இளமை புதுமை

மக்ரோனுக்கு 39 அவர் மனைவிக்கு 63

இந்திரா செளந்தர்ராஜன்

மக்ரோனுக்கும் அவருடைய மனைவி ப்ரிஜித் த்ரூன்யோவுக்கும் இடையிலான 24 வருட வித்தியாசமே, பிரெஞ்சு அரசியலில் மக்ரோன் கிண்டலடிக்கப்படுவதற்குப் போதுமான காரணமாக இருந்தது. எதிர்க்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் மக்ரோனைப் பார்த்துச் சிரிப்பாய்ச் சிரித்தனர்.

இம்மானுவேல்

தன்னைப் பார்த்துச் சிரித்தவர்களை நோக்கி மக்ரோன் சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்த நாள் மே 7. அன்று நடைபெற்ற பிரெஞ்சு அதிபருக்கான தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று, ‘நாட்டை வழிநடத்துவதற்கு என்னுடைய வயதோ, என் மனைவியின் வயதோ முக்கியமல்ல’ என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மக்ரோன். பிரெஞ்சு வரலாற்றில், இவ்வளவு இள வயதில் நாட்டின் அதிபராக ஒருவர் அமர்வது இதுவே முதல்முறை.

பிரான்ஸ் நாட்டில் அமியென் எனும் நகரத்தில் பிறந்தவர் இம்மானுவேல் மக்ரோன். அரசியல் அறிவியல், தத்துவம் ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்றுவிட்டு, சிறிது காலம் பிரபல பிரெஞ்சுத் தத்துவவாதி பால் ரிக்கூர் என்பவரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். இன்று, அவரது பேச்சில் அவ்வப்போது தெறிக்கும் தத்துவ வரிகளுக்கு, அந்த உதவியாளர் பணிதான் காரணம் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

அதற்குப் பிறகு, குடிமைப் பணிக்கான பயிற்சியையும் முடித்தார். அந்தப் பயிற்சி அவரை பிரெஞ்சு அரசின் கருவூலத்தில் உயர் பொறுப்பில் கொண்டுபோய்ச் சேர்த்தது. அங்கு இவரின் உயரதிகாரியாக இருந்தது, முன்னாள் பிரெஞ்சு அதிபர் மித்தராந்த்தின் உதவியாளர் ழாக் அத்தாலி. மக்ரோன் அங்கு பணியாற்றிய காலத்திலேயே அவரிடம் வருங்கால அதிபருக்கான அனைத்துத் திறன்களையும் கொண்டவராக வெளிப்பட்டார் என்று ழாக் அத்தாலி புகழ் மாலை சூட்டினார்.

2008-ம் ஆண்டில், அந்தப் பணியைத் துறந்துவிட்டு, ரோத்ஸ்சைல்ட் எனும் வங்கியில் சேர்ந்து பணியாற்றினார். அங்கு நெஸ்லே, பிஃபிசர் ஆகிய நிறுவனங்களுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான வியாபார ஒப்பந்தத்தை முடித்துக்கொடுப்பதில் உதவியாக இருந்தார். 2014-ம் ஆண்டில், பிரான்சுவா ஹொலந்த் ஆட்சியில் மிக இளவயது நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது இவர் கொண்டுவந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களால் பிரெஞ்சு ஊடகங்களில் இவரை ‘மொசார்ட் ஆஃப் தி எலிஸீ’ என்று விமர்சிக்கப்பட்டார்.

இப்படி அடுத்தடுத்து ஏற்றத்தை நோக்கிப் பயணித்த மக்ரோன், 2016-ம் ஆண்டில் ‘ஆன் மார்ஷ்!’ எனும் கட்சியைத் தொடங்கினார். அப்போது அவரின் அரசியல் நிலைப்பாட்டைக் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பினர். இதனால் அந்த ஆண்டு நவம்பரில் அவர் எழுதி வெளியான ‘ரெவல்யூஷன்’ எனும் புத்தகத்தில், தன்னை ஒரு தாராளவாதியாக அறிவித்துக்கொண்டார். தேர்தல் பிரச்சாரங்களிலும்கூட, ‘நான் இடதுசாரியும் அல்ல. வலதுசாரியும் அல்ல. நான் பிரான்ஸ் நாட்டுக்காக’ என்று சொல்லித் தனக்கான நன்மதிப்பை உயர்த்திக்கொண்டார்.

முந்தா நாள்வரை அரசு ஊழியராக இருந்துவிட்டு, நேற்று கட்சி தொடங்கி, இன்று தேர்தலில் போட்டியிட்டு அதிபராக மக்ரோன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால், விக்ரமன் படப் பாடல் காட்சி போன்று தோன்றும். ஆனால், இது நிஜமாகவே நடந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். எந்த ஒரு பெரிய கட்சியின் துணையும் ஆதரவும் இல்லாமல், ஒருவர் அதிபராக அமர்வதைப் பார்த்து பிரான்ஸ் தேசமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது!

இந்தத் தேர்தலுக்கு முன்பு வரை, மக்ரோனும் அவருடைய மனைவியும் பொதுவெளியில் அவ்வளவாகத் தலைகாட்டியது இல்லை. அப்படியே தலைகாட்டினாலும், அதை ஊடகமும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியதிலிருந்து, அந்தத் தம்பதியைச் சுற்றிச் சுற்றி ஏராளமான விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வந்தவாறே இருந்தன. எதையும் கண்டுகொள்ளாமல் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் மக்ரோன். பதவிக்காகத் தன் மனைவியை ஊடகத்தின் பார்வையில் மறைக்காத மக்ரோனை நினைக்கும்போது பதவிக்காகத் தன் திருமண உறவையே மறைத்த மோடியை மறக்க முடியவில்லை.

இதனாலேயே ‘பியன்வென்யூ மக்ரோன்’ (அப்படியென்றால், பிரெஞ்சில் ‘வெல்கம் மக்ரோன்’ என்று அர்த்தம்) என்று பிரான்ஸ் மக்கள் வரவேற்கிறார்கள். மக்ரோன் தன் ஆட்சிக் காலத்தில் சந்திப்பதற்கும் சாதிப்பதற்கும் நிறைய சவால்களும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்நிலையில் மக்ரோனை, சமூக வலைத்தளங்களில் இனிப்பு உணவுப் பொருளான மக்ரூனுடன் (ஆங்கிலத்தில் அந்த இரண்டு சொற்களுக்கும் ஒரே எழுத்துகள் என்பதால்) ஒப்பிட்டு கிண்டலடிக்கவும் செய்கிறார்கள் சிலர்.

அதையெல்லாவற்றையும் தூசி தட்டுவது போல தட்டுவிட்டு, ‘ஆன் மார்ஷ்!’ என்று தன் கட்சிப் பெயரைச் சொல்லி முன்னேறிக்கொண்டேயிருக்கிறார் மக்ரோன். ‘ஆன் மார்ஷ்’ என்ற பிரெஞ்சுச் சொற்களுக்கு ‘நகர்ந்துகொண்டே இரு’ என்று பொருள்!

SCROLL FOR NEXT