இளமை புதுமை

அனுபவம் புதுமை 11: நிதானத்துடன் கையாளுங்கள்

கா.கார்த்திகேயன்

ளைஞர்களின் மனநிலையைத் தெரிந்துகொள்வது பெரிய சவாலான விஷயம்தான். அவர்களது செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்குத் தனி அகராதியே தேவைப்படலாம். ஆனால், ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்து மதிப்பிடுவது ஒரு வகையில் பெரிய கலைதான். படிக்கும்போது, வேலைக்குச் செல்லும்போது, காதலில் விழும்போது, திருமண வாழ்க்கையில் ஈடுபடும்போது என எல்லாத் தருணங்களிலும் சுயமாக சிந்தித்து செயலாற்றுவது நல்லதுதான்.

ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளையோ மற்றவர்களுடைய உணர்ச்சிகளையோ அடையாளம் கண்டு மதிப்பீடு செய்வது எளிமையான விஷயம் அல்ல. ஆனால், அந்தக் கலையை அறிந்து வைத்திருப்பது அவர்களுக்கு எல்லையில்லாச் சந்தோஷத்தை வாழ்க்கையில் நிச்சயம் கொடுக்கும். இதை ‘உணர்வுசார் நுண்ணறிவு’ (Emotional Intellegence) என்று சொல்வார்கள்.

இளமைப் பருவத்தில் முடிவு எடுக்கும்போது, அதில் உணர்ச்சி சற்று மேலோங்கி இருக்கும். அத்தகைய முடிவை எடுக்கும்போது அதில் நன்மை, தீமைகளை இளமைப் பருவத்தில் யாரும் பார்ப்பதே இல்லை. உணர்ச்சிவசப்படுதல், உணர்வுகள் ஆகியவை பற்றிக் கல்லூரி வகுப்புக்கு இடையே மாணவர்களிடம் அடிக்கடி சில கேள்விகள் கேட்பதுண்டு. ‘உன்னுடைய உணர்வுகளை உனக்குக் கையாளத் தெரியுமா, அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரியுமா?’ ஆகிய கேள்விகளை அடிக்கடி கேட்பேன். இதற்குப் பதிலாய், ‘என்னைப் பற்றியே எனக்குத் தெரியாது” என்றுதான் மாணவர்களிடமிருந்து பதில் வரும்.

மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியவைப்பதற்காக சில உதாரணங்களைச் சொல்வதுண்டு. வழக்கமாக மொட்டைத் தலையில் ஒருவரைப் பார்த்தால், “எந்த ஊர் மொட்டை திருப்பதியா, பழனியா?” என்று யாராக இருந்தாலும் கேட்டுவிடுவார்கள். உறவுகளை இழந்தவர்களும்கூட மொட்டை அடிப்பார்கள் அல்லவா? அப்படிப்பட்டவரிடம் எழுப்பப்படும் இந்தக் கேள்வி மன வருத்தத்தை ஏற்படுத்தும்தானே.

‘இங்கேதான் உணர்வுசார் நுண்ணறிவு’ தேவை என்று மாணவர்களிடம் சொல்வேன். எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் சரி, பேசுவதாக இருந்தாலும் சரி சம்பந்தப்பட்டவரின் மனநிலையை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். ஒரு விஷயத்தைக் கேட்பதற்கு முன்பு சம்பந்தப்பட்டவரை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப நம் செயல்களையோ கேள்விகளையோ அமைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுச் சூழலில்கூட ஒரு அனுபவத்தை நீங்கள் எதிர்கொண்டிருக்கலாம். வீட்டம்மா கஷ்டப்பட்டு செய்த இனிப்பு சுமாரா இருந்தாலும், ‘சூப்பர்’ என்று பாராட்டினால், அடுத்தமுறை அதைவிடப் பிரமாதமான இனிப்பும் காரமும் கிடைக்கும். மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பும் அங்கீகாரமும் தருவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், சங்கடமில்லாத நீடித்த உறவுகளுக்கு இந்த ‘உணர்வுசார் நுண்ணறிவு’தான் அஸ்திவாரமே.

