நமக்கு நல்ல வேலையும் நிறைவான வாழ்க்கையும் கிடைக்க வேண்டுமென்றே விரும்புவோம். அப்படிக் கிடைக்கும் வாழ்க்கையும் வேலையும் நிலைக்க வேண்டுமென்றால், நம் நடத்தையில் அதிகக் கவனம் இருக்க வேண்டும். நம்முடைய அதீத நம்பிக்கையும் தன்னிலை மீறிய செயல்பாடுகளும் நம்மைச் சிக்கலுக்குள் இழுத்துவிடத் தயாராகவே இருக்கும்.
படிப்பை முடித்தாகிவிட்டது, விருப்பப்பட்ட வேலையும் கிடைத்தாகிவிட்டது என்ற எல்லையில்லாக் கொண்டாட்டத்தில் சிலர் செய்கிற முதல் தவறு என்ன தெரியுமா? தன்னுடைய தேவையையையும் விருப்பத்தையும் தாண்டி கடன் எனும் மாய வலைக்குள் விழுவதுதான்.
‘கடன் வாங்க எங்ககிட்ட வாங்க’ என்ற தூண்டிலில் மீன்களைப்போல மாட்டிக்கொள்ளும் இளைஞர்கள் மீள முடியாமல் தத்தளிக்கிறார்கள். தனது கடனை அடைக்கும் திராணியை உணரத் தவறுவதும் பின் அதை அடைக்க இன்னொரு கடனை நோக்கி ஓடுவதுமான வட்டப் பாதையில் நுழைந்து வெளியே வர முடியாமல் அவர்கள் தவிக்கவும் செய்கிறார்கள்.
அதனால் என்ன ஆகும்? அன்றாடம் நிகழ்கிற சாதாரண செயல்களைக்கூட ஒருவித மன அழுத்தத்தோடு செய்கிற சூழலுக்குத் தள்ளிவிடும். அதன் விளைவு, தேவைப்படுகிற இடத்தில் விட்டுக்கொடுத்து போகிற போக்கைக் கைவிட்டுவிட்டு, கோபத்தைக் கக்குகிற அந்நியனாக மாறும் அபாய கட்டத்துக்குச் சென்றுவிடுகிறார்கள்.
இதை பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. அவசியத் தேவை எதுவென அறிந்து கடனின் அவசியத்தைப் புரிந்துகொண்டு நிதானமாகச் செயல்பட சிறு எச்சரிக்கையும் தேவைதான் அல்லவா? இந்த விஷயத்தில் என்னுடைய மாணவன் ஆனந்தின் அனுபவம் இளைஞர்களுக்கு நல்லதொரு பாடம்தான்.
ஆனந்த் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா, அம்மா இருவருமே அரசு ஊழியர்கள். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான எல்லாமே அவனிடம் இருந்தது. படிக்கிறபோதே ஸ்மார்ட் போன், பைக்கை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பான்.
ஆனந்த் இப்படி அடிக்கடி போனையும் பைக்கையும் மாற்றுவதைக் கண்டு ஒரு முறை அவனை அழைத்துப் பேசினேன். “அடிக்கடி போனையும் பைக்கையும் மாத்துற. அப்போ பழசை என்னப் பண்ணுவ?”
“சார், இருக்கவே இருக்காங்க சொந்தக்காரங்க, நண்பர்கள். இப்படி வாங்கி அப்படிக் கொடுத்திடுவேன்” என்றான்.
“இதுக்காகத் தேவையில்லாமல் பணம் செலவு பண்ணித்தானே ஆகணும். புதுப் பொருளை கடனுக்குத்தானே வாங்குறே” என்றவுடன், “சார், இது ரொட்டேஷன் மாதிரிதான்” என்றான். “உன்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டுமே ஒண்ணுதாம்பா” என்று சொன்னதற்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தான் ஆனந்த்.
வளாகத் தேர்வில் ஆனந்துக்கு நல்ல வேலை கிடைத்தது. அன்று மகிழ்ச்சியுடன் சென்ற ஆனந்தை அதன் பிறகு நான் பார்க்க நேரிட்டது, ஒரு கம்யூட்டர் சென்டரில். அங்கே டைப்பிஸ்டாக வேலை பார்த்துகொண்டிருந்தான்.
என்னைப் பார்த்ததும், “நல்லா இருக்கீங்களா சார்?” என்றவனிடம் நலம் விசாரித்துவிட்டு, “என்னாச்சு, நல்ல வேலையிலதான் இருந்தே” என்றேன்.
