வறுமை காரணமாகப் படிக்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி அறிவை தருகிறது சென்னையை அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டுவரும் சேவாலயா தொண்டு நிறுவனம்.
கசுவா என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் வாடகை கட்டடத்தில், ஐந்து ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் விடுதியோடு 1988ஆம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கியது சேவாலயா. இப்போது 200 ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப் படிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் சூழ்நிலையில் மகாகவி பாரதியார் பள்ளியில் 38 கிராமங்களைச் சேர்ந்த 1,720 மாணவ மாணவிகள் பிளஸ் டூ வரை படிக்கின்றனர். சேவாலயாவில் உள்ள ஆதரவற்ற 200 மாணவர்கள் ஆதரவற்ற முதியோர்கள், மதிய உணவு எடுத்து வர முடியாத மாணவர்கள், பணியாளர்கள் என சுமார் தினந்தோறும் 400 பேருக்கு இங்கு உணவு அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள், இங்குப் படிக்கும் குழந்தைகளுக்காகச் சராசரியாக 6 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. நன்கொடை மூலம் செலவைச் சமாளிப்பதாகக் கூறுகிறார் இந்த அமைப்பின் நிறுவனர் முரளிதரன்.
கிராமப்புற சூழ்நிலை, வறுமை காரணமாக சில மாணவர்கள் பள்ளி படிப்புக்கு பிறகு படிக்க முடியாமல் போகும் நிலையும் இங்கு உள்ளது. இதைப் போக்க சமுதாயக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.