* ‘ராயன்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ பாடலின் நடுவில் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பிக்கும் ‘உசுரே நீ தானே...’ என்கிற வரிகளை இணையவாசிகள் ‘ரிப்பீட்’ மோடில் கொண்டாடினர்.
* ஓணம் பண்டிகையின்போது ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘மனசிலாயோ’ பாடலின் ‘லிரிக்’ வீடியோ வெளியானது. அப்புறமென்ன? ‘ரீல்ஸ்’, ‘ஷார்ட்ஸ்’ எனச் சமூக ஊடக உலகம் பரபரப்பாகிவிட்டது.
* ‘ஃபேவரைட் மெலடி’ பாடலுக்கான இடத்தை ‘லவ்வர்’ படத்தில் இடம்பெற்ற ‘தேன் சுடரே’ பாடல் பிடித்தது. மோகன் ராஜனின் வரிகளும் ஷான் ரோல்டனின் இசையும் இளைய தலைமுறையைக் கொண்டாட வைத்தன.
* தொடர்ந்து சொதப்பி வருவதாக யுவன்சங்கர் ராஜா ரசிகர்கள் புலம்பிவரும் நிலையில், விஜயின் ‘கோட்’ படத்தில் உருவான ‘மட்ட’ பாடல் மட்டும் தப்பித்து அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது.
* ‘அரண்மனை 4’ படத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் துள்ளலான இசையில் உருவான ‘அச்சச்சோ’ பாடல், அதிரிபுதிரி ரகமானது. அதுவே படத்துக்கான விளம் பரமாக அமைந்தது.
* ‘அமரன்’ படத்துக்குச் சிறப்பான இசையால் கவனிக்க வைத்தார், ஜி.வி.பிரகாஷ்குமார். இதில் இடம்பெற்ற ‘ஹே மின்னலே’ பாடல் காதலர்களின் கீதமாக மாறியது.
* ‘பிரதர்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘பால் டப்பா’ என்கிற அனிஷ் எழுதி பாடிய ‘மக்காமிஷி’ பாடல் இளசுகளை ஆட்டம் போட வைத்தது. ‘ரீல்ஸ்’கள், ‘ஷார்ட்ஸ்’களில் இப்பாடல் ரகளை செய்தது.
* இளைய தலைமுறையினருக்குப் போட்டியாக இளையராஜாவின் பாடலும் இந்த ஆண்டு வைரல் உலாவில் இடம்பிடித்தது. ‘விடுதலை 2’ படத்தில் ‘தெனம் தெனமும்’ பாடல் மெலடி மெட்டில் தாலாட்ட வைத்தது.
* ஷான் ரோல்டன் இசையில் ‘லப்பர் பந்து’ படத்தில் இடம்பெற்ற ‘சில்லாஞ்சிருக்கியே’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் ஆனது. அந்தப் படத்தில் ‘கெத்து’ கதாபாத்திரத்துக்கான தீம் இசையான இளையராஜாவின் ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ என்கிற பழைய பாடலும் இன்றைய தலைமுறையை முணுமுணுக்க வைத்தது.
* ‘ஆவேஷம்’ படத்தில் வெளியான ‘இலுமினாட்டி’ என்கிற பாடல் மலையாளக் கரையோரத்தையும் தாண்டி தமிழ் ரசிகர்களையும் கட்டிப் போட்டது. எங்குப் பார்த்தாலும் ‘இலுமினாட்டி’யின் ஆட்டம் களை கட்டியது! - தீமா