எதற்கு இந்த ‘உணர்வுசார் நுண்ணறிவு’ புராணம் என்று நீங்கள் நினைக்கலாம். ‘உணர்வுசார் நுண்ணறிவு’ இல்லாமல் செயல்பட்ட மாணவி ஒருவரின் கதை மற்றவர்களுக்கெல்லாம் ஓர் உதாரணம்.

என் மாணவி மனிஷா படிப்பில் கெட்டி. கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது. வேலையில் சேர்வதற்கு முன்பு என்னிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்திருந்தார். வேலையில் சேரப்போவதாகச் சொன்ன அவர், “நேற்றுதான் எனக்குக் கல்யாணம் ஆனது” என்ற தகவலையும் சொன்னார். சந்தோஷமாக வாழ்த்து சொல்லிவிட்டு, “கல்யாணத்துக்குக் கூப்பிடவேயில்லையே” என்றேன்.

“இது என் வீட்டுக்கே தெரியாது சார். இது பதிவுத் திருமணம்” என்று அதிர்ச்சி தந்தார்.

“நல்லா யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தியா, இல்ல உணர்ச்சிவசப்பட்டு எடுத்தியா” என்று மனிஷாவிடம் கேட்டேன். “எங்களுடைய காதல் உண்மையானது. என் காதலை விட்டுத் தராமல் இருக்க எடுத்த முடிவு” என்று பெருமையாகச் சொன்னார் மனிஷா.

“நல்லது. ஒருத்தருக்கொருத்தார் விட்டுக்கொடுத்து புரிஞ்சுகிட்டு வாழ்க்கையைத் தொடங்குங்கள்” என்று வாழ்த்தி அனுப்பினேன்.

ஓராண்டு கழித்து மனிஷாவின் அப்பாவைப் பார்த்தபோதுதான், அந்த மாணவி பற்றி வருத்தமான விஷயம் தெரிய வந்தது. ஒரே வீதியில் வசித்த பையன், நல்ல படிப்பு, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை என்பதையெல்லாம் பார்க்கத் தெரிந்த மனிஷாவுக்குக் காதல் திருமணம் கசந்துவிட்டது. காதலிக்கும்போது இருந்த உணர்வு, திருமணத்துக்குப் பிறகு கரைந்துவிட்டது. இருவரும் ஒருத்தரையொருத்தர் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியாமல், இப்போது விவாகரத்துக் கோரி இருவரும் நீதிமன்றத்துக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

மனிஷா வேலையை விட்டுவிட்டு உயர் கல்வி படிக்க விரும்பியிருக்கிறார். அவரது கணவரோ வேலைதான் முக்கியம்; படிப்பு தேவையில்லை என்று சொன்னதிலிருந்து இருவருக்கும் பிரச்சினை வெடித்திருக்கிறது. அது நாளடைவில் பெரிதாகி விவகாரத்து ஆகும் அளவுக்கு முற்றியிருக்கிறது.

நம்முடைய உணர்வுகளைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்வது, அடுத்தவர் உணர்வுகளைக் காலில் போட்டு மிதிப்பது என இருந்தால் மனக்கஷ்டம், ஏமாற்றம், நஷ்டம் எல்லாம் நமக்குதான். முன் கோபத்தில், உணர்ச்சிவசப்பட்டு கொட்டும் வார்த்தை, எடுக்கிற முடிவு எல்லாம் எதிர்மறை விளைவைத்தான் தரும். உணர்வு சமநிலைதான் சீரான உறவுக்கு உத்திரவாதமே.

எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களை கையாள்வது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இன்றைய சூழலில் மற்றவர்களுடனான நமது அணுகுமுறை மிகவும் முக்கியமானது. சூழ்நிலையும் தருணமும் இணக்கமற்று, எதிர்நிலையில் இருக்கும்போதும்கூட, சிலர் விஷயங்களைச் சிறப்பாகக் கையாண்டு தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதும் உண்டு.

மனிஷாவுக்கும் அவருடைய கணவருக்கும் அது இல்லாமல் போனதால்தான் இன்று நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

கட்டுரையாளர்: பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

SCROLL FOR NEXT