அந்த இளைஞனின் பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டார்கள். "தினமும் காலையில் ஆறரை மணிக்கு இவன் தொழிற்சாலைக்குக் கிளம்ப வேண்டி இருக்கிறது. தினமும் ராத்திரி ஒரு மணிக்குத்தான் தூங்கப் போறான்".
நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை, லேப்டாப்பில் படம் பார்ப்பது அல்லது சாட்டிங் செய்வது போன்ற பல காரணங்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அதன் வடிவம் கொஞ்சம் மாறுபட்டிருந்தது.
"ராத்திரி ஒன்பது மணிக்கு இவன் நண்பர்கள் வராங்க. அவர்களோடு சேர்ந்து இவனும் பீச்சுக்குப் போறான். நடுராத்திரிதான் வீட்டுக்கு வரான்". தங்கள் மகனை அவர்கள் வேறு விதத்தில் சந்தேகிக்கவில்லை. அவன் நண்பர்களும் நீண்டகால நண்பர்களே என்றும், நல்லவர்களே என்றும் கருதினார்கள்.
அந்த இளைஞனிடம் கொஞ்சம் ரகசியமாகப் பேசிப் பார்த்தேன். நள்ளிரவில் பெற்றோரின் தூக்கம் கலைவதையும் (எழுந்து கதவைத் திறக்க வேண்டுமே), அவனது உடல்நலமே நாளடைவில் பாதிக்கப்பட்டு விடும் என்றும் கூறினேன்.
அவன் அளித்த பதில் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது. "எனக்குத் தெரியுது. ஆனால், சொன்னால் நண்பர்கள் புரிஞ்சுக்க மாட்டேன்கிறாங்க. எதையாவது சொல்லி என்னை சமாதானம் பண்ணிடறாங்க" என்றான்.
அதாவது, "இன்னிக்கு வெளியேவரும் மூடு இல்லை" என்றால், “அப்பதான் நீ கட்டாயம் வரணும். நாம் அரட்டை அடிச்சா மூடு சரியாயிடும்” என்கிறார்கள். “உடம்பு கொஞ்சம் சரியில்லை” என்றால், “மாத்திரை வாங்கிப் போட்டுகிட்டு அரட்டையைத் தொடரலாம்” என்கிறார்கள். நள்ளிரவில் பெற்றோர் கதவைத் திறக்க வேண்டுமென்பது பற்றிச் சொன்னால், “வெளியே பூட்டிக் கொண்டு போகலாம்” என்கிறார்கள்.
எனக்குப் புலப்பட்ட ஆலோசனையைக் கூறினேன். வரவில்லை என்பதை மட்டும் கூறச் சொன்னேன். எதற்காக வரவில்லை என்பதற்கான எந்தக் காரணத்தையும் குறிப்பிட வேண்டாம் என்றேன். காரணத் தைக் குறிப்பிட்டால்தானே அவர்கள் தீர்வு என்று ஒன்றைக் கூறுகிறார்கள். "ஒரு சிறு புன்னகையுடன் 'நான் வரலே' என்று கூறிவிடு. சனி, ஞாயிறுக்கிழமைகளில் மட்டும் அவர்களோடு நேரத்தைச் செலவிடலாம்’’ என்றேன்.
அவன் முகம் பளிச்சென்று ஆனது. நடைமுறையில் இது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை அவனுக்கு வந்திருக்க வேண்டும்.
நன்கு யோசித்தபின் ஒரு விஷயத்தில் ஈடுபட வேண்டும் அல்லது ஈடுபட வேண்டாம் என்று தீர்மானித்த பிறகு, அதற் கான விளக்கங்களை அளிக்க அளிக்க சங்கடம்தான் என்ற நிலை உண்டானால், விளக்கங்கள் தேவை இல்லை.
(மாற்றம் வரும்)
ஓவியம்: பாலசுப்பிரமணியன்