இளமை புதுமை

எகிறும் ஹாரி பாட்டர் ஃபீவர்

என்.கெளரி

ஹாரி பாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்டு’ புத்தகம் ஜூலை 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 2007-ல் வெளியான ஹாரி பாட்டர் தொடரின் கடைசி நாவலான ‘ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்’-க்குப் பிறகு இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிறது.

ஜே.கே. ரவுலிங், ‘ஹாரி பாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்டு’ என்ற புத்தகத்தை நாடகமாக எடுப்பதற்காக ஜான் டிஃப்பனி, ஜாக் திரோன் போன்றவர்களுடன் இணைந்து எழுதியிருக்கிறார். இந்த நாடகம் தற்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தின் திரைக்கதைதான் ‘ஹாரி பாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்டு’ என்ற புத்தகமாக வெளியாகியிருக்கிறது. அதனால், உலகம் முழுவதும் இருக்கும் ‘ஹாரி பாட்டர்’ வாசகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இந்தப் புத்தகத்துக்காகக் காத்திருந்தார்கள். சென்னையின் ‘ஹாரி பாட்டர்’ வாசகர்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதற்கு ‘பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி’யில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியே சாட்சி. சென்னையின் இளம் வாசகர்கள் பலரும் இந்தப் புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்திருக்கின்றனர். சிலர் ஹாரியின் மந்திர உலகில் பாதியில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ புத்தகத்தை ‘ஆர்டர்’ செய்துவிட்டு, தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

‘ஹாரி பாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்டு’ படித்துக்கொண்டிருக்கும் சில வாசகிகளின் கருத்துக்கள்:

பதினொன்றாம் வகுப்பு, சென்னை பப்ளிக் பள்ளி

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் ‘ஹாரி பாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்டு’ புத்தகத்தில் எல்லோரும் என்னென்ன விஷயங்கள் எதிர்பார்த்தார்களோ அத்தனையும் இருக்கின்றன. அடுத்தத் தலைமுறையின் புதிய கதாபாத்திரங்கள் இந்தப் புத்தகத்தில் ஆழமாகச் சித்தரிக்கப்பட்டிருக் கின்றன. அதேசமயம், நமக்குப் பிடித்த ஹாரி பாட்டர், ரான் வீஸ்லி, ஹெர்மியான் கிராஞ்சர் போன்றவர்களின் புதிய முகங்களையும் பார்க்க முடிகிறது. பொறுப்பற்ற மாணவர்களாகவே பார்த்துவந்த அவர்களை இந்தப் புத்தகத்தில் பெற்றோர்களாகப் பார்க்கிறோம். அல்பஸ், ஸ்கார்பியஸ் போன்ற புதிய கதாபாத்திரங்களை இதைவிட அழகாக எழுதியிருக்க முடியாது. ‘ஹாரி பாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்டு’ அது கிளப்பிய பரபரப்புக்கும் நீண்ட காத்திருப்புக்கும் தகுதியானதுதான்.

கிராஃபிக் டிசைனர், எஸ்பிஐ சினிமாஸ், சென்னை

ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு, ஜே.கே. ரவுலிங்கின் புத்தகம் வெளிவருகிறது என்ற செய்தியை நம்புவதற்கே எனக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. இப்போதைக்குப் புத்தகத்தின் ஒரு பாதியை படித்து முடித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், இதை ஒரு வழக்கமான ‘ஹாரி பாட்டர்’ புத்தக வரிசையில் சேர்க்க முடியாது. இது நாடகமாக எடுக்கப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப் புத்தகத்தில் நுழைவதற்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. முதலில் படிக்கும்போது, வினோதமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. ஆனால், போகப்போக, அடிப்படை கதாபாத்திரங்கள் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஹாரி இன்னும் பொறுப்பில்லாமல்தான் இருக்கிறான்.

ரான், ஹெர்மியான் கதாபாத்திரங்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். இதைத் தெரிந்தகொண்டவுடன் என்னால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. இதற்குமேல், புத்தகம் எப்படியிருக்கிறது என்று சொன்னால் அது மன்னிக்க முடியாத சாபமாகிவிடும். இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், ஹாரி தனது கடந்த காலப் பேய்களுடனும் வருங்காலத்தின் ரகசியங்களுடனும் போராடிக்கொண்டிருக்கிறான்.

இது பழைய ஹாரி பாட்டர் நாவல் போல இல்லையென்று வருத்தப்படும் ஹாரி பாட்டர் வாசகர்கள் எல்லோருக்குமே ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். இது நிச்சயமாகப் பழைய ஹாரி பாட்டர் கிடையாது. இது ஒரு புதிய கதை. புதிய வாழ்க்கை. யாருக்குத் தெரியும், மறுபடியும் நாம் ஹாரி பாட்டரைப் பார்ப்போமா, பார்க்க மாட்டோமா என்று. அதனால், இந்தப் புத்தகத்தைக் கொண்டாடுவோம். இதிலும் கொண்டாடுவதற்கான அம்சங்கள் நிறைய இருக்கின்றன.

ஒன்பதாம் வகுப்பு, செட்நாடு வித்யாஷ்ரம்

இந்தப் புத்தகம் ஹாரியையும், அவனுடைய இரண்டாவது மகன் அல்பஸ் செவரஸ் பாட்டர் வாழ்க்கையையும் பின்தொடர்கிறது. ஜே.கே. ரவுலிங் எழுத்தில் பழைய ‘மேஜிக்’ இன்னும் இருக்கிறது என்றுதான் சொல்வேன். அவர் கதாபாத்திரங்களைக் கையாண்டிருக்கும் விதத்திலும் பழைய பேரார்வம் வெளிப்படுகிறது. ‘பாட்டர்’ வாசகர்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களை எல்லாம் மீண்டும் இந்தப் புத்தகத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படிக்க ஆரம்பித்ததிலிருந்து பயங்கரமான திருப்பங்களுடனும், கற்பனைக்கு எட்டாத வகையிலும் கதையின் நிகழ்வுகள் மயக்குகின்றன. இந்தப் புத்தகம் நாடகம் எடுப்பதற்காக எழுதப்பட்டிருப்பதால் ஒருவிதமான படப்படப்புடனும், பல விதமான உணர்வுகளைக் கடத்தும்படியும் எழுதப்பட்டிருக்கிறது. ஹாரி பாட்டரின் மந்திர உலகிற்கு மீண்டும் இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்கிறது.

SCROLL FOR NEXT