கா
ல்பந்தை உதைத்து விளையாடுவதுபோல் கால்பந்துப் போட்டிகளைப் பார்ப்பதும் ரசிகர்களை எப்போதுமே உற்சாகப்படுத்தும் விஷயம். கடைசிவரையில் முடிவு தெரியாமலே நகரும் போட்டி கடைசி விநாடியில் மாறிவிடும் அதிசயம் கால்பந்தில் மட்டுமே சாத்தியம். மற்ற விளையாட்டுகளில் முடிவை ஓரளவு ஊகிக்க முடியும் ஆனால், கால்பந்தோ ஊகங்களைக் காற்றில்பறக்கவிட்டுவிடும் விளையாட்டு. என்ன ஆகுமோ யார் வெல்வாரா என்ற பதற்றத்துடன் கடைசி விநாடிவரை ரசிகர்களைக் காத்திருக்கச் செய்வதால் தன்னைத் தனித்த விளையாட்டாக அடையாளப்படுத்திக்கொள்கிறது கால்பந்து.
கால்பந்து விளையாட்டை நமது வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் சாத்தியம் உள்ளது. கால்பந்தை யார் யாரோ உதைப்பார்கள், எங்கெங்கோ நகரும் என்றபோதும் அது கோல் போஸ்ட்டை மோதும் கணத்தில் நிகழும் ரசவாதத்தைப் பொறுத்ததே அதற்கான மரியாதை. வாழ்க்கையும் அப்படித்தானே? அதனால்தான் பிற விளையாட்டுகளைவிட நம்மை உற்சாகத்தில் ஆழ்த்துவதில் ஒரு படி முன்னே நிற்கிறது கால்பந்து. ஒரு விளையாட்டு பலதரப்பட்ட ரசிகர்களைத் தன்னுள் கட்டிப்போடும் திறமையைக் கொண்டது என்றால் அது கால்பந்தாட்டம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
அத்தகைய ரசவாதமிக்க விளையாட்டு என்பதாலேயே உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ரஷ்யாவில் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் 21-வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நேரிலும் தொலைக்காட்சியிலும் கண்டு மகிழ்ந்துவருகிறார்கள். 32 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டி அடுத்த மாதம் 15-வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி வரைக்கும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடக்கும் இந்தப் போட்டிகளைக் காண்பதற்காகவே உலகம் முழுவதிலுமிருந்து ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர்.
கடந்துமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜெர்மனி அணியை வீழ்த்துவதே இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ள அணிகளின் இலக்கு. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புக்கு இடையில் கால்பந்தாட்டத்துக்கு கூகுள் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு தினசரி சிறப்பு டூடுல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளும் அன்றைய தினம் விளையாடும் நாடுகளின் கொடி, கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு டூடுல்களை வரைவதற்காக, 32 ஓவியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு முன்பு உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளின்போது வெளியிடப்பட்ட டூடுல் ஓவியங்கள், தற்போது வெளியாகியுள்ள ஓவியங்கள் அடங்கிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.