இளமை புதுமை

அலையோடு விளையாடு! 17 - கங்கை சாகசம் நிறைவு: வங்கத்தில் சங்கமித்தோம்

குமரன்

கங்கையின் நதிமூலத்தில் தொடங்கி, இதோ அது கடலில் சங்கமிக்கும் கங்கா சாகரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். வங்காள‌ விரிகுடாவில் கங்கை ஆறு கலக்குமிடமே ‘கங்கா சாகர்'. இந்தியாவில் புனிதமாகவும் உலகெங்கும் பிரபலமாகவும் அறியப்பட்ட பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான கங்கையை பேட்லிங் பலகை மூலம் கடந்து, எல்லைகள் இல்லாத கடலில் அது கலந்து சங்கமிக்கும் புள்ளியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும்போது கங்கையின் முகத்துவாரத்தை எங்கள் குழு வெற்றிகரமாகத் தொட்டிருக்கும். உலகின் மிக நீண்ட பேட்லிங் சாகசப் பயணங்களில் ஒன்று இது.

உச்சியிலிருந்து கங்கை ஆறு 13,000 அடி உயரத்தில் கௌமுக் என்ற இடத்தில் தோன்றுகிறது. அங்கிருந்து 260 கி.மீ. தொலைவில் உள்ள தேவப்பிரயாகையில்தான் ஒரு ஆறாக கங்கை உருமாற்றம் அடைகிறது. இடைப்பட்ட தொலைவில் இமயமலையின் பல்வேறு பகுதிகள் வழியாக கங்கை பாய்கிறது. இந்தப் பகுதிகளை நடந்தும், சைக்கிள் மூலமாகவுமே கடந்தோம். அதற்கு முக்கியக் காரணம் எங்களுடைய இந்த மொத்தப் பயணமுமே பசுமை வழியில் நடைபெற வேண்டும், மனித உழைப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்ததால்தான்.

தேவப்பிரயாகையில் இருந்து ரிஷிகேஷ்வரை 60 கி.மீ. தொலைவுக்கு கரடுமுரடான பாறைகள் இடையே தண்ணீர் அதிவேகமாகப் பாய்ந்துவருகிறது. இந்தப் பகுதியில் ஆற்றின் ஆழம் அதிகமிருக்காது. அடியில் என்ன இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரியாது. அதனால் வழக்கமான பேட்லிங் பலகையைக் கொண்டு, இங்கே பேட்லிங் செய்ய முடியாது. அதனால், காற்றடைக்கப்பட்ட பேட்லிங் பலகைகளில் பேட்லிங் செய்தோம். இந்தப் பகுதியில் முதன்முறையாக பேட்லிங் செய்தது நாங்கள்தான்.

ஹரித்வாரில் இருந்து, மேற்கு வங்கத்தின் வங்காள‌ விரிகுடாவில் கங்கை ஆறு சங்கமிக்கும் கங்கா சாகர் வரையிலான 2500 கி.மீ. தொலைவை வழக்கமான பேட்லிங் பலகையைக் கொண்டு கடந்து, இதோ எங்கள் பயணத்தை முடிக்கும் தறுவாய்க்கு வந்துவிட்டோம்.

ஓங்கில்கள் கணக்கெடுப்பு

கடைசி கட்டப் பயணத்தில் பிரம்மாண்ட நிலக்கரி சரக்குக் கப்பல்கள், மீன்பிடிப் படகுகள், மீனவக் கிராமங்கள், சுழல்காற்று என கலவையான பல விஷயங்களைக் கடந்து கங்கையின் முகத்துவாரத்தை அடைந்தோம். இந்தப் பயணத்தில் நம்முடைய ‘தேசிய நீர் உயிரின'மான கங்கை ஓங்கில்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறோம். பேட்லிங் பலகை மூலம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதன்முறை. 800-க்கும் குறையாத கங்கை ஓங்கில்களைப் பதிவு செய்திருக்கிறேன். இவை அழிவின் விளிம்பில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கணக்கெடுப்பு விவரம் உலக இயற்கை நிதியத்துக்கு வழங்கப்பட உள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு சாத்தியமானதற்குக் காரணம் உலக இயற்கை நிதியத்தின் இயக்குநர் சுரேஷ்பாபு, இந்தியாவின் ‘ஓங்கில் மனிதர்' என்று புகழப்படும் பத்மஸ்ரீ ஆர்.கே. சின்ஹா, என்னுடைய அம்மா ஆகிய மூவருக்கும் இந்த இடத்தில் என்னுடைய நன்றியைப் பதிவு செய்கிறேன்.

