தகவல்களை அணுகுவதற்கான உலகளாவிய வசதி, இணையத்துக்கு முன்பே பலவிதங்களில் உருவகப்படுத்தப் பட்டிருந்தாலும், இத்தகைய வசதியைச் சாத்தியமாக்குவதற்குத் தேவையான இயந்திரம் கற்பனையாகவே இருந்தது. கணினி அறிமுகமே இதற்கான அடித்தளமாக அமைந்தது. கணினிகள் என்றதும், டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட்கள் நினைவுக்கு வரலாம். தொடுதிரை மூலமே இன்று நவீன சாதனங்களின் திரைகளில் பல ஜாலங்களைச் செய்ய முடிகிறது.
ஆனால், இணைய வரலாற்றில் கணினிகள் என்றால், ஆதிகால வடிவமான ராட்சதத் தோற்றம்கொண்ட மெயின்பிரேம் கணினிகளையே நினைவில் கொள்ள வேண்டும். பி.சி.க்களின் மூல வடிவமான இவற்றில் விசைப்பலைகையோ தகவல்களைக் காணத் திரைகளோ கிடையாது. கணக்கிடும் ஆற்றலே இவற்றின் ஆதார திறன். ஒரு பெரிய கட்டிடம் அளவுக்கு இருந்த கணினிகள் ‘பஞ்ச் கார்டு’ என்று சொல்லப்படும் முறையிலேயே தகவல்களை உள்ளீடு செய்யக்கூடியவையாக இருந்தன.
இந்தக் கணினிகளின் விலையும் மிக அதிகம். எனவே, ஒற்றைக் கணினி டைம் ஷேர் எனப்படும் பகிர்வு முறையில் பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டன. கணினிகள் அளவில் சுருங்கி, செயல்திறனில் பெருகி, அவை பரவலான பயன்பாட்டுக்கு வருவதற்குக் காரணமான மைக்ரோபிராசஸர் கண்டுபிடிப்பு உள்ளிட்டவை நிகழக் காத்திருந்தன.
கணினிகள் அனலாக் வடிவிலிருந்து டிஜிட்டல் வடிவத்துக்கு மாறிக்கொண்டிருந்தன. கம்ப்யூட்டர் துறையிலேயே படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.
இந்தப் பின்னணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் எனும் எண்ணம் தோன்றியதை தொழில்நுட்பத் தொலைநோக்கு என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய தொலைநோக்குக் கொண்ட மனிதராக ஜெ.சி.ஆர். லிக்லைடர் (JCR Licklider) இருந்தார்.
சர்வதேச வலைப்பின்னல் எனும் கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவராக லிக்லைடர் போற்றப்படுகிறார். இவரது வலைப்பின்னல் கருத்தாக்கமே பின்னாளில் இணையத்தின் முதல் வடிவமான அர்பாநெட் உருவாகக் காரணமானது.
(வலை வீசுவோம்)
தொடர்புக்கு: enarasimhan@gmail.com