புதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. ‘டிஸ்கனெக்ட்’ எனும் இந்த டிஜிட்டல் பத்திரிகையை ஆன்லைனில் படிக்க முடியாது. ஆஃப்லைனில் மட்டும்தான் படிக்க முடியும். அதாவது, இணைய வசதியைத் துண்டித்தால் மட்டுமே இந்தப் பத்திரிகையைப் படிக்க முடியும். இது ஓர் ஆச்சரியமான முரண்.
இந்த முரணை மையமாகக் கொண்டே கிறிஸ் போலின் (Chris Bolin) என்பவர் புதுமையான இந்த டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் பத்திரிகைக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (https://thedisconnect.co/one/) நுழைந்ததுமே தடித்த எழுத்துகளில் ‘தி டிஸ்கனெக்ட்’ எனும் பெயர் வரவேற்கிறது. அதன் மீது இதழ் ஒன்று ‘குளிர் காலம் 1’ எனப் பருவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இதழின் உள்ளடக்கத்தைத் தேடினால், ஆச்சரியமே உண்டாகும். ஏனெனில், “தயவுசெய்து இணைய வசதியைத் துண்டிக்கவும்” எனும் வாசகமே கண்ணில்படும். இது பார்வைகள், கதைகள், கவிதைகள் கொண்ட ஆப்லைனில் மட்டுமே படிக்கக்கூடிய பத்திரிகை என்ற விளக்கமும் அதனுடன் இடம்பெற்றிருக்கும். எனவே, இந்தப் பத்திரிகையைக் காண, இணைய வசதியைச் செயலிழக்கச் செய்யவும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்தக் கட்டளைக்கேற்ப இணைய வசதியைத் துண்டித்தால் மட்டுமே இதழின் உள்ளடக்கத்தை வாசிக்க முடியும். அப்படித்தான் போலின் இந்த டிஜிட்டல் இதழை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
இணைய வசதியைச் செயலிழக்கச் செய்ததுமே, வழக்கமான டிஜிட்டல் இதழ் போல டிஸ்கனெக்ட் இதழின் கட்டுரைகள் திரையில் தோன்றுகின்றன. கதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆக, இணையத்திலிருந்து வாசகரைக் கொஞ்ச நேரமாவது விடுவிப்பதுதான் இந்தப் பத்திரிகையின் நோக்கம். டிஜிட்டல் இதழ் என்றாலும் அதை வாசித்து மகிழ இணையத்தை விட்டு வெளியேற வேண்டும். வீட்டிலும் அலுவலகத்திலும் டெஸ்க்டாப், வெளியே சென்றால் ஸ்மார்ட்போன் எனப் பெரும்பாலான நேரம் நாம் தொழில்நுட்பத் திரைகளில் மூழ்கியிருக்கும் காலத்தில், இணையத்திலிருந்து வெளியேறத் தூண்டும் ஒரு விஷயம் தேவைதான் அல்லவா? அந்தத் தூண்டுதலும் இணையத்திலிருந்தே வருவது கொஞ்சம் சுவாரசியமான முரண்தான். அதைத்தான் போலின் தனது பத்திரிகை மூலம் செய்திருக்கிறார்.
போலின் ஒரு மென்பொறியாளர். அந்தத் திறனைக் கொண்டுதான் இந்தப் பத்திரிகையை உருவாக்கி இருக்கிறார். “இணைய நுட்பம் நல்லதுதான் என்றாலும், பலரும் அதிலேயே முடங்கிக் கிடப்பது பிடிக்கவில்லை” என்கிறார் அவர். இணையத்துக்கு அடிமையாகி விடும் இந்தத் தன்மையைத் தனது சொந்த வாழ்க்கையில் உணர்ந்ததன் மூலமே இது பற்றித் தீவிரமாக யோசித்திருக்கிறார். “மணிக் கணக்கில் இணையத்தில் உலவியபடி இருப்பதால், நேரம்தான் வீணாகிறேதே தவிர உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. இணையத்தில் கவனச்சிதறலைக் குறைக்க உதவும் சேவைகளும் செயலிகளும் பல இருந்தாலும், சில நேரம் இணையத்தைத் துண்டிப்பதே செயல்திறனுக்கான சிறந்த வழி. இதை உணர்த்தவே, டிஸ்கனெக்ட் பத்திரிகை” என்கிறார் அவர்.
எல்லாம் சரி, இணைய வசதி இல்லாமல் பத்திரிகையைப் படிப்பது தொழில்நுட்ப நோக்கில் எப்படிச் சாத்தியம்? பிரவுசர்களில் இருக்கும் குறிப்பிட்ட வசதியைப் பயன்படுத்தி இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார். இணையதள முகவரியை கிளிக் செய்ததுமே மொத்தப் பத்திரிகையும் பதிவிறக்கம் ஆகிவிடுகிறது. ஆனால், அந்த உள்ளடக்கம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறது. இணைய வசதி துண்டிக்கப்பட்ட செய்தியை பிரவுசர் உணர்ந்ததும் இந்த உள்ளடக்கம் தோன்றுகிறது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு இணையதளத்தை போலின் உருவாக்கியிருந்தார். ஆப்லைன் எனும் பெயரிலான அந்த இணையதளத்தையும், இணைய வசதி துண்டித்தால் மட்டுமே அணுகும் வகையில் வடிவமைத்திருந்தார் (https://chris.bolin.co/offline/). அந்தத் தளத்தில் நுழைந்ததுமே இந்தப் பக்கத்தைப் பார்க்க நீங்கள் இணையத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் வாசகம் தோன்றும். இணையத்தைத் துண்டித்தால்தான் அந்தத் தளத்தையும் அணுக முடியும்.
அதன் பிறகு, இணையத்தில் நேரத்தை வீணடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கட்டுரையை வாசிக்கலாம். சோதனை முறையில் அமைக்கப்பட்ட இந்தத் தளத்தின் தொடர்ச்சியாகவே தற்போது ஆஃப்லைனில் வாசிக்கக்கூடிய டிஜிட்டல் பத்திரிகையாக உருவாகியிருக்கிறது. இந்தக் காலாண்டு இதழைத் தொடர்ந்து புதிய அம்சங்களுடன் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான நிதி திரட்டும் வழிகளையும் அவர் தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
சரி, இந்தப் புதுமை இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? அமோகமாக இருக்கிறது. ஆனால், விமர்சனமும் இல்லாமல் இல்லை. சிலர், ‘இணையப் பழக்கத்தைக் குறைப்பதுதான் நோக்கம் என்றால், அச்சுப் பத்திரிகை நடத்த வேண்டியதுதானே, ஏன் இந்த டிஜிட்டல் பத்திரிகை?’ எனக் கேலியாகக் கேட்பதாக கூறுகிறார் போலின். சிலர் இதற்கு மாறாக, இந்த முயற்சியின் தன்மையைப் புரிந்துகொண்டு ஆதரிப்பதாகவும் கூறுகிறார்.
இணையம் சாத்தியமாக்கிய புதுமையில் இதுவும் ஒன்று!