படிப்பு, பாட்டுப் போட்டிகள், மேடைக் கச்சேரிகள், ரியாலிட்டி ஷோ என இருந்த அவர், தான் நடித்துள்ள திரைப்படம் வெளியாகும் உற்சாகத்தில் இருக்கிறார். ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் குழந்தைகளின் பங்கை உணர்த்தும் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்னும் திரைப்படத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் சந்தோஷ் பாலாஜி (17), சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நன்கு பரிச்சயமானவர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்ன ‘ஊழலுக்கு எதிரான போராட்டம் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும்' என்ற கருத்தை மையமாகக் கொண்ட கதையைத் திரைப்படமாக்கியதால் அதில் விருப்பத்துடன் நடித்துள்ளார். மேலும் அவருடைய அம்மா, அப்பா உள்ளிட்ட குடும்பத்தினரும் இப்பட வாய்ப்பை ஒப்புக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
“சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் போட்டியில எனக்கு அறிமுகமான என்னோட ஃப்ரண்ட்ஸ் ஆஜித், யாழினி, அனு எல்லோரும் இப்படத்தில் நடிச்சதால எனக்கு இது ரொம்ப ஹேப்பி” என்கிறார் சந்தோஷ் பாலாஜி.
இயக்குநரின் பொறுமை, நண்பர்கள் உடன் இருந்த தைரியம் போன்ற காரணங்களால் படத்தின் ஷுட்டிங் மிகவும் ஸ்மூத்தாக நடைபெற்றுள்ளது. இப்படத்தில் அவர் மூன்று பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்தப் படத்தின் காட்சிகளும், வசனங்களும் தேசத்தின் வளர்ச்சிக்கு ஊழல் எப்படி முட்டுக்கட்டை போடுகிறது என்பதையும், ஊழலை ஒழிக்கும் மிகப் பெரிய சவால் இளைஞர்கள் கைகளிலேயே இருக்கிறது என்பதையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
படத்தின் புரோமோஷனுக்காகப் படக் குழுவினர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்துள்ளனர். அவரைச் சந்தித்த நிமிடங்கள் சந்தோஷத்தையும், அவரது எளிமை பிரமிப்பையும் தந்ததாகக் குழுவினர் கூறுகிறார்கள்.
இந்தப் படம் தந்துள்ள உற்சாகத்தில் எதிர்காலத்தில், இது போன்ற சமுதாயச் சிந்தனை செறிந்த திரைப் படங்கள், குறும்படங்கள், வாய்ப்புகள் வந்தால் அதை ஏற்று நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் சந்தோஷ்.
ஊழலை ஒழிப்பதில் இளைஞர்கள் உறுதியோடு செயல்பட வேண்டும், அப்படிச் செயல்பட்டால் ஊழல் இல்லா தேசம் நிச்சயம் உருவாகும் என நம்பிக்கையோடு பேசுகிறார் சந்தோஷ். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.