பள்ளி ஆண்டு விழா என்றாலே கொண்டாட்ட மாகத்தான் இருக்கும். அதிலும் அது இசைப் பள்ளியாக இருந்தால்? அதிலும் உலகத் தரத்திலான இசைப் பள்ளியாக இருந்தால், கொண்டாட்டங்களுக்குக் கேட்கவா வேண்டும்? ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் கன்சர்வேடரி இசைப் பள்ளியில்தான் ஓப்ரா சீன்ஸ் 2017 என்னும் தலைப்பின்கீழ் இசை, பாட்டு, நடனம், நாடகம் எனக் கலைகளின் சங்கமம் சமீபத்தில் நிகழ்ந்தது.
இசை சங்கமம்
இசைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் தற்போதைய மாணவர்களுமே நிகழ்ச்சிகளை மிகவும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் தயாரித்து வழங்கினார்கள். மாணவர்களே வழங்கிய நிகழ்ச்சிகளைத் தவிர, வயலின் கலைஞர், கஸல் இசைப் பாடகர், மேற்கத்திய இசைக் கலைஞர்கள் எனப் பலரும் பல்வேறுபட்ட இசை பாணிகளை வாசித்ததால், ஒரே மேடையில் பல இசை முகங்களின் தரிசனமும் கிடைத்தது.
ஜோகன் ஸ்ட்ராஸ் ஜூனியர் வழங்கிய ஜெர்மன் ஓப்ரட்டா ரசிகர்களை மெய்மறந்து கைதட்ட வைத்தது. தொடர்ந்து அரங்கேறிய டை ஃபிலாடர்மாஸ் நாடகத்தையும், நள-தமயந்தி சரித்திரத்தை ஓப்ரா வடிவிலும் அரங்கேற்றி பிரமிக்கவைத்தார்கள் மாணவர்கள்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சிந்தியா ஸ்மித், “பழமையான இசைப் பாடல் வடிவத்தில் நாடகத்தின் காட்சிகளைத் தத்ரூபமாக மேடையில் கொண்டுவருவதற்கு ரொம்பவே முயன்றோம்” என்றார். இவர் கே.எம். பள்ளின் குரல் வல்லுநருடன் இணைந்து, ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு, வெவ்வேறு வயது நிலைகளில் இருக்கும் 36 மாணவர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்காகப் பயிற்சி செய்துள்ளார்.
ஓப்ராவில் அரங்கேறிய நளசரிதம்
சச்சின் சங்கர் மன்னத், கேஎம் பள்ளியின் முன்னாள் மாணவர், இவர் வழங்கியது நளசரிதம். முற்றிலும் இந்திய கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கும் நளன், தமயந்தி கதையை, வால்ட் டிஸ்னியின் உலகம், நள, தமயந்தி சரித்திரத்தில் வரும் நட்சத்திரங்களுக்கு, சின்ட்ரல்லா கதையில் வரும் நட்சத்திரங்கள், தேவதை என மேற்கும் கிழக்கும் சேர்ந்த கலவையாகப் பிரம்மாண்டமாக நமக்கு நன்கு அறிந்த நள தமயந்தி சரித்திரத்தை மீட்டுருவாக்கம் செய்து அசத்தினர்.
“ராஜா ரவிவர்மாவின் ஹம்ச தமயந்தியை அடியொற்றி இந்தப் படைப்பைத் தயாரித்தேன். ஆனால், இந்தியத் தன்மையோடு முழுக்க முழுக்க மேற்கத்திய இசைப் பாடல் நாடக பாணியில் இதைக் கொடுத்தோம். சில காட்சிகளுக்குப் புகழ்பெற்ற ஷ்ரக், தி லையன் கிங் போன்ற ஆங்கிலப் படங்களிலிருந்தும் சில இசைக் கோப்புகளைப் பயன்படுத்திக் கொண்டோம் என்றார் மன்னத்.
இந்தத் தயாரிப்புக்காக 13 மாணவ நடிகர்களுடன் சேர்ந்து 2 மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் மன்னத். ஏ.ஆர்.ரஹ்மானும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் ஷங்கரும். மேற்கையும் கிழக்கையும் கலையின் மூலமாக கைகோக்க வைத்த இந்த முயற்சியைப் பெரிதும் ரசித்தார்கள்எப்போதுமே புதிய முயற்சிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் ரசிகர்களுக்கும் முற்றிலும் புதிய அனுபவத்தை உண்டாக்கியது ஓப்ரா இசைப் பின்னணியில் அரங்கேறிய நளதமயந்தி சரித்திரம்.