இளமை புதுமை

என் கேள்விக்கென்ன பதில்? | ஏஐயின் இன்னொரு முகம்

சைபர் சிம்மன்

கல்லூரியில் சைக்காலஜி படிக்கிறான் வருண். அவனது பேராசிரியை ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார். நாளைதான் கடைசி நாள். ஆனால், இன்னும் அவன் எழுதவில்லை. லேப்டாப்பைத் திறக்கிறான் வருண். ஏ.ஐயிடம் பிராம்ப்ட் கொடுக்கிறான். காப்பி பேஸ்ட் செய்கிறான். அசைன்மென்ட் ரெடி. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

காரில் செல்லலாம் என்றால், அப்படிச் செல்வதில் என்ன தவறு? இந்த இடத்தில் தேவையற்ற கார் செலவு வேண்டாம் என்று சொல்லலாம், அது தவறில்லை, எவ்வளவு செலவானாலும் காரிலேயே போகலாம் என்றும் சொல்லலாம்.

இதேபோல் வருணின் வகுப்புப் பாடத்தை எழுத ஏஐ சேவையைப் பயன்படுத்துவது சரியா, தவறா என்கிற கேள்விக்கும் கார் உதாரணத்தை பொருத்திப் பார்க்கலாம். காரில் செல்லும் வாய்ப்பு இருக்கும்போது காரைப் பயன்படுத்துவதுபோல, ஏஐ சேவையின் துணையைக் கொண்டு கட்டுரை எழுதினால் என்ன?

கால்குலேட்டர் ஒப்பீடு: ஏஐ சேவையின் எழுத்தாற்றலை ஏற்றுக்கொள் பவர்கள், ஏஐ மூலம் கட்டுரை எழுதிச் சமர்பிப் பதில் தவறு இல்லை எனலாம். இதற்குப் பதிலாக நடைப்பயிற்சியால் கிடைக்கும் பலனை காரில் செல்வதன் மூலம் பெற முடியுமா, அதேபோல் சுயமாக யோசித்து எழுதுவதால் கிடைக்கும் கற்றல் பலனை வலியுறுத்தலாம். ரு காலத்தில் கூட்டல் - கழித்தல் உள்ளிட்ட கணக்குகளை மனக்கணக்காகத்தான் செய்து பார்த்தோம்.

கால்குலேட்டர்கள் வந்த பிறகு, மனக் கணக்கைவிட கால்குலேட்டர் மூலம் கணக்கிடுவது எளிதாகவும் இயல்பாகவும் இருக்கிறது. இதேபோல, வருங்காலத்தில் ஏஐயைக் கொண்டு எழுதுவது இயல்பாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்று வாதிடுபவர்கள் உண்டு.

கால்குலேட்டர் அறிமுகமான காலத்தில் வகுப் பறையில் அதன் பயன்பாடு தடை செய்யப் பட்டிருந்தது. அதேநேரம், கால்குலேட்டரில் கணக்குபோடுவதும், ஏஐயைக் கொண்டு எழுதுவதும் ஒன்றுதானா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஏஐ பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு எனக் குறிப்பிடப்படும் ஏஐ பல அடிப்படை வகைகளையும், உள்பிரிவுகளையும் கொண்டது. ஏஐ நுட்பத்துக்கான வழிமுறைகளும் மாறுபட்டவை.

செய்யறிவு: உண்மையில் ஏஐக்கான வரையறைகளும் விளக்கங்களும் சிக்கலானவை. இயந்திரங்கள் சிந்திக்கின்றனவா எனும் கேள்விக்கு விடை காண்பது கடினம். இந்தச் சிக்கல்களை விட்டுவிட்டு, இப்போதைக்கு ஏஐ பயன்பாட்டுக்கு வருவோம். ஏஐ ஏற்கெனவே பல துறைகளில் பலவிதமாகப் பயன்பாட்டில் இருக்கிறது.

சில துறைகளில் ஏஐ நுட்பம் மிகவும் தேவை என்பது உண்மைதான். ஆனால், இப்போது ஏஐ சார்ந்து நடைபெறும் பெரும்பாலான விவாதங்களில் மையப் பொருளாக இருப்பது ஏஐயைப் பற்றியது அல்ல, ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனக் குறிப்பிடப்படும் ஆக்கத்திறன் செய்யறிவைப் பற்றியது.

‘ஜென் ஏஐ’ எனக் குறிப்பிடப்படும் இந்த ஏஐ, புதிய வகை அல்ல. ஏற்கெனவே பழக்கத்தில் உள்ள பாரம்பரிய ஏஐ நுட்பத்தின் மேம்பட்ட வடிவமாகக் கருதப்படுகிறது. இதைப் பொறுத்த வரை, தரவுகளை அலசி, ஆராய்ந்து அவற்றுக்கு இடையிலான பொதுத்தன்மைகளைப் புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் கணிப்புகளை வெளியிடுவதாக செய்யறிவு அமைகிறது.

இதிலிருந்து இன்னொருபடி மேலே முன்னேறி, தரவுகளின் பொதுத்தன்மைகளைக் கண்டறிவதோடு, அவற்றைக் கொண்டு புதிதாக உருவாக்கித் தரும் ஆற்றல் கொண்டிருக்கும் ஏஐ நுட்பம், ‘ஜெனரேட்டிவ் ஏஐ' (ஆக்கத்திறன் செய்யறிவு) எனக் குறிப்பிடப்படுகிறது. சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி போன்றவை அதற்கான உதாரணங்கள்.

நவீன் நுட்பம்: இத்தகைய ஏஐ சாட்பாட்கள் மனிதர்களைப் போலவே எழுதவும் பேசவும் திறம் பெற்றவை. கேள்விக்குப் பதில் சொல்லி உரையாடுவதோடு, மனிதர்களைப் போலவே கட்டுரைகள், கதைகள் உள்ளிட்ட ஆக்கங்களையும் இவை உருவாக்கித் தருகின்றன. இதுவரை ஏஐ வசம் இல்லாத இந்தப் படைப்பூக்கம் சார்ந்த ஆற்றலே, ஜென் ஏஐ நுட்பத்தின் முக்கிய முன்னேற்றம்.

நவீன ஏஐ நுட்பம் மனிதர்கள் போலவே எழுதும் திறன் பெற்றிருக்கிறது என்றால், அவற்றைக் கட்டுரை எழுதப் பயன்படுத்துவது தவறில்லையே என்று கேட்கத் தோன்றலாம். ஆனால், இது இயந்திரங்களின் கணிப்புத்திறன் சார்ந்தது மட்டுமே. இது 100 சதவீதம் நம்பகமானது அல்ல. ஏன் கட்டுரை எழுத ஜெனரேட்டிவ் ஏஐயைப் பயன்படுத்தக் கூடாது?- தொடர்ந்து பார்ப்போம்.

(வளரும்)

- enarasimhan@gmail.com

SCROLL FOR NEXT