உலக அளவில் ஆண்டு முழுவதும் நடைபெறும் ஒரு வைபவம் சேங்வான் கே-பாப் திருவிழா. இந்தத் திருவிழாவின் முதல் கட்டப் போட்டி இணையத்தின் வழியே நடக்கும். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இரண்டாம் கட்டப் போட்டியில் கொரியன் பாப் பாடலைப் பாடி அதற்கேற்ப நடனமும் ஆட வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்வானவர்களோடு போட்டியிட வேண்டும்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி. மிசோரமிலிருந்து வந்திருந்த சூசி என்ற இளம் பெண் முதலிடத்தைப் பிடித்தார். இப்படி ஒவ்வொரு நாட்டின் சார்பாகவும் பரிந்துரைக்கப்படும் வெற்றியாளர்கள்தாம் தென் கொரியாவில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள். ‘கே-பாப்’ போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்ததால், உற்சாகத்தில் இருக்கிறார் ஸ்ருதி.
“அது ஓர் அலாதியான அனுபவம். ஆங்கில பாப் இசையைப் போன்றதுதான் இதுவும் என்றாலும், பாடல்கள் கொரியன் மொழியில்தாம் இருக்கும். கொரிய பாடல்கள் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே முதன் முதலாக எனக்கு அறிமுகம் ஆனது கொரிய நாடகங்கள்தான். அந்த நாடகங்களில் வரும் பாடல்களைத்தான் முதலில் பாட ஆரம்பித்தேன். அதன் பிறகு அந்த மொழியில் சரியாகப் பேசவும் பாடவும் உச்சரிப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். கொரியக் குடிமகன்களுக்கு இணையாக என்னுடைய திறனை வளர்த்துக்கொண்டேன். கொரிய மொழியைக் கற்றுக்கொண்டபோது, சில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளின் அர்த்தத்தோடு இருப்பதைக் கண்டு வியந்தேன். இங்கே இருப்பதுபோலவே அப்பா என்னும் வார்த்தைக்கு கொரியாவிலும் தந்தை என்பதுதான் அர்த்தம். கொரியன் இசையிலும் சாருகேசி போன்ற ராகங்களின் சாயல் உள்ளது” என்கிறார் ஸ்ருதி.
கொரிய பாடலைப் பாடவும் ஸ்ருதி கற்றுக்கொண்டிருக்கிறார். இதற்காகத் தனிப் பயிற்சியெல்லாம் எடுத்திருக்கிறார். “புகழ் பெற்ற கொரியப் பாடகி அய்லியிடம்தான் பாடுவதற்குக் கற்றுக்கொண்டேன். மேடையில் பாடுவதோடு அதற்கேற்ப ஆடவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு பாடலின் சில வரிகளை நடித்துக் காட்டவும் வேண்டும். இப்படிப் பல சவால்கள் நிறைந்தது கே-பாப். ஆச்சர்யத்தைக் கண்களில் வெளிப்படுத்தியபடி சொல்கிறார் ஸ்ருதி.ஸ்ருதி