இளமை புதுமை

காபி பாதி தனிமை மீதி!

டி.கே

பெ

ருநகரங்களில் கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதை இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவதில்லை. தனிமையையும் கட்டற்ற சுதந்திரத்தையும் விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு இந்தப் பொதுவெளிகள் ஒருவித அசவுகரியத்தையே கொடுத்துவந்துள்ளது. மனதாரப் பேசிக்கொள்ள இதுவரை இருந்துவந்த வெற்றிடத்தைப் போக்குவதில் காபி ஷாப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், காதலர்கள் என யாராக இருந்தாலும், உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொள்ளும் இடங்களாக காபி ஷாப்புகள் மாறிவருகின்றன.

சூரிய உதயம் ஆரம்பிக்கும் பொழுதில் தொடங்கப்படும் காபி ஷாப்புகள், இரவு 11 மணியைத் தாண்டியும் பரபரப்பாகவே காட்சியளிக்கின்றன. ஒரு காபியோ கூல் டிரிங்கோ வாங்கிவிட்டு, எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம். அந்நியர்களின் பிரவேசம் கிடையாது, உறுத்தலான பார்வை கிடையாது. அவரவர் வேலையில் தடங்கல்கள் என்ற பேச்சுக்கெல்லாம் காபி ஷாப்புகளில் இடமில்லை.

இவ்வளவு தனிமை தரும் இங்கு செல்ல வேண்டுமானால், நம் பாக்கெட்டுகளில் காந்தித் தாத்தா பளிச்செனச் சிரிக்க வேண்டும். சாதாரண நாயர் கடை காபிக்கு 15 ரூபாய் இருந்தால் போதும். பெரிய ஓட்டல்கள் என்றால் சில பத்து ரூபாய்கள் வேண்டும். ஆனால், காபி ஷாப்புகள் என்றால் நூறுகளில் பணம் வேண்டும். கும்பகோணம் டிகிரி காபி முதல் கோல்டு காபி வரை வகை வகையாக காபிகள் கிடைக்கும். அப்படியே லஞ்ச், டின்னர் முடிக்க உணவு வகைகள், ஜூஸ்கள், பீட்சா, பர்க்கர் என நொறுக்குத் தீனிகளுக்கும் பஞ்சம் கிடையாது.

குறைந்த விலையில் காபி, ஜூஸ், உணவுகள் எத்தனையோ ஒட்டல்களில் கிடைத்தாலும் நிறையப் பணம் வசூலிக்கும் காபி ஷாப்புகளுக்கு ஏன் வர வேண்டும்? இதற்கு ஒரே காரணம் தனிமை. இங்கே கிடைக்கும் தனிமை காரணமாகவே நண்பர்கள், காதலர்கள் காபி ஷாப் வர ஆர்வம் காட்டுகிறார்கள். யுவன், யுவதிகளும் காபி ஷாப்புகளுக்கு வருவதைச் சமூக அந்தஸ்தின் குறியீடாகவும் நினைக்கிறார்கள்.

SCROLL FOR NEXT