‘தயாரா?’ என்றார் சாந்தா.
அவருடைய மகள்கள் சந்திரிகாவும் இந்திராவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘தயார்ம்மா' என்றார்கள் புன்னகையுடன்.
‘இன்னிக்கு என்ன தலைப்புல பேசப்போறீங்க?’
‘நான் குடியரசுத் தலைவரானால்...’
‘நல்லது. ஆரம்பிங்க!’
அவர்கள் இருவரும் ஏற்கெனவே தங்களுடைய பேச்சைத் தயார்செய்துவைத்திருந்தார்கள். அதை ஒருமுறை பார்த்துக்கொண்டு பேசத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் இந்தியாவின் குடியரசுத் தலைவரானால் என்னவெல்லாம் செய்வார்கள், எப்படி நாட்டை முன்னேற்றுவார்கள் என்றெல்லாம் விளக்கினார்கள்.
இருவருடைய பேச்சையும் கவனமாகக் கேட்ட பிறகு, அவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்தார் சாந்தா. ‘வாழ்த்துகள், நீதான் நம்ம நாட்டோட புதிய குடியரசுத் தலைவர்’ என்றார் புன்னகையுடன். ‘அடுத்து என்ன செய்யணும்ன்னு தெரியும்ல?’
‘ஓ, பதவியேற்பு ஆவணத்துல கையெழுத்துப்போடணும்!’
‘ஆமா, இது வெறும் விளையாட்டுன்னு நினைச்சுக்கக் கூடாது. உண்மையிலயே இந்தப் பதவிக்கான முழுத் தகுதியும் உனக்கு இருக்குங்கற எண்ணத்தோட பொறுப்பா நடந்துக்கணும்.’
அவர்களுக்கிடையிலான தினசரி விளையாட்டு இது. நாள்தோறும் சாந்தா ஒரு பதவியைத் தேர்ந்தெடுப்பார்: குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் ... இப்படி அவர் தேர்ந்தெடுக்கும் பெரிய பதவியைப் பற்றி அவருடைய மகள்கள் ஆராய வேண்டும், அந்தப் பதவிக்கு வருகிறவர்களுக்கு என்னென்ன தகுதிகள் தேவை, பதவியேற்றபின் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், தேர்தல் பிரச்சாரம்போல, தாங்கள் அந்தப் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பது பற்றிய ஓர் உரையை எழுத வேண்டும்.
நாள்தோறும் இரவு உணவைச் சாப்பிட்ட பிறகு, அதைப் பேசிக்காட்ட வேண்டும். இருவரில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது என்பதைப் பொறுத்து ஒருவர் பிரதமராவார் அல்லது குடியரசுத் தலைவராவார். அவர் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுவிட்டு அந்தப் பதவிக்குரிய பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை, இது வெறும் விளையாட்டுதான். ஓடிப்பிடிப்பது, கண்ணாமூச்சி, சறுக்குமரம்போல இதுவும் ஒரு பொழுதுபோக்கு; சிறிது நேரத்துக்கு யாரோ ஒரு பெரிய தலைவரைப் போல் தன்னை எண்ணிக்கொள்வது, கற்பனைசெய்வது, அவருடைய அதிகாரங்களுடன் பொறுப்பாக வாழ்ந்துபார்ப்பது.
ஆங்கிலத்தில் இதனை ‘Roleplay’ என்கிறார்கள்; அதாவது, ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி நடிப்பது, ‘நான் விண்வெளி வீரரானால்...’ என்றெல்லாம் பள்ளிகளில் குழந்தைகள் பேசுகிறார்களல்லவா? அதுபோல்தான்.
ஆனால், ‘ரோல்ப்ளே’ என்பது வெறும் பொழுதுபோக்கல்ல; மனத்தளவில் மாற்றத்தை உண்டாக்குகிற, ஒரு பொறுப்புக்குத் தயாராகிற, இன்னொருவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டு சிறப்பாகச் செயல்படச்செய்கிற உத்தி என்கிறார்கள் நிபுணர்கள்.
எடுத்துக்காட்டாக, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உண்மையான நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகள், அறிகுறிகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு என்ன நோய், அதற்கு எத்தகைய சிகிச்சை தரலாம் என்றெல்லாம் தீர்மானிக்கப் பயிற்சி தேவை. அதற்கு ரோல்ப்ளேவைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோயாளிகளைப் போல் நடிக்கிறார்கள், அவர்கள் தங்களுடைய கற்பனையான பிரச்சினைகளைச் சொல்ல, மருத்துவ மாணவர்கள் அவர்களைக் கேள்விகேட்டு நிலைமையைப் புரிந்துகொள்கிறார்கள், மருந்துகள், சிகிச்சைகளைப் பரிந்துரைக்கிறார்கள்; இதன்மூலம், அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கிறது, நாளைக்கு ஓர் உண்மையான நோயாளியைச் சந்திக்கும்போது பதற்றமின்றிச் செயல்பட முடிகிறது.
இதேபோல் ராணுவத்தில், விற்பனைத்துறையில், வாடிக்கையாளர் சேவைத்துறைகளிலெல்லாம் ரோல்ப்ளேவைப் பயன்படுத்துகிறார்கள். எந்தவொரு துறையிலும் புதிதாக நுழைகிறவர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதற்கான நல்ல உத்தியாக இதைப் பரிந்துரைக்கிறார்கள்.
