இளமை புதுமை

அன்பை ஒருங்கிணைத்த விழா

வா.ரவிக்குமார்

‘திருநங்கைகள் தினம்’ என்றால் பொதுவாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் மேற்படி கொண்டாட்டங்களோடு திருநங்கைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், திருநங்கை சமூகத்துக்கு பல்வேறு வழிகளில் துணையாகப் பொதுச் சமூகத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள், திருநம்பிகள் என பலரும் சங்கமித்த விழாவாக, திருநங்கை தினம் விழா நடைபெற்றது. சென்னை தியாகராய நகர் கிருஷ்ண கான சபாவில் கடந்த 15 இந்த விழாவை நடத்தியது திருநங்கைகளின் நலனுக்காக செயல்பட்டுவரும் ‘பார்ன் டூ வின்’ சமூக நல அறக்கட்டளை.

உறவுகளின் மேன்மை

திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையே அவர்களின் குடும்பமே அவர்களை ஒதுக்கிவைப்பதுதான். இதனாலேயே உறவுகளுக்கு ஏங்கும் அவர்கள் தங்களுக்குள் தாய், மகள் உறவை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அதன் தொடர்ச்சிபோல ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவருகிறார் திருநங்கை அர்ச்சனா. இவருக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகத்தை நிர்மாணித்துவரும் நூரி அம்மாள் ‘அன்னை விருதை’ வழங்கினார்.

கோயம்புத்தூரில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளர், பரதநாட்டியக் கலைஞரான திருநங்கை பத்மினி – பிரகாஷ் தம்பதியினராக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கின்றனர். திருநங்கை பத்மினியின் கணவர் பிரகாஷுக்கு ‘சிறந்த உறுதுணையாளருக்கான விருது’ வழங்கப்பட்டது.

சமூகச் செயல்பாட்டாளர்கள்

பொதுச் சமூகத்தில் சமூக ஊடகங்களிலும், திரைப்படத் துறையிலும் தங்களால் இயன்ற அளவுக்கு திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை தங்களின் படைப்புகளில் கொண்டு வருபவர்களை அடையாளம் காணும் வகையிலும் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திருநங்கைகளுக்கு ஆதரவாக `ஸ்டாண்ட் பை மீ’ பிரசாரத்தையும், `சதையை மீறி’ இசைப் படத்தையும் இயக்கி வெளியிட்ட கிருத்திகா உதயநிதிக்கும், அஞ்சலி அமீருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு தமிழ், மலையாளத் திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருக்கும் திருநங்கை அஞ்சலி அமீர், இந்தியாவிலேயே முதல் முறையாக நடிகர் மம்மூட்டியின் ஜோடியாக பெண் பாத்திரத்தில் `பேரன்பு’ என்னும் தமிழ், மலையாளத்தில் தயாராகும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

பொதுச் சமூகத்துக்குப் பாலம்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வெறுமனே விருதுகளை வழங்கும் விழாவாக இல்லாமல், விருது பெருபவர்களுக்கும் விருதை வழங்குபவர்களுக்கும் ஒரு நீங்காத பிணைப்பை ஏற்படுத்தும் விழாவாக இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தவர் ‘பார்ன் டூ வின்’ அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா. திருநங்கை சமூகத்தின் வலியை பற்றி கவிதை படித்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன், தங்கள் அமைப்பு செயல்படும் இடத்தின் உரிமையாளருடைய மகள் என பொதுச் சமூகத்தில் இருக்கும் சாதாரணமானவர்களையும் கவுரவப்படுத்தியது, ஸ்வேதாவின் எளிமையுடன் கூடிய ஆளுமை. இந்த அணுகுமுறை திருநங்கை சமூகத்தை பொதுச் சமூகத்தோடு மேலும் நெருக்கமாவதற்கு உதவும்.

SCROLL FOR NEXT