இளமை புதுமை

இளமை.நெட்: இணையம் இனி உங்கள் கையில்!

சைபர் சிம்மன்

இணையத்தை எல்லோரும் அணுகக்கூடிய வகையில் 'வைய விரிவு வலை’யை (World Wide Web ) உருவாக்கியவர் எனப் பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானியான டிம் பெர்ன்ஸ் லீ, இப்போது இணையத்தை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்காக அவர் புதிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ‘இன்ரப்'டைத் (inrupt) தொடங்கி, ‘சாலிட்' எனும் புதிய மேடையை உருவாக்கி இருக்கிறார்.

வலை மாற்றம்

லீ உருவாக்கியுள்ள 'சாலிட்' மேடையை இரண்டாவது வலை எனலாம். ஏற்கெனவே உள்ள வலையின் மீதுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும், இது செயல்படும் விதம் முற்றிலும் வேறுபட்டது. லீ எதற்குப் புதிய வலையை உருவாக்க முயல வேண்டும்?

இணையம் தற்போது செயல்பட்டுவரும் விதத்தில் லீ கடும் அதிருப்தி கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இணையத்தை உருவாக்கியவர்கள் உத்தேசித்திருந்த ஆதாரக் கொள்கையிலிருந்து வெகுவாக விலகிவிட்டது என லீ கருதுகிறார். குறிப்பாக, இணைய நிறுவனங்கள் பயனாளிகளிடமிருந்து தகவல்களைத் திரட்டி அவற்றின் மூலம் விளம்பர வருவாய் குவிப்பது லீயை இப்படி மாற்றி யோசிக்க வைத்துள்ளது. லீ வலையை உருவாக்கியபோது, அந்தக் கண்டுபிடிப்பு மூலம் தான் ஆதாயம் அடைய நினைக்காமல், காப்புரிமை பெறாமல் அதை உலகுக்கு அளித்தார்.

ஆனால், தற்போது இணைய நிறுவனங்கள் தகவல் அறுவடையில் காட்டும் வேகமும் இணையவாசிகள் இதைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருப்பதும் லீயை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சேவையை இலவசமாகப் பெற அவற்றிடம் தரவுகளை ஒப்படைத்து விட்டு நிற்க வேண்டும் எனும் தற்போதைய நிலையை லீ ஏற்கவில்லை. இதை மாற்றும் முயற்சியாகவே ‘சாலிட்’டை உருவாக்கியுள்ளார்.

புதிய பாதை

நிறுவனங்களின் கைகளில் தரவுகளை ஒப்படைக்காமல், அவற்றைக் கையாளும் உரிமையைப் பயனாளிகள் கைகளுக்கே கொண்டு வருவதுதான் லீயின் நோக்கம்.

தற்போதுள்ள வலை கட்டமைப்பின் மீது செயல்படும் சாலிட் தளத்தில், பயனாளிகள் தங்களுக்கான ‘பாட்’களை (Solid POD) உருவாக்கலாம். இதில் அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்கள், ஒளிப்படங்கள், கருத்துகள் போன்றவற்றை இடம்பெறச் செய்யலாம். இதைப் பயனாளிகளுக்கான தனிப்பட்ட இணையதளமாக வைத்துக்கொள்ளலாம். இதன் கட்டுப்பாடு முழுவதும் பயனாளிகள் கையிலேயே இருக்கும்.

என்ன பயன்?

இதன்மூலம் தற்போதுள்ளது போல, புதிய சேவையை உருவாக்கிவிட்டு, அதை இணையவாசிகளைப் பயன்படுத்த வைத்து அவர்களின் தகவல்களைத் திரட்டி வருவாய் ஈட்டும் வர்த்தக மாதிரிக்கு மாறாக, மென்பொருள் வல்லுநர்கள், முதலிலேயே பயனாளிகளின் தகவல்களை அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதன் அடிப்படையில் புதிய சேவைகளை உருவாக்குவார்கள்.

பயனாளிகள் ‘பாட்’கள் மூலம் எந்த வகைத் தகவல்களைப் பகிரலாம் என்பதைத் தீர்மானிக்க முடியும். பயனாளிகளின் தகவல்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது மட்டுமல்ல, எந்தச் சேவையில் நுழைவது என்றாலும் தற்போதுள்ளதைப் போல, பாஸ்வேர்டு அடிக்க வேண்டியதில்லை. எல்லோரும் தங்கள் ‘பாட்’கள் அடையாளம் மூலமே சேவையின் உள்ளே நுழையலாம். தற்போதுள்ள இணையத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இது கடினமான முயற்சி என ஒப்புக்கொள்ளும் லீ, அதற்கான முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கிறார்.

சாலிட் இணையதளம்: https://solid.inrupt.com/

SCROLL FOR NEXT