இளமை புதுமை

அமெரிக்கா போக ஆசையா? - பிஸினஸ் விசாவில் சுற்றுலா செல்ல முடியாதா?

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு, அமெரிக்க விசா நடைமுறைகளில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் விசா தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்ன..? மாதமொருமுறை உங்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார்கள் சென்னையில் உள்ள‌ அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகள்...

சுற்றுலாப் பயணியாக அமெரிக்கா செல்ல விரும்புகிறேன். எத்தகைய விசா, எவ்வளவு நாள் முன்பாக நான் பெற வேண்டும்?

- மைமூனா முகம்மது

பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் 10 ஆண்டுக் காலம் செல்லத்தக்க சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இது B1/B2 விசா எனப்படும். ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்லும்போதும் அதிகபட்சமாக 6 மாதம் தங்கலாம். இந்த விசாவில் செல்லும் நபர் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது. உங்கள் அமெரிக்கப் பயணம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் விண்ணப்ப நடைமுறைகளைத் தொடங்க எமது அதிகாரபூர்வ இணையதளத்தைப் பாருங்கள்: USTravelDocs.com/in

அமெரிக்கச் சுற்றுலா விசாக்களில் எத்தனை வகைகள் உள்ளன? அதற்கு விண்ணப்பிக்க எவ்வாறான ஆவணங்கள் தேவை? பிற வகை விசாக்களுக்கு உரிய அதே அடிப்படை ஆவணங்களை இதற்கும் சமர்ப்பிக்கலாமா?

- ராஜா

அமெரிக்கச் சுற்றுலா விசா B1/B2 எனப்படும். இதற்கென்று குறித்த ஆவணம் என்று ஏதுமில்லை. ஆனால், விசா அதிகாரி இந்தியாவுக்கும் உங்களுக்குமான பிணைப்புகளையும் அமெரிக்கா சென்றுவிட்டுத் தாயகம் திரும்பும் உறுதியுடன் இருக்கிறீர்களா என்பதையும் உரிய ஆதாரங்களுடன் எடுத்துரைக்குமாறு கேட்கலாம். உங்கள் நிலையை விளக்கச் சில ஆவணங்கள் உதவும் என்று கருதினால், நீங்கள் அவற்றை விசா நேர்காணலின்போது எடுத்து வரலாம்.

எங்கள் இளைய மகன் அமெரிக்காவில் இருக்கிறார். மூத்த மகன் கனடாவில் இருக்கிறார். இரண்டு மகன்கள் வீட்டுக்கும் சென்று பேரக்குழந்தைகளைப் பார்த்துவர எங்களுக்கு விருப்பம். நாங்கள் மூத்த குடிமக்கள். என் வயது 79. மனைவிக்கு 71. நாங்கள் பி1/பி2 வகை விசாவுக்கு விண்ணப்பிக்கலாமா?

-ராஜாமணி

வெற்றிகரமான உங்கள் குடும்பத்துக்கு வாழ்த்துகள். உங்கள் உறவுகளைப் பார்க்கச் செல்லும் பயணம் அற்புதமாக அமையும் என நம்புகிறோம். உங்கள் விசா காலாவதியாகி 12 மாதங்களுக்கு மேலாகிவிட்டால், நீங்கள் மறுபடியும் விசாவுக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு வரவேண்டும். உங்களுக்கு 80 வயதுக்கு மேல் என்றால், நேர்காணலற்ற பரிசீலனைக்கு நீங்கள் தகுதியுடையவர்.

நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றுகிறேன். கடந்த ஆண்டு பிஸினஸ் விசா மூலம் அலுவல் பணியாக அமெரிக்கா சென்று வந்தேன். இந்த ஆண்டு இறுதியில் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல விரும்புகிறேன். அதற்காக மனைவிக்கும் மகளுக்கும் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்க இருக்கிறேன். என்னிடம் பிஸினஸ் விசா இருப்பதால், சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிப்பது அவசியமா? அல்லது இப்போதுள்ள பிஸினஸ் விசாவிலேயே அமெரிக்கா செல்லலாமா?

-கோகுல்

உங்கள் விசா “H1B” அல்லது “B1” எனில், தொழில்/வர்த்தகம் நிமித்தமாக மட்டுமே பயணம் செய்ய முடியும். அதுபோல, “B2” விசா மூலம் சுற்றுலாவுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். விசாவில் “B1/B2” என்று குறிப்பிட்டிருப்பின் இரண்டில் எதற்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஆனால், H1B அல்லது வேலை சார்ந்த வேறு விசாவை வைத்துக்கொண்டு சுற்றுலாப் பயணியாக அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது. குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சுற்றுலா விசாவுக்கு (பொதுவாக நாங்கள் பரிந்துரைப்பது B1/B2) விண்ணப்பிப்பது அவசியம்.

நன்றி: அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை

SCROLL FOR NEXT