இளமை புதுமை

விந்தை உலகம்

செய்திப்பிரிவு

அதிக உயரத்தால் விடுவிக்கப்பட்ட கைதி

தலைவர்கள் பிறந்தநாளுக்கு நல்லெண்ண அடிப்படையில் கைதிகளை நம் நாட்டில் விடுதலை செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் ஒரு கைதியை வைத்துச் சமாளிக்க முடியாமல் விடுதலை செய்திருக்கிறார்கள். சமாளிக்க முடியாத அளவுக்கு அந்தக் கைதி என்ன செய்தார், எனக் கேட்கிறீர்களா? அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மிதமிஞ்சிய அவர் உயரத்தைத்தான் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

நியூட்டன் அபோட் நகரைச் சேர்ந்தவர் ஜூட் மெட்காப் (23), கொலை மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 7அடி 2அங்குல உயரமுடைய அவருக்கு உரிய படுக்கை வசதி சிறையில் இல்லை. சீருடையும் அளவு போதவில்லை. கிளைன்ஃபெல்ட்டர் (Klinefelter) என்ற ஒருவிதமான வளர்ச்சிக் குறைபாடுதான் அவரின் இந்த அபரிமித உயரத்திற்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். இந்த நோய்க்கூறு காரணமாக அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

யானையின் ஓவியங்கள் விற்பனைக்கு

தாய்லாந்தில் சீயாங்க் மாய் யானை முகாமைச் சேர்ந்த சுதா என்னும் குட்டி யானை ஓவியம் வரையும் Youtube வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தைக் கலக்கியது. இப்போதுதான் அந்த வீடியோ ஃபேஸ்புக்கில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைத் தாண்டி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து வேட்டையாடப் படுவதால் யானைகளில் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகின்றன.

யானைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் ஒரு அரசுசாரா நிறுவனம், சுதாவின் ஓவியங்களை விற்பனைக்கு வைத்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை யானைகளைப் பாதுகாக்கும் செலவுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்த ஓவியனைப் போல கைவண்ணம் கொண்டுள்ள சுதாவின் ஓவியங்கள் 30 ஆயிரம் இந்திய ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன.

அமைதியை மேம்படுத்தும் நடவடிக்கை

கொரியப் போரில் பலியான வீரர்களின் எலும்புக்கூடுகளை இறுதிச் சடங்குக்காக 60ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாடான சீனாவுக்குத் தென்கொரியா அனுப்பி வைத்துள்ளது. சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையே கடந்த 1950-1953 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் 437 வீரர்கள் பலியாயினர்.

இந்தப் போர் வடகொரிய எல்லையில் நடந்தது. ராணுவ வீரர்களின் எலும்புக்கூடுகள் தென் கொரியாவில் உள்ள இன்சியோனிலிருந்து விமானம் மூலம் ராணுவ மரியாதையுடன் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. சீனாவில் உள்ள ஷென்யாங் என்ற இடத்தில் உள்ள போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

லண்டனில் பிறந்திருக்கும் டைனோசர் குட்டி

சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகையே கலக்கிய ஜூராசிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா? அதில் விஞ்ஞானிகள் டைனோசரை சாகசமாக உருவாக்குவார்கள். கடைசியில் அது விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் அதுபோல நிஜ வாழ்க்கையில் நடக்காது என நினைத்திருப்போம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் ஒரு டைனோசர் குட்டியை உருவாக்கியிருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இதை உருவாக்கியுள்ளனர். இந்த டைனோசர் குட்டிக்கு ஸ்பெட் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தக் குட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. டைனோசரின் மரபணு தீக்கோழி ஒன்றின் கருவில் செலுத்தி விஞ்ஞானிகள் இதை உருவாக்கியுள்ளதாக உயிரியல் பேராசிரியரான டொக்டர் ஜெரார்ட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT