இளமை புதுமை

இளம் போராளி- அருள்தாஸ்

ஆர்.ஜெய்குமார்

அருள்தாஸ், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சூராணம் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். மிக இளம் வதிலேயே சமூகப் போராட்டங்கள் பலவற்றிலும் முன்னின்று செயல்பட்டு வருபவர். அமைப்பு சாராத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், சென்னைச் சேரி மக்கள் பழங்குடியினர் ஆகியோருக்கிடையில் ஒருவரோடு ஒருவராக இருந்து, தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை 1000 முறைக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தியவர். இந்தியாவின் முக்கியமான சமூகப் போராட்டத் தலைவர்களான மேதா பட்கர், சுவாமி அக்னிவேஷ், அருணா ராய், பினாயக் சென் ஆகியோர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

“1994ஆம் வருடம், எங்கள் கிராமத் திற்கு அடிப்படை வசதி வேண்டி ஒரு போராட்டம் மேற்கொள்ள கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். கிராமத்திலுள்ள தேவாலயப் பாதிரியார் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனுகொடுக்கவும் திட்டமிட்டிருந்தனர். அதற்காக மக்கள் டிராக்டர்களில் சென்றனர். அந்தப் போராட்டத்தில் என் தாய் தீவிரத்துடன் ஈடுபட்டிருந்தார். அப்படிச் செல்லும்போது டிராக்டரிலிருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். அப்போது அங்கு அருகில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. அதனால் என் தாய் இறக்க நேரிட்டது.” இந்தச் சம்பவம் அவர் மனத்தை ஆழமாகப் பாதித்தது. இன்றைக்கு இம்மாதிரியான சமூகப் போராட்டங்களில் ஈடுபவதற்கு இதுதான் ஆதாரமான விஷயம் என்கிறார் அருள்.

2010ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் எஸ்.வி.பாளையத்தைச் சேர்ந்த எளிய மக்கள் 150பேருக்கு அரசு மல்லாபுரத்தில் குவாரியை ஒதுக்கியது. ஆனால் இக்குவாரியை அங்குள்ள கந்து வட்டிக்காரர்கள் கைப்பற்றி, அம்மக்களையே கொத்தடிமைகளாக மாற்றி அவர்களுக்காக அரசு ஒதுக்கிய குவாரிகளில் பணிபுரிய வைத்துள்ளனர். இதை எதிர்த்து அருள், தனிமனிதனாகப் போராடித் தீர்வுபெற்றுத் தந்துள்ளார்.

மேலும் 2014ஆம் ஆண்டு விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கெருகம்பாக்கம்,கோவூர், தாராப்பக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நிலங்களை அரசு கைப்பற்ற முயன்ற போது அதற்கு எதிராகப் போராடி அம்முடிவை நாங்கள் திரும்பப்பெற வைத்துள்ளோம் என்கிறார் அருள். ஸ்டாலின் நகரில் பறக்கும் சாலைப் பணிகளுக்காக குடிசைகளை அகற்றும்போது மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை, மனித உரிமை ஆணையத்தின் உதவியுடன் தடுத்துள்ளார்.

இவர், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அம்பேத்கர் கருத்துகளின் மீது ஈடுபாடு கொண்டவர். கல்லூரிக் காலத்தில் இருந்தே நம்மாழ்வாரின் மீதும் பற்றுக் கொண்டவர். முகாம்கள் பலவற்றிலும் அவருடன் இணைந்து செயல்பட்டுள்ளார். மேதா பட்கரின் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தமிழக அமைப்பாளராக உள்ளார். “எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும். அதுவே லட்சியம்” என்கிறார் அருள்தாஸ்.

SCROLL FOR NEXT