அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து, போர்ச்சுகல், மொரீசியஸ் உள்ளிட்ட 18 நாடுகளின் அரச சபைகளின் உறுப்பினராக இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். இவற்றில் மொரீசியஸ், சிங்கப்பூர், ஃபிஜி, கயானா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் பிரதமர் போன்ற தலைமைப் பதவிக்கும் இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளனர்.
இந்த வெற்றிப் பாதையில் மேலும் ஒரு மைல்கல்லாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் அயர்லாந்தின் பிரதமராகவுள்ளார். அயர்லாந்தின் முதல் தன்பாலின உறவுப் பழக்கமுள்ள பிரதமர், அயர்லாந்தின் இளமையான பிரதமர் போன்ற இன்னும் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இவர்.
‘எனது தந்தை 5 ஆயிரம் மைல்கள் கடந்து வந்து இங்கே அயர்லாந்தில் குடியேறியுள்ளார். ஆனால் தன் மகன் அதன் தலைவர் ஆவான் என ஒருபோதும் அவர் நினைத்திருக்க மாட்டார்’ எனச் சொல்லும் லியோ வரத்கர், இந்தியத் தந்தைக்கும் அயர்லாந்துத் தாய்க்கும் பிறந்தவர். மருத்துவரான அவரின் தந்தை அசோக் வரத்கார் மும்பையைச் சேர்ந்தவர். செவிலியரான அவரது தாய் மிரிலியம் அயர்லாந்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபோது இவரும் காதலித்து மணமுடித்துக்கொண்டனர்.
பிறகு இந்தியா திரும்பிய இருவரும் மும்பையில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர். சில காலத்துக்குப் பின் மீண்டும் அயர்லாந்து திரும்பிய இந்தத் தம்பதியருக்கு 1979-ம் ஆண்டு பிறந்தார் லியோ. இந்து தந்தைக்குப் பிறந்த அவர் கத்தோலிக்க முறைப்படியே வாழ்ந்தார். அவர்களது ஒரே ஆண் மகனான லியோவை அவரது விருப்பத்தின் அடிப்படையில் வாழ அனுமதித்தனர்.
பள்ளிப் படிப்பு முடித்தவுடன், அயர்லாந்தின் புகழ்பெற்ற கல்லூரியான டிரினிட்டியில் சட்டம் பயின்றார் லியோ. இந்தக் காலகட்டத்தில்தான் லியோவுக்கு அரசியல் ஆர்வம் துளிர்த்தது. அயர்லாந்தின் பெரிய அரசியல் கட்சியான ஃபைன் கேயல் கட்சியின் இளைஞர் அமைப்பில் சேர்ந்து செயலாற்றத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் ஸ்வீடன் பிரமராக இருந்த ஃபிரெட்ரிக் ரெய்ன்ஃபெல்ட் தொடங்கிய ஐரோப்பிய மக்கள் கட்சியின் இளைஞர் அமைப்பின் அயர்லாந்து துணைத் தலைவராகவும் செயலாற்றி வந்தார். இந்தக் கட்சி ஐரோப்பாவில் 38 நாடுகளில் கிளைகளைக் கொண்டிருந்தது.
மேலும் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் பொருட்டு நடத்தப்படும் ‘வாஷிங்டன் அயர்லாந்து திட்ட’த்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அயர்லாந்திலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வாஷிங்டன் நகருக்கு உட்பட்ட இடங்களில் அரசுப் பணிகளில் நியமித்து அவர்களுக்குத் தலைமைப் பண்பை உருவாக்குவதுதான் இதன் நோக்கம். இந்தத் திட்டத்தில் ஆறு மாத காலம் செயலாற்றியுள்ளார் லியோ.
சட்டம் படித்த பிறகு தனது தந்தையைப் போல மருத்துவம் பயின்றுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 1999-ல் மருத்துவம் இரண்டாமாண்டு படிக்கும்போது தனது 20 வயதில் உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 380 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். 2004-ம் ஆண்டு ஃபிங்கல் கவுண்டி கவுன்சில் என்னும் உள்ளாட்சி சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக டெய்ல் எயிரான் என்னும் ஆட்சி மன்றத்துக்குள் உறுப்பினராக நுழைந்தார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஃபைன் கேயல் கட்சி தனிப் பெரும்பாண்மையுடன் ஆட்சியைப் பிடித்தபோது முதன்முறையாக லியோ போக்குவரத்துத் துறை அமைச்சரானார். ஆனால் சுகாதாரத் துறைதான் அவர் விருப்பமாக இருந்தது.
2014-ம் ஆண்டு அவருக்குச் சுகாதாரத் துறை பொறுப்பு கிடைத்தது. ‘ஒரு மருத்துவரால் சிலருக்குத்தான் உதவ முடியும். ஆனால் ஒரு சுகாதாரத் துறை அமைச்சரால் சுகாதாரத் திட்டத்திலேயே பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’ என 1999-ம் ஆண்டிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். சொன்னதுபோல பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இலவச மருத்துவச் சேவை உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மருத்துவத் துறையிலிருக்கும் வீண் செலவீனங்களைக் குறைத்தார். 2016-ம் ஆண்டு சமூகப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
உள்கட்சி அழுத்தத்தால் சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் என்டா கென்னி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினமா செய்தார். அதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கான உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. லியோ மற்றொரு அமைச்சரான சைமொன் கொவ்னியைத் தோற்கடித்தார். அவர் கட்சியின் 60 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய ஆதரவுடன் தலைவராகியுள்ளார். கூடிய விரைவில் அயர்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். அதற்கான கொண்டாட்டங்கள் அயர்லாந்தைத் தாண்டி இந்தியாவிலும் தொடங்கியிருக்கின்றன.