தனது 100-வது வயதிலும், பார்வைக் குறைபாடு இல்லாமல் நாளிதழை, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த தபால் தாத்தா. இந்த வயதிலும், அசாதாரண விஷயங்களையும் சாதாரணமாகச் செய்து வருகிறார்.
கோவை கவுண்டம்பாளையம் பேங்கோதெருவைச் சேர்ந்தவர் ஆர்.பாலசுப்ரமணியம். தபால் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதால், தபால் தாத்தா என்றுதான் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
துருதுரு பார்வை
கடந்த 1914-ஆம் ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி பிறந்த இவர் இன்று 100-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 100-வயது என்றால், படுத்தப் படுக்கை, வீட்டில் உள்ளவர்களை எடுத்ததெற்கெல்லாம் உதவிக்கு அழைத்து அன்பு தொல்லை கொடுப்பார் என நினைக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாமல், உற்சாகத்தோடு இளைஞரைப் போல வீட்டில் வலம் வருகிறார்.
இந்து நாளிதழ் மோகம்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்தில், தபால்காரராகச் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் தபால் நிலையத்தில் தபால் அலுவலராக, கடந்த 1973-ம் ஆண்டு 38 ஆண்டு தபால் பணி வாழ்க்கைக்கு விடைகொடுத்தவர். 10-ஆம் வயது முடிவதற்குள் கண்ணாடியுடன் வலம் வரும் சிறுவர்கள் மத்தியில், 100 வயதிலும் தபால் தாத்தா, கண்ணாடி அணியவில்லை. ஆனால், தினமும் வீட்டிற்கு வரும், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை முதல் பக்கத்தில் இருந்து, கடைசி பக்கம் வரை உள்ள செய்திகளை முழுவதுமாகப் படிப்பதுதான் இவரது தினசரிப் பொழுதுபோக்கு..
கவலை இல்லாத மனிதர்
100 வயதில் இளமை ததும்பும் ரகசியத்தை, அவரது மூத்த மகன் ஜனார்த்தனனிடம் கேட்டபோது, ’’எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். சாப்பாட்டு விஷயத்தில் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். தற்போதுகூட, வாரம் இருமுறை சிக்கன் சாப்பிடுகிறார். முட்டை, இனிப்பு என்றால் இப்போது கூடக் கொள்ளை பிரியம். நேரத்துக்குச் சாப்பிட்டு, நேரத்துக்குத் தூங்குவார். பிரத்தியேகமாக உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. 85 வயது வரையிலும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வார்’’ என்றார்.
தபால் தாத்தாவிற்கு 3 மகன்கள். கொள்ளுப் பேரன் பேத்தி என்று சுற்றிலும் பலர் இருந்தாலும் அவர் விரும்புவது தனிமையைத்தான். முதுமையின் நண்பன் தனிமை என்பதை உணர்த்தும் விதமாக, நாம் கிளம்புவதற்கு விடை கொடுத்துவிட்டு, எதையோ சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு நூறாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டுப் புறப்பட்டோம்.