இளமை புதுமை

அனுபவம் புதுமை 07: அது ஒரு பொறாமைக் காலம்!

கா.கார்த்திகேயன்

செ

ன்ற வாரத்தில் ஒரு நாள் விடியற்காலையில் வாசலுக்கு வந்து செய்தித் தாளை எடுக்கும்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். எதிர் வீட்டில் வாழை மரம் தோரணம் கட்டி மங்களகரமாக இருந்தது. ஆனால், வித்தியாசமான அமைதியும் நிலவியது. ஒரே குழப்பமாக இருந்தது. என் குழப்பத்தைப் புரிந்துகொண்ட வீட்டம்மா, “எதிர் வீட்டில் ஏதும் விசேஷம் இல்ல. ‘கல்யாண சாவு’ நடந்திருக்கு. 90 வயது பெரியவர் இறந்துவிட்டார்” என்றார்.

துக்கம் விசாரிப்பதற்காக அங்கே சென்றேன். அங்கே நடந்த நிகழ்வுகள் வேறொரு கண்ணோட்டத்தில் யோசிக்க வைத்தது. பெரிதாக யாருக்கும் முகத்தில் வருத்தம் இல்லை. வயதானவர் என்பதால் கதைப் பேசிக்கொண்டிருந்தார்கள். உறவுக்காரர்கள் பேசிக்கொள்ளும்போது, “அவருக்கென்ன அதிர்திஷ்டக்காரர், எல்லா விஷயத்திலும் கொடுத்து வைச்சவர்”, “படுத்து அவஸ்தை இல்லாம போய்ட்டாரு, நமக்கெல்லாம் இப்படி வாய்க்குமா” எனப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பொதுவாக ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்து ஆசைப்படுவார்கள், பொறாமைப்படுவார்கள். ஆனால், மரணத்தைப் பார்த்து ஆசைப்படுபவர்களையும் பொறமைப்படுபவர்களையும் அப்போதுதான் பார்த்தேன். மனிதர்களிடத்தில் மலிந்துகிடக்கும் இந்தப் பொறாமைக் குணம் இல்லாத இடமே இல்லை. படித்தவர்கள், தலைவர்கள், தலைவர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என யாரும் இந்தக் குணத்திலிருந்து தப்பிவிட முடியாது.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு மத்தியில் இக்குணம் இயல்பாகவே தொற்றிக்கொள்ளும். பாசத்தால், அழகால், சிறப்பால், சிறப்பான வாழ்க்கையால் ஆணோ பெண்ணோ நன்றாக இருந்தால், அவர்கள் மீது மற்றவர்களுக்கு பொறாமை வந்துவிடும். மாணவர்கள் மத்தியில் பொறாமைக் குணம் இருந்தால், ஒருவரையொருவர் சாடிக்கொள்வது, ஆசிரியர்களிடத்தில் கோல்மூட்டுவது, அவர்களுக்கெதிராக சூழ்ச்சிகளைச் செய்வது, ஒன்றுகூடிக் கேலி பேசுவது என எல்லாவற்றையும் செய்வார்கள். சிலர் தன் வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதைவிட அடுத்தவரை எப்படிக் கவிழ்க்கலாம் என ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்குத் தீவிரமாவதும் உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜி என்ற என்னுடைய மாணவி நடந்து கொண்ட விதம் அப்படியானதுதான்.

பொதுவாகக் கல்லூரிகளில் ஆண்டு விழா என்றாலே களைக் கட்ட ஆரம்பித்துவிடும். கல்லூரி தின விழாவுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே ஒத்திகைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். கல்லூரிக்குத் தினமும் ‘கட்’ அடிக்கும் மாணவர்கள்கூட ஒத்திகையைத் தவறவிடமாட்டார்கள்.

சுவாதியும் அவரது குழுவும் மிகவும் உற்சாகமாக நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார்கள். சுவாதிக்கு பரத நாட்டியம் தெரியும். அதனால் இயல்பாக மற்ற மாணவிகள் அவரை குழுத் தலைவராக ஏற்றுக்கொண்டனர். ஆண்டு விழா நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கும்போது மாணவி ராஜிக்கு நடனம் ஆட விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சுவாதியைச் சந்தித்து, “நானும் டான்ஸ் ஆடுறேன்பா, என்ன சேர்த்துக்கோ” என்று கேட்டிருக்கிறார். சுவாதியோ விழா ஒருங்கிணைப்பாளரான என்னைக் கைகாட்டிவிட்டார்.

