ஏதோ ஒரு சுகமான கனவில் அமிழ்ந்திருப்பீர்கள். கனவையும் உங்களையும் பிணைத்திருக்கும் நெருக்க இழையை சிறிதும் இரக்கமின்றி அறுத்துப்போடும் அலாரத்தின் ஓசை.
அந்த நேரத்தில் வரும் எரிச்சலை ஒரு நல்ல காபி குடித்துத்தான் போக்க முடியும். அலார ஓசையின் கடுமையை காபியின் சுவைதான் குறைக்கிறது. ஆனாலும் இரண்டுக்கும் இடையில் இருக்கும் நேர இடைவெளியை மிக நீண்டதாக மனம் உணரும்.
அலாரம் அடிக்கும்போதே மணமான காபியும் தயாராகி, நீங்கள் எழுந்து அலாரத்தை அணைத்ததும் உங்கள் கைகளில் ஜம்மென்று காபி வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாக இருக்கிறது நடக்க வேண்டுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள்.
அப்படி ஒரு அலாரம் க்ளாக்கை உருவாக்கியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த டிசைனர் ஜோஷ் ரெனொவ்ஃப்.
பாரிசையுர் (Barisieur) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அலாரம் க்ளாக்கில் காபிக்குத் தேவையான பொருள்களை முந்தைய நாள் இரவிலேயே அடைத்துவைத்துவிட்டால் போதும்.
இதிலுள்ள காபி மேக்கர் காபிக் கொட்டையை அரைத்து, தண்ணீரைச் சூடாக்கி அழகான டிகாஷனைத் தந்துவிடும். தேவைப்பட்டால் அதில் பாலைக் கலந்து மறுநாள் காலை நீங்கள் எந்த அலுப்புமில்லாமல் அழகாய் எழுந்து காபியை எடுத்துக் குடிக்கலாம். சுவையான காபியுடன் அந்த நாளைச் சுறுசுறுப்பாகத் தொடங்கலாம்.
இரவில் காபிக்குத் தேவையான முன் தயாரிப்புப் பணியே உங்களின் சுகமான உறக்கத்திற்கும் உதவிவிடும். தினந்தோறும் நீங்கள் மேற்கொள்ளும் முன் தயாரிப்புப் பணியை அடுத்து உங்கள் உடம்பும் மனமும் உறங்கத் தயாராகிவிடும்.
ஆக இரவிலும் நிம்மதியான தூக்கம்; காலையிலும் சுவை சொட்டும் காபி.
கூடுதல் விவரங்களுக்கு: joshrenoufdesign.com.