கங்கையைக் காப்போம்

எங்கள் பயணத்தின் குறிக்கோள்களில் முக்கியமானது கங்கையில் சாக்கடைக் கழிவு நீர் கலப்பதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இதற்காக ‘வாட்டர்எய்ட்' நிறுவனத்துடன் இணைந்து கங்கையின் 10 வேறுபட்ட இடங்களில் தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்துள்ளோம். பயணம் முடிந்த பிறகு இந்தத் தண்ணீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவைப் பெற்று கங்கையைத் தூய்மைப்படுத்துவது, கங்கையில் கழிவுநீரைக் கலக்காமல் இருப்பது தொடர்பாக அரசுக்கு வலியுறுத்த உள்ளோம். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, கங்கையில் பிளாஸ்டிக் கழிவைக் கொட்டுவதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் நடத்தியுள்ளோம்.

தடைகளைத் தாண்டி

இந்தப் பயணத்தில் இயற்கைத் தடைகள், நடைமுறைச் சிக்கல்கள், நோய், பிரச்சினைகள், ஆபத்துகள் போன்ற பலவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். பல நாட்கள் மிகக் குறைந்த தொலைவே பேட்லிங் செய்ய முடிந்தது. சில நாட்களோ ஒரே மூச்சில் பல கி.மீ. தொலைவைக் கடந்திருக்கிறோம். கங்கை ஆற்றின் மொத்தத் தொலைவு 2525 கி.மீ. இந்தத் தொலைவில் சராசரியாக 5 லட்சம் முறை பேட்லிங் துடுப்பை வலித்திருப்போம். கங்கையின் தோற்றம் முதல் முடிவுவரை முழுவதும் பேட்லிங் மூலம் கடந்த முதல் பயணம் இது.

நான், ஷில்பிகா கௌதம், வெள்ளைக்காரர் ஸ்பைக் ஆகியோர் கொண்ட குழுவாக இதைச் சாதித்திருக்கிறோம். பேட்லிங் பயணத்தில் இது ஓர் உலக சாதனை. செப்டம்பர் மாத இறுதியில் இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கியதற்கு முன்னர், உலகில் வேறு யாரும் இந்தச் சாதனைக்கு முயற்சித்துப் பார்க்கவில்லை. இப்படியாக ஒரு நீண்ட சாகசப் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.

தொழில்முறை நிலவியலாளரான நான், என்னுடைய நிறுவனத்தில் சம்பளமில்லாமல் மூன்று மாத விடுமுறை எடுத்தே இந்தச் சாகசத்தை நிறைவு செய்தேன். அத்துடன், இந்தப் பயணத்தை மேற்கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் செலவும் ஆகியிருக்கிறது. அனைத்தையும் தாண்டி இந்தப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைவதற்கு பயணம் முழுவதும் எங்களை அடிக்கடி வந்து பார்த்து உற்சாகப்படுத்தியவை ஆற்று ஓங்கில்கள். அத்துடன் முகம் தெரியாத உங்களைப் போன்ற வாசகர்களும்தான்.

> ஆறு தொடங்குமிடத்தில் இருந்து கங்கை ஆற்றின் முழு தொலைவையும் பேட்லிங் மூலம் கடந்தது இதுவே முதன்முறை.

> பேட்லிங் பயணத்தில் கங்கை ஓங்கில்களைக் கணக்கெடுப்பு நடத்தியது இதுவே முதன்முறை.

> ‘தூய்மையான கங்கை ஆறு' தொடர்பான விழிப்புணர்வை இந்தப் பயணம் முழுவதும் மேற்கொண்டோம்.

> கங்கையில் மனிதக் கழிவுகளைக் கலக்காமல் இருப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘வாட்டர்எய்ட்' தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டோம்.

> கங்கை ஆற்றுச் சூழலின் தற்போதைய நிலை, அதில் மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றைப் புரிந்துகொள்வதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

சில ‘முதல் சாதனைகள்'

தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

SCROLL FOR NEXT