இளமை புதுமை

உடலை ஆராதி!

சில்வியன்

‘நீங்கள் ஸ்லிம் ஆக வேண்டுமா?’

இப்படியொரு விளம்பரத்தைக் கடந்து வராத மனிதர்களே இருக்க முடியாது. பருமனான‌ உடலை மெலிய வைத்தும், ஒல்லியான உடலில் சதையேற்ற வைத்தும் ஆரோக்கியம் என்ற போர்வையில், உடலை அழகாக்குகிறோம் என்று சொல்லிப் பல நிறுவனங்கள் நம் கனவுகளைக் காசாக்குகின்றன. இவை தவிர, ‘நீங்கள் சிவப்பாக வேண்டுமா?’ என்று கேள்வி கேட்டுத் தங்கள் நிறுவனப் பொருட்களை நம் கையில் திணித்துவிட்டுப் போகும் கூட்டம் இன்னொரு பக்கம்.

நாம் ஏன் நம் உடலைப் போற்றுவதில்லை? நாம் ஏன் எப்போதும் பிறரின் அழகோடு நம் அழகை ஒப்பிட்டுக்கொள்கிறோம்? சிவப்பாக இருக்கும் அனைவரும் வாழ்க்கையில் ஜெயித்துவிடுகிறார்களா? இப்படியான கேள்விகளை நம்மிடமே நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா?

இதுவரை இல்லையென்றால், மல்லிகா ஏஞ்சலாவின் காலண்டரைப் பார்த்தவுடன், இனி உங்கள் உடலை நீங்கள் ஆராதிக்கத் தொடங்குவீர்கள்.

பெங்களூரைச் சேர்ந்தவர் மல்லிகா. இந்தோ கனேடிய நடிகை இவர். தவிர, அழகு மற்றும் அது சார்ந்த‌ பெண்கள் தொடர்பான விஷயங்களில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார்.

“நான் கொஞ்சம் பருமனான உடல் அமைப்பைக் கொண்டிருப்பவள். அதனால் நான் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானேன். திரைப்பட வாய்ப்புகள் தேடி அலைந்தபோது, பலரும் என்னிடம், ‘நீங்க கொஞ்சம் வெயிட் குறைச்சா, இன்னும் நல்லாயிருக்கும்!' என்று அறிவுரைகள் வழங்கினார்கள்.

அது குறித்தெல்லாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தபோதுதான், நம் சமூகத்தில் அழகு குறித்து தவறான புரிதலைக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிய வந்தது. மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. நம் உடலை நாம்தான் போற்ற வேண்டும். நிறம், எடை, உயரம், பாலினம் என எல்லா வித்தியாசங்களையும் தாண்டி ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். அந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் ‘லவ் எவ்ரி பாடி’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறேன்” என்கிறார்.

இந்தப் பிரச்சாரத்துக்காக இவர் தேர்வு செய்த முறைதான் ‘காலண்டர்’ வெளியிடுவது. சென்னையில் இந்த காலண்டரை நடிகர் ஜீவா கடந்த வாரம் வெளியிட்டார். வெவ்வேறு நிறம், எடை, உயரம் கொண்ட ஆண்களும் பெண்களும் போஸ் கொடுக்க, அவர்களை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் பிரபல ஒளிப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்.

இந்தப் பிரச்சாரத்துக்காக இவர் தேர்வு செய்த முறைதான் ‘காலண்டர்’ வெளியிடுவது. சென்னையில் இந்த காலண்டரை நடிகர் ஜீவா கடந்த வாரம் வெளியிட்டார். வெவ்வேறு நிறம், எடை, உயரம் கொண்ட ஆண்களும் பெண்களும் போஸ் கொடுக்க, அவர்களை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் பிரபல ஒளிப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்.

அந்த ‘அழகர்’களின் கைகளில் துணிக்கடை பொம்மைகள் இருக்கின்றன. அதுவும் கை வேறு, கால் வேறாக. காரணம் கேட்டால், “இந்த பொம்மைகள் போன்று உடல்வாகைக் கொண்டிருப்பதுதான் அழகு என்று இங்கு பலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நினைப்பை மாற்றவே இப்படி” என்கிறார்கள்.

அழகுமா!

SCROLL FOR NEXT