சட்டென்று சோகமாக மாறினான் ஆனந்த். “அது ஒரு பெரிய கதை சார். தேவையில்லாம கடன் வாங்குற பழக்கம் எனக்கு எதிரியா மாறிடுச்சு. பெங்களூருவில் நல்ல நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தேன். சேர்ந்த சில மாதங்களிலேயே கார் வாங்க வாகனக் கடன் வாங்கினேன். அதோடு விட்டிருக்கலாம். சில மாதங்கள் கழித்து வீடு வாங்க வீட்டுக் கடனையும் அவசரப்பட்டு வாங்கினேன். ஆனா, கடன் போட்டு புது கார் வாங்குற அளவுக்கு அவசியமில்லைங்கிறதைக் கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன்.” என்றான் ஆனந்த்.
“ஒரே நேரத்தில் இரண்டு கடன்களுக்கும் என்னால் தவணையைக் கட்ட முடியாம விழி பிதுங்கிட்டேன். தவணை போகக் கையில் பணம் சரிவர இல்லாமல் போயிடுச்சி. வீட்டுலையும் பணம் கேட்க முடியல. வேலையில எப்பவும் டென்ஷன், கோபம் எல்லாம் சேர்ந்துடுச்சு. வேலையில நான் செஞ்ச ஒரு தப்பை என்னுடன் வேலை பார்க்கிற ஒருத்தர் சுட்டிகாட்டி வாக்குவாதம் செஞ்சாரு. அதுல உணர்ச்சிவசப்பட்டு அவரைக் கைநீட்டிட்டேன்” என்றான் படபடப்பு விலகாமல்.
“இந்த விவகாரம் நிர்வாகம்வரை போனதால, வேலையை ராஜினாமா செய்கிற சூழ்நிலை ஏற்பட்டிருச்சு. அதனால் அங்கிருந்து வந்துட்டேன். உடனே வேற வேலை கிடைக்காததால இந்த வேலையைப் பார்க்கிறேன்” என்று தன் சோகக் கதையைச் சொன்னான் ஆனந்த்.
“தேவை எது, விருப்பம் எது என்று புரிந்துகொள்ளாமலும் நிதானம் இல்லாமலும் செயல்பட்டதன் விளைவு, உணர்ச்சிவசப்பட்டு
உடன் பணிபுரிபவரைக் கைநீட்டி அடிக்கிற அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டதே, பார்த்தியா”
என்று அவனிடம் சொன்னதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் அதை ஆமோதித்தான்.
“உண்மைதான் சார். என்னோட பலவீனமே என்னுடைய நடத்தையும் எதையும் யோசிக்காமல் செய்வதும்தான் என்பதை வேலை போன அன்றே உணர்ந்துவிட்டேன். சீக்கிரமே என் படிப்புக்கு பொருத்தமான வேலையில் பார்ப்பீங்க சார்” என்று நம்பிக்கையோடு சொன்னவனை வாழ்த்தி விடைபெற்றேன்.
திட்டமிடாமல் செய்யும் எந்தச் செயலும் பின்விளைவுகளை நிச்சயம் தந்தே தீரும். வாங்கும் சம்பளத்தில் முக்கால்வாசி தவணைக்கே சென்றுவிட்டால், நம் செலவுக்கு என்ன செய்வது என்ற கேள்வி ஒரு கணம் மனதுக்குள் எழுந்திருந்தால் ஆனந்துக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்தக் கால இளைஞர்கள் கை நிறையச் சம்பாதிக்கத் தொடங்கியவுடனே அகலக் கால் வைத்துவிடுகிறார்கள்.
சரியாகத் திட்டமிட்டால் ஒரு வகையில் வீட்டுக் கடன்கூட நல்ல விஷயம்தான். ஆனால், யோசிக்காமல் கடனை நோக்கி ஓடுவது ஆழம் தெரியாத நீரோட்டத்தில் காலை வைப்பதற்குச் சமம். கடன் என்பது தெரிந்த பிரச்சினை என்றால், அதன் தொடர்ச்சியாகத் தெரியாத பல பிரச்சினைகளும் நம்மைச்
சுழலுக்குள் சிக்க வைத்துவிடும். இனி, கடன் என்ற வார்த்தையைச் சொல்கிறபோதே நிதானம்
அவசியம் என்பதையும் சேர்த்தே சொல்வோம்.
(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு:karthikk_77@yahoo.com
ஓவியம்: பாலசுப்பிரமணியன்