சாந்தா இதையெல்லாம் படித்துப் புரிந்துகொண்டுதான் இப்படியொரு விளையாட்டைத் தன் மகள்களுக்கு அறிமுகப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த விளையாட்டின்மூலம் அவர்கள் மனத்தில் எப்படிப்பட்ட முன்னேற்றங்கள் நிகழும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்ததாகத் தோன்றுகிறது.
‘என் தாய்க்குச் சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டது’என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் இந்திரா. ‘அவருக்குப் பல கனவுகள் இருந்தன; கல்லூரிக்குச் செல்ல வேண்டும், முக்கியப் பொறுப்புகளில் திறமையுடன் செயலாற்ற வேண்டும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தார்; பதினெட்டு வயதில் திருமணமாகிவிட்டதால், அவற்றையெல்லாம் மறந்துவிட்டுக் குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது.’
ஆகவே, தனக்குக் கிடைக்காத அந்த வாழ்க்கையைத் தன் மகள்களின் வழியாக வாழ்ந்துபார்க்கலாம் என்று சாந்தா எண்ணியிருக்க வேண்டும். ‘நீ நினைத்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம்’ என்ற தன்னம்பிக்கையை அவர்கள் மனத்தில் ஏற்படுத்த விரும்பியிருக்க வேண்டும், அதற்குதான் அவர் இப்படியொரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
‘எங்கள் தாய் எங்களிடம், நீ எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆகவே, பெரிய கனவுகளை வளர்த்துக்கொள் என்பார்’ என்கிறார் இந்திரா. ‘எங்களால் எதையும் சாதிக்க முடியும், வெல்வதற்கு எல்லைகளே இல்லை, நாங்கள் எதை விரும்பினாலும் அதுவாக ஆகலாம் என்றெல்லாம் எங்கள் தாய் எங்களுக்குச் சொல்லித் தந்தார், மிக எளிய பின்னணியிலிருந்து பெரிய உயரங்களுக்கு அழைத்துவந்தார்’ என்கிறார் சந்திரிகா.
இன்று, இந்திரா நூயி, பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர், அமெரிக்கர்கள் மட்டுமே வகித்துவந்த இந்தப் பொறுப்பில் அமரும் முதல் வெளிநாட்டவர் அவர்தான், முதல் பெண்ணும் அவர்தான். சந்திரிகா டாண்டன் புகழ்பெற்ற இசைக்கலைஞர், அவர்களுடைய சகோதரர் நந்து நாராயணன் முதலீட்டுத்துறையில் சிறந்துவிளங்குகிறார். சாந்தாவின் பிள்ளைகள் உண்மையில் உலகை வென்றுகொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்திராவுடன் பணிபுரிந்த யாரும் அவரைப் பெரிய திறமையாளராக எண்ணவில்லை. ‘பெண்தானே’ என்ற அலட்சியம். அவர் ஏதாவது சொன்னாலும் நம்ப மாட்டார்கள், இன்னொருவரிடம், அதாவது, ஓர் ஆண் பணியாளரிடம் அதைப் பற்றிக் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள்.
இதுபோன்ற அவமதிப்புகள் ஒருவருடைய தன்னம்பிக்கையை முடக்கும்; உண்மையில் தனக்குத் திறமையில்லையோ என்ற ஐயத்தை உண்டாக்கும்; முன்னேற்றத்தைப் பாதிக்கும்.
ஆனால், அப்படி எந்தப் பிரச்சினையும் இந்திராவுக்கு வரவில்லை. அதற்குக் காரணம், சிறுவயதில் எடுத்த இந்தப் பயிற்சிதான் என்று ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார் அவர். ‘என்னால் எதுவாகவும் ஆக முடியும்; எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது; ஆகவே, யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் என்னுடைய பணியில் முழுக்கவனம் செலுத்தினேன். நிச்சயம் வெற்றியடைவேன் என்று நம்பினேன்.’
‘இளங்கன்று பயமறியாது’ என்றொரு பழமொழி உண்டு. நாம் அதை எதிர்மறையாக நினைக்கிறோம், ‘சின்னப்பசங்க அசட்டுத் தைரியத்துல எதை வேணும்ன்னாலும் செஞ்சுடுவாங்க’ என்று புரிந்துகொள்கிறோம்.
உண்மையில், பயமறியாத இளங்கன்றைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், வயதாக ஆக மனிதர்களுக்குத் தங்களைப் பற்றிய ஐயங்கள் அதிகரித்துவிடுகின்றன; ஆகவே, எதிலும் புதிதாக இறங்கத் தயங்குகிறார்கள். இளங்கன்றுக்கு அந்தப் பிரச்சினையில்லை, எதையும் செய்ய முடியும் என்று அது நம்புகிறது. அந்த நம்பிக்கையைப் பெற்றோரும் மற்றவர்களும் போற்றிக்காக்க வேண்டும், தூண்டிவிட வேண்டும், அதனால் சில தோல்விகள் வந்தாலும், ‘பரவாயில்லை, தொடர்ந்து பெரிய கனவுகளைக் காண்’ என்று ஊக்குவிக்க வேண்டும்.
ஏனெனில், ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்’ என்ற மனோநிலைதான் இன்றைய உலகில் வெற்றிக்கான முதல் தேவை. அதை இளவயதில் வளர்த்துக்கொண்டுவிட்டால், வாழ்நாள்முழுக்க அது உடனிருக்கும், அனுபவத்தால் இன்னும் மெருகேறும்!
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: nchokkan@gmail.com