விளையாட்டு வீரர்களுக்கு எப்போதுமே இரண்டு கனவுகள் உண்டு. ஒன்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது. இரண்டு, நல்ல ‘ஷூ' வாங்குவது!
நல்ல திறமை, நல்ல பயிற்சி போன்றவை இருந்தும் பல விளையாட்டு வீரர்களால் தாங்கள் தேர்வு செய்த விளையாட்டுப் பிரிவில் ஜொலிக்க முடியாமல் போவதற்கான காரணங்களுள் ஒன்று, நல்ல காலணிகள் இல்லாமல் போவது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான கால்பந்துப் போட்டியில் வெறும் காலில் விளையாடி வெற்றி பெற்ற வீரர்களைக் கொண்ட நாடு இது. வறுமை காரணமாக நல்ல ஷூ வாங்க முடியாமல் தங்கள் பதக்கக் கனவுகளைக் கிடப்பில் போட்ட பல விளையாட்டு வீரர்களைக் கொண்ட நாடும் இதுதான்.
ஒரு விளையாட்டு வீரருக்கு நடக்க, ஓட, குதிக்க காலணிகள் மிகவும் அவசியம். சொல்லப்போனால், தங்கள் ‘ஸ்டைல்', வசதிக்கேற்ப ஷூக்களைத் தேர்வு செய்வது அதிமுக்கியம். ஏனென்றால், நல்ல திறமை 80 சதவீத வெற்றிக்கு அழைத்துச் சென்றால், நல்ல கருவிகள் முழுமையான வெற்றிக்கு நல்ல ‘மைலேஜ்' தரும்.
அப்படிப்பட்ட ஷூக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் மிக முக்கியமானது நைக்கி. அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பில் நைட். அவரின் எழுத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ‘ஷூ டாக்'. சைமன் அண்ட் ஷூஸ்டர் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. தன் வாழ்க்கையைச் சொல்வதன் வழியே நைக்கி உருவான வரலாற்றையும் சொல்கிறார் ஆசிரியர்.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துவிட்டுச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் பில். அவருக்கு ஒரு ஐடியா. ஜப்பானிலிருந்து ஷூக்களை இறக்குமதி செய்து அமெரிக்காவில் விற்பது. ஒரு காலத்தில் கேமரா சந்தையில், ஜெர்மனி கோலோச்சியது. அதனை ஜப்பான் நிறுவனங்கள் சில வெற்றிகொண்டன. அதேபோல, ஜப்பான் நிறுவனங்கள் தயாரிக்கும் ஷூவும் அமெரிக்காவில் நல்ல விலைக்குப் போகும் என்று பில் நம்பினார். அந்த நம்பிக்கையை மூலதனமாக வைத்து ‘ப்ளூ ரிப்பன்' என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார் அவர்.
அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. காலணிகள் நன்றாக விற்றன. ஒரு கட்டத்தில், இந்த நிறுவனத்தை ஜப்பான் நிறுவனம் கழட்டிவிட, தானே ஒரு ‘ஷூ' தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். கால்பந்து, தடகளம், டென்னிஸ், பேஸ்பால் என ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்றவாறு தனித்தனியே காலணிகளை, கல்லூரியில் தன்னுடைய கோச் ஆக இருந்த பில் பவர்மேனுடன் சேர்ந்து உருவாக்குகிறார். நைக்கியின் ‘யுரேகா மொமென்ட்' அது!
அதற்குப் பிறகு போட்டியாளர்களால் அவருக்கு என்னென்ன சிக்கல்கள் வருகின்றன, நிறுவனத்துக்குள் ஏற்படும் சிக்கல்களை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதெல்லாம் தனிக் கதை.
‘நைக்கி' என்ற பெயர் வந்த காரணமே மிகவும் சுவாரஸ்யமானது. இந்த நிறுவனத்தின் முதல் முழு நேர ஊழியரும் தனது நண்பருமான ஜெஃப் ஜான்சன், தன் கனவில் கேட்ட பெயரே ‘நைக்கி' என்பது. இது கிரேக்கக் கடவுள் ஒன்றின் பெயர். அந்தப் பெயரின் பொருள் வெற்றி என்பதாகும்.
‘நைக்கி' எனும் வார்த்தையின் கீழே தென்படும் ‘ஸ்வூஷ்' (டிக் மார்க் போன்ற வடிவம்) வடிவத்துக்கு பில் தரும் அர்த்தம் சுவையானது. வேகமாக ஓடி வரும் ஒருவர் உங்களைக் கடந்து செல்லும்போது ஏற்படும் ஓசைதான் ‘ஸ்வூஷ்' என்கிறார். அதேபோல ‘ஷூ' தயாரிப்பில் மூழ்கி முத்தெடுத்தவர்களை, இருபத்தி நான்கு மணி நேரமும் ஷூ தயாரிப்பே நினைவாக இருப்பவர்களை ‘ஷூ டாக்' என்று அழைப்பது வழக்கம் என்கிறார் பில். இப்படிப் புத்தகம் முழுக்க நிறைய தகவல்கள்.
பயணமும் புத்தகமுமாகத் தன் வாழ்க்கையை பில் வாழ்ந்திருப்பது இந்தப் புத்தகத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. ஜென் தத்துவங்கள் இவரின் மனதை மிகவும் ஆழமாகப் பண்படுத்தியிருப்பது தெரிகிறது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சூத்திரமாக இவர் சொல்வது ஒரு ஜென் சொற்றொடரைத்தான். "தன்னை அறிய தன்னை மற!"
ஒரு பிராண்டட் பொருளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அனைவருக்குமே ஆசை இருக்கும். அதோடு அந்த பிராண்டின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு அந்தப் பொருளைப் பயன்படுத்துவது, நம் ரசனையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்!