மி
ளகாயைச் சமையலுக்கு மட்டுமல்ல, விளையாட்டுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள் சீனர்கள். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் மிளகாய் சாப்பிடும் போட்டி ஒன்றை நடத்தி ஊரையே அதகளப்படுத்தி இருக்கிறார்கள்.
‘சாம்பியன் சில்லி ஈட்டர்’ என்னும் பெயரில் இந்தப் போட்டி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இது வெறும் மிளகாய் சாப்பிடும் போட்டி மட்டும் கிடையாது. மிளகாய்க் குளியல் செய்தபடி ஒரு நிமிடத்தில் 50 மிளகாயைச் சாப்பிடக்கூடிய போட்டி. நீச்சல் குளத்தில் மிளகாயைக் கொட்டிவிடுகிறார்கள். மிளகாய் கொட்டியதால் அந்தத் தண்ணீர் காரமாகிவிடுகிறது. அந்தத் தொட்டியில் இறங்கி மிளகாயை வேகமாகச் சாப்பிட வேண்டும். அதுவும் 40 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும் காலத்தில் இந்தப் போட்டியை நடத்தி இருக்கிறார்கள்.
போட்டியில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் முன்வந்தார்கள். அவர்கள் நீச்சல் குளத்தில் இறங்கிப் போட்டிபோட்டுக்கொண்டு மிளகாயைச் சாப்பிட்டார்கள். கொளுத்தும் வெயிலில் காரம் கலந்த தண்ணீரில் இறங்கி மிளகாயைச் சாப்பிட்ட பலரும் காரமும் எரிச்சலும் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டபடியே சாப்பிட்டார்கள். எரிச்சல் தாங்க முடியாத பலரும் பாதி யிலேயே போட்டியிலிருந்து விலகிவிட்டார்கள். ஆனால், நீச்சல் குளத்தில் பழம் கிடப்பதைப்போல எடுத்து சாப்பிட்ட டேங் சுஹு என்ற இளைஞர், ஒரு நிமிடத்தில் 50 மிளகாயைச் சாப்பிட்டு வெற்றிக்கொடி கட்டினார்.
சீனாவின் ஹூனான் மாகாணம் காரமான உணவு வகைகளுக்குப் பெயர்போனது. அதை உணர்த்தும் வகையில் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.