இளமை புதுமை

ஃபேஸ்புக் தீபாவளி

ரஞ்சனி ராமநாதன்

நாம் எல்லோரும் தீபாவளியை புத்தாடை அணிந்தும், இனிப்பைப் பகிர்ந்து கொண்டும், பட்டாசுகள் வெடித்தும்தான் கொண்டாடுவோம். சமூக வலைத்தளங்களில் சில மாதங்களாக அதிகம் பகிரப்படும் பிரிங்கிங் ஹியுமானிட்டி பேக் சாலஞ்ச் (Bringing humanity back challenge) என்ற சவாலின் மூலம் ஏழைகளுக்கு உதவிவருகிறார் நடிகர் மற்றும் சமூக ஆர்வலரான வருண் ப்ரூதி.

சமூகம் சார்ந்த பல சோதனைகளை வீடியோ பதிவுகளாகத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துவரும் இவர் தொடங்கிய சவால்தான் அது. இந்தியாவில் மட்டுமில்லாமல் கடல் கடந்து பல நாடுகளில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன இவரின் வீடியோ பதிவுகள். அதிக கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து ஒரு நாளுக்கு ஓரிரண்டு பொருட்களை மட்டுமே விற்றுக் கஷ்டப்படும் பலூன் விற்பனையாளர்கள், கலரிங் புக் விற்பவர்கள், காற்றாடி விற்பவர்கள் ஆகியோருக்குப் பணம் கொடுத்து மகிழ்விக்கிறார் வருண். இந்த ஆண்டு தன் தீபாவளியை இப்படித்தான் கொண்டாடப் போகிறார் இவர்.

இது என்ன புது சவால்?

இந்தச் சவாலில் பங்குபெறத் தன்னால் முடிந்த உதவியைப் பொருட்களாகவோ, பணமாகவோ ஏழை மக்களுக்குக் கொடுத்து, அவர்களுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்து அவர்களின் சந்தோஷத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்தச் சவாலை ஏற்பவர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தச் சவாலை முடித்துக்காட்ட வேண்டும்.

இது மட்டுமின்றி, சமூகம் எப்படி செயல்படுகிறது என்பதை சமூகத்தில் ஒருவராக இருந்து பார்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பல வீடியோ பதிவுகளைப் பகிர்ந்துவருகிறார் வருண். உதாரணமாக, ஆம்புலன்ஸிற்கு அனைவரும் வழிவிடுகிறோமா, போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒரு உயிர் பலியாவதை நாம் எப்படி இன்னும் அனுமதிக்கிறோம் என்பதைக் குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் வீடியோக்களை பதிவு செய்துவருகிறார்.“இந்தச் சவால் ஏழை எளிய மக்களுக்கு வெறும் பணம் கொடுப்பதற்காக இல்லை, அன்பையும் பாசத்தையும் பகிர்வதற்கு” என்கிறார் வருண்.

வருண்

SCROLL FOR NEXT