இளமை புதுமை

சுரங்கப் பாதையில் குளுகுளு பயணம்

செய்திப்பிரிவு

சென்னையின் போக்குவரத்தைச் சமாளிக்க வகுப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் முதல் கிண்டிவரையிலுமான போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் மே 14 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் மெட்ரோ ரயில் திருமங்கலத்திலிருந்து நேரு பூங்கா வரையான 7.4 கி.மீ. தூரத்து சுரங்கப் பாதையில் போக்குவரத்தைத் தொடங்கியிருக்கிறது.

மெட்ரோ ரயிலின் சுரங்கப் பாதைப் பயணம் திருமங்கலத்தில் தொடங்குகிறது. அண்ணா டவர் பார்க், அண்ணா நகர் வெஸ்ட், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியே நேரு பார்க் வரை நீள்கிறது இந்தப் பயணம்.

சுரங்கப் பாதையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பும் பார்ப்போரைக் கவரும் வகையில் பிரமிக்கும்படியாக உள்ளது. ஷங்கர் படத்து பாடல் காட்சியில் வருவது போல் காணப்படும் மெட்ரோ ரயிலில் மக்கள் உற்சாகமாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். கோடைவிடுமுறை. அதுவும் ஞாற்றுக்கிழமை என்பதால் அனைவரும் சுற்றுலாவுக்கு வருவது போல் வந்துவிட்டார்கள். சில நிமிடப் பயணத்துக்கு டிக்கெட் வாங்கவே சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. சென்னையில் மெட்ரோ ரயில் புதிதல்ல என்றாலும் சுரங்கப் பாதையில் எப்படிச் செல்லும் என்பதைப் பார்க்கவே குடும்பம் குடும்பமாக வந்துவிட்டார்கள்.

பயணச்சீட்டு வாங்க வரிசையில் காத்துக்கொண்டிருந்த இளைஞர், “ஒரு மணி நேரமாக வரிசையில் நிற்கிறேன். சுரங்க மெட்ரோ ரயிலில் என்னதான் வித்தியாசமாக உள்ளது என்பதைப் பார்ப்பதற்காகத் தான் வந்தோம்” எனத் தன் நண்பர்கள் குழுவோடு சேர்ந்து உற்சாகமாகச் சொன்னார்.

விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை செல்லும் மெட்ரோ ரயிலில் சென்னை நகரை வேடிக்கை பார்த்தபடியே செல்லலாம். ஆனால், இந்த ரயிலில் அப்படிப் பார்க்க எதுவும் இல்லை. ஆனால் ரயிலின், ரயில் நிலையத்தின் தரம் சர்வதேச அளவுக்கு இருக்கிறது. பெண்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித் தனிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றபடி வழக்கமான மெட்ரோ ரயில் பயணம் போலவே இந்தச் சுரங்க மெட்ரோ ரயில் பயணமும் இருந்ததாகவே வந்திருந்தவர்கள் சொன்னார்கள். சுள்ளென்று அடிக்கும் கத்திரி வெயிலுக்கு நல்லா குளு குளுன்னு இருக்குற ரயிலில் போவது சுகமாகத்தான் இருக்கிறது.

- கனிமொழி .ஜி

SCROLL FOR NEXT