய்தவர்.
யாரோ நம்மள கலாய்க்கிறாங்க!
தற்போது இவர் தொடங்கவிருக்கும் பள்ளியில் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இங்கு கிட்டார், வாய்ப்பாட்டு மட்டுமல்லாமல் பியானோ, டிரம்ஸ், இசை தயாரிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் கற்றுத்தரப்படும். அதிலும் படைப்பாற்றலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார் சஞ்சீவ்.
சுதந்திர இசைக் கலைஞராகத் தன் இஷ்டம்போல ஆடிப்பாடி இசையமைத்து வலம்வந்த சஞ்சீவுக்கு 2007-ல் ஒரு நாள் இரவு, “ஹாய், நான் ஏ. ஆர். ரஹ்மான். நீங்க எலக்ட்ரிக், அகவுஸ்டிக் ரெண்டு கிட்டாரும் வாசிப்பீங்களா? “எனத் தொலைபேசியில் ஒரு மிகச் சுருக்கமான அழைப்புவந்தது. “யாரோ நம்மள கலாய்க்கிறாங்க!” என்ற சந்தேகத்தில் தயக்கத்துடனும் பரவசத்துடனும் ரஹ்மானுக்கு முன்னால் போய் நின்ற சஞ்சீவுக்கு ‘வோட் ஃபார் தாஜ் மஹால்’ (‘Vote for Taj Mahal’) பாடல் வாய்ப்பு காத்திருந்தது.
இதை அடுத்து, ‘அழகிய தமிழ் மகன்’, ‘ஜானே து யா ஜானே நா’, ‘டெல்லி 6’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ராக் ஸ்டார்’ எனத் தன்னுடைய எல்லாப் படங்களிலும் வாசிக்கும் ஆஸ்தான கிட்டாரிஸ்டாக சஞ்சீவை ஆக்கினார் ரஹ்மான். 2013-ல் ‘மை ஃபேன் ராமு’படத்தின் மூலம் மலையாளத் திரை உலகில் இசையமைப்பாளராகவும் ஆனார் சஞ்சீவ். அதன் வெற்றி இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் ‘விளக்குமரம்’பட வாய்ப்புவரை பெற்றுத் தந்திருக்கிறது.
பொதுவாகவே இசைக் கலைஞர்கள் பூரணத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். குளறுபடிகளைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தவறுகளை ஏற்றுக்கொள்ளும்போதும் வரையறைகளுக்கு அப்பால் சிந்திப்பதை ஊக்குவிக்கும்போதும் கற்பனைத் திறன் தங்கு தடையின்றி வளரும். அதை வளர்த்தெடுக்கத் தன்னுடைய இசைப் பள்ளியில் சுதந்திரம் உண்டு என்கிறார் சஞ்சீவ்.