“இந்த நடனத்துக்காக இரண்டு மாசமா ஒத்திகை எடுத்துக்கிட்டு இருக்கோம். திடீர்னு இப்ப ராஜி வரேன்னு சொன்னா, குரூப்ல யாரையும் நீக்க முடியாது. அதுமட்டுமில்ல, ஒரு வாரத்துல ராஜி ஸ்டெப்ஸ் கத்துகிட்டு ஆடவும் முடியாது” என என்னைச் சந்தித்து கவலையுடன் சுவாதி சொன்னார்.

நான் ராஜியை அழைத்து, “திடீர்னு வந்து நடனம் ஆடுறேன்னு சொன்னா என்ன பண்றது? கடைசி நிமிஷத்துல ஒண்ணும் பண்ண முடியாது. அடுத்த ஆண்டு நீ கண்டிப்பா நடனம் ஆடலாம். விருப்பபட்டால், நீயே குழுத் தலைவர் பொறுப்பை எடுத்துக்கோ. நடைமுறை சிக்கலைப் புரிஞ்சுக்கோ" என்றேன். ராஜி எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.

ஆண்டு விழாவுக்கு முதல் நாள் நடந்த ஒத்திகைக்கு எல்லோரும் வந்திருக்க, சுவாதி மட்டும் வரவில்லை. ‘ஏன் வரவில்லை’ என்று போன் செய்தனர் சக மாணவிகள். “நடனம் ஆட வரமாட்டேன்னு பிரச்சினை செய்யுறா. நீங்களே ஆடிக்கோங்க. எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றா” என்றார் போன் செய்த மாணவி. பின்னர் சுவாதியிடம் நான் பேசியபோதுதான் விஷயம் தெரிந்தது, பிரச்சினை சுவாதியிடம் இல்லை. ராஜியிடம் என்று!

நான் ராஜியை அழைத்து பேசினேன். “இந்த முறை நடனம் ஆட முடியலைன்னு வருத்தப்படலாம். ஆனா, பொறாமைப்பட்டால் எப்படி?” என்றேன். அதற்கு ராஜி, “நான் ஒண்ணும் செய்யலியே” என ஒன்றும் தெரியாததுபோல நடித்தார். தான் நடனம் ஆட முடியாமல் போனதற்கு சுவாதிதான் காரணம் என நினைத்த ராஜி, வகுப்பில் நல்ல தோழமையோடு பழகிய ஒரு மாணவனை இணைத்து பேசி, சுவாதியிடம் வம்பு செய்ததையும் தன் குடும்பப் பிண்னணியைச் சொல்லி மிரட்டிய விஷயத்தையும் சொன்னதும் ராஜி மிரண்டுபோனார். இதன்பின் ராஜி என்ன நினைத்தாரோ, அவரது கண்கள் குளமாயின.

“நான் செஞ்சது தப்புதான் சார், இனிமே இப்படிப் பண்ணமாட்டேன்” என்று அழுதார். அவரை ஆசுவாசப்படுத்தி, சுவாதியிடம் வருத்தம் தெரிவிக்கும்படி சொன்னேன். “தன்னால இயலாத அல்லது அடைய முடியாத ஒன்றை, மற்றவர் பெறும்போது அதைத் தாங்கிக் கொள்ளாமல் மனசுக்குள் பொறாமை வருவது தப்பு. யார் மேல பொறாமைபடுகிறோமோ அவர்களுடைய உழைப்பு, தகுதியெல்லாம் கருத்தில் கொள்ளமாலேயே போய்விடுவது அதைவிட பெரிய தப்பு. பொறாமை இருக்கும் இடத்துல படைப்பாற்றல் இருக்க முடியாது. படைப்பாற்றல் வளரணும்னா பொறாமையைத் தூக்கி போடு” என்று கண்டிப்போடு ராஜியிடம் கூறினேன்.

உண்மையில் பொறாமை எனும் தீ யார் மனதில் இருக்கிறதோ அது அவர்களையே அழித்துவிடும். நல்ல பழக்கவழக்கம், நேர்மறைச் சிந்தனை, தகுதிய வளர்த்துக்கொள்ளும் மனப்பான்மை என வேலியை அமைத்துக்கொண்டால், பொறாமை எனும் தீயசக்தி யாரையும் தீண்டாது.

(அனுபவம் பேசும்)

கட்டுரையாளர்: பேராசிரியர் தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

SCROLL FOR NEXT