தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன், மீண்டும் மரத்தின் மீதேறி, அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். அது வேதாளம் என்பதை உணர்ந்துகொண்ட விக்ரமன், மீண்டும் அதைக் கீழே கொண்டுவந்து, முதுகில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. “மன்னா, நாம் நடந்துபோகும்போது, பொழுதுபோவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்” என ஆரம்பித்தது.
வேதாளம்: “மன்னா, என்னைப் போன்ற வேதாளங்கள் கூடு விட்டுக் கூடு பாய்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். ஆனால், ஒரு நாயகனின் கதையை வேறொரு நாயகனின் பேரில் வெளியிட்ட காமிக்ஸ் கதையைப் பற்றிச் சொல்கிறேன், கேள்”.
இத்தாலியிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற காமிக்ஸ் ஹீரோ டெக்ஸ் வில்லர். இவரது கதைகளைக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் ஒரு நிறுவனம் வெளியிட்டுவருகிறது. ஆனால், அதே நிறுவனம் வேறு ஹீரோக்களின் கதைகளையும் ‘டெக்ஸ் வில்லர் கதை’ என்று வெளியிட்டுவருகிறது.
மற்ற ஹீரோக்களின் கதை என்று எடுத்துக்கொண்டால், அவர்களின் ‘ஒரிஜினல்’ கதைத்தொடர் முடிந்துவிட்டது. அதனால், இப்படி வேறு கதையை இந்த ஹீரோக்களின் பெயரில் போட்டேனென்று சால்ஜாப்பு சொல்லலாம். ஆனால், டெக்ஸ் வில்லரைப் பொறுத்தவரையில் 1948 முதல் இவரது புத்தகங்கள் 650-க்கும் மேலாக வந்துள்ளன. தொடர்ந்து வந்துகொண்டும் உள்ளன.
சுமார் 600-க்கும் மேற்பட்ட டெக்ஸ் வில்லர் புத்தகங்கள் இன்னமும் தமிழில் வராமல் இருக்க, இங்கிலாந்தைச் சேர்ந்த கிட் கார்ஸன் என்ற குதிரை வீரனின் 8 பக்க காமிக்ஸை ‘டெக்ஸ் வில்லரின் கதை’ என்று மாற்றியுள்ளதை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்? உதாரணமாக, ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் போரிஸ் வல்லேயோ. இவரது ஒவ்வொரு ஓவியமும் லட்சக்கணக்கில் மதிப்புப் பெற்றவை. சமகால உலகின் மிகச் சிறந்த ஓவியர்களுள் இவரும் ஒருவர். இவரது புகழ்பெற்ற ஓவியம் ஒன்றை எடுத்து, அதில் லேசாக மாற்றம் செய்து, டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் புத்தகத்துக்கு அட்டையாக மாற்றிவிட்டார்கள், மன்னா.
காப்புரிமை விஷயத்தில் கெடுபிடியான அந்த இத்தாலி நிறுவனத்துக்கு இதெல்லாம் தெரிந்தால், என்ன நடக்கும்? இப்படி முறையற்ற காமிக்ஸ்களை வெளியிடுவது குற்றம்தானே? இதற்குப் பதில் சொல்லவில்லையென்றால், உன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும் விக்ரமா” என்று முடித்தது வேதாளம்.
“ஆமாம், இல்லை” என்று சுருக்கமாகப் பதில் கூற வேண்டிய அந்த இடத்தில், இலக்கியவியாதியாக உருவெடுக்கும் ஆசையைக் கொஞ்சம்கூடக் கைவிடாத விக்ரமன், “உரத்த விமர்சனங்களின் முன்னே மவுன ரசனைகள் தலைவணங்கத் தேவைப்படும் இந்தச் சமகால வெறுப்புணர்வுச் சமுதாயத்தில், விளிம்புநிலை மனிதர்களது உணர்வுகளைப் பிரதிபலிப்பதைத் தவிர்க்க இயலுமா?” என்றெல்லாம் இடைவெளி இல்லாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவதைக் கண்ட வேதாளம், வெறுப்படைந்து மீண்டும் மரத்தில் சென்று ஏறிக்கொண்டது.
டெக்ஸ் வில்லர்