இளமை புதுமை

இசைப் புயலுக்கே புதுமை!

ம.சுசித்ரா

இசைக் கருவிகள் ஏதுமின்றிப் பல குரல்கள் ஒருங்கிணைந்து இசைக் கருவிகளுக்கு இணையான ஒலிகளை எழுப்பிப் பாடுவது ‘அக்கபெல்லா’ (Acapella) பாணி. தற்போது அனைவரின் இதயங்களையும் வருடிக்கொண்டிருக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் அக்கபெல்லா பாணி அங்குமிங்கும் தூவப்பட்ட பாடல்தான், ‘அழகியே’. பாடலில் முதல் 20 விநாடிகளுக்கு வரும் ஹம்மிங், கோரஸோடு இணைந்த சப்தங்கள் யாவும் குரல்களே. அதன் பின்பு கிட்டாரோடு பாடல் களைகட்டுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இது போன்று பல சோதனை முயற்சிகளைத் தன்னுடைய 25 ஆண்டுகால இசைப் பயணத்தில் செய்துகொண்டே இருக்கிறார்.

டேக் இட் ஈஸி!

திரையிசையில் மட்டுமின்றி கோக் ஸ்டூடியோ @ எம்டிவி (Coke Studio @ MTV), எம்டிவி அன்பிளக்ட் (MTV Unplugged) போன்ற இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும் உலக இசை வடிவங்களின் சங்கமத்தை நிகழ்த்துகிறார். இரு மாதங்களுக்கு முன்புகூட காதலன் பட ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்குப் புதிய பாடல் வரிகளைத் தரும்படி தன்னுடைய இசை ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்கள் வழியாக நேரடியாகக் கேட்டிருந்தார். அதில் அட்டகாசமான வரிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுடையப் பெயரையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுப் பாராட்டியிருந்தார்.

எம்டிவி அன்பிளக்ட் நிகழ்ச்சியில், “ஹிலாரி கிளிண்டன் தோத்துப்போனா டேக் இட் ஈஸி பாலிஸி… டொனால்ட் டிரம்பு பிரசிடெண்ட் ஆனா டேக் இட் ஈஸி பாலிஸி… 500 ரூபா 1000 ரூபா செல்லா போனா டேக் இட் ஈஸி பாலிஸி…” என அரசியல் டிரெண்டைக் கலாய்த்து ஊர்வசி பாடலை மீட்டுருவாக்கம் செய்தார். பாடல் வரிகளில் மட்டும் புதுமையைப் புகுத்தாமல் சுரேஷ் பீட்டர்ஸ், ரஞ்சித் பாரட் ஆகியோரையும் மேடை ஏற்றிப் பாடவைத்தார். பாடலில் மேற்கத்திய சிம்ஃபனி இசை பாணியையும், அராபிய இசையையும், சாரங்கி இசைக் கருவியின் அபாரமான நாதத்தையும் இசைகூட்டி, மெருகேற்றி முற்றிலுமாகப் புதிய வடிவில் ஊர்வசியைத் தந்தார்.

ஆபீஸே ஆர்கெஸ்ட்ரா!

இம்முறை ரஹ்மானையே ஆச்சரியப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மக்கள் காத்திருக்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 17 அன்று பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் ரஹ்மான். அவரை வரவேற்கப் புதிய இசை முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நடைபெறவிருக்கும் ‘மாத்ருபூமி ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் 2017’-ஐத் தொகுத்து வழங்கவிருப்பது பிரபல மலையாள வானொலி நிறுவனமான ‘99.6 கிளப் எஃப்.எம்.’ (99.6 Club FM UAE). ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக அவருடைய முதல் படப் பாடலான ‘ருக்குமணி ருக்குமணி’யின் கவர் வெர்ஷனை ஃபேஸ்புக்கில் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

சுவாரசியம் என்னவென்றால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய அலுவலகத்தில் உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்திப் பாடலைப் படு கொண்டாட்டமாக இசையமைத்திருக்கிறார்கள். ‘ARR’ என்பதை விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் ஓசை, கைதட்டிக்கொண்டே அலுவலக லேண்ட்லைன் ஃபோனின் ரிசீவரை எடுத்துவைக்கும் ஒலி, ஸ்டேப்லரை இயக்கும் சப்தம், கோப்பையில் காபி உறிஞ்சும் ஒலி என ‘ஆபீஸையே ஆர்கெஸ்ட்ராவாக மாற்றிவிட்டார்கள். அதிலும் பாடலை லாவகமாகப் பாடும் ஆர்.ஜெ. பவித்ராவுக்குத் தனியாக லைக்ஸ் குவிகிறது!

SCROLL FOR NEXT