கா
தலில் பரஸ்பரம் இருவருமே உண்மையாகவும் தீவிரமாகவும் இருந்தால்தான் அந்தக் காதல் வெற்றிபெறும். ஒருவேளை, காதல் துணை உங்கள் காதலை முன்னுரிமையாகக் கருதவில்லை என்றால், அதை உணர்ந்து அந்தக் காதலை முறித்துக்கொள்வதுதான் சிறந்தது. காதல் துணை உங்களை முன்னுரிமையாகக் கருதுகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான அளவுகோல்கள்:
காதலரின் விருப்பமான தேர்வாக மட்டுமே நீங்கள் இருக்கக் கூடாது. நீங்கள் அவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். காதல் துணை, உங்களுக்கு முன்னுரிமை தராமல் விருப்பம் மட்டும் கொண்டிருந்தால் அந்த உறவைத் தொடர்வது நல்லதல்ல. காதல் உறவில் பரஸ்பரம் இருவர் மட்டும்தான் எப்போதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். மூன்றாவது நபர் யாருக்கும் இடம் இருக்கக் கூடாது.
காதல் துணை உங்களது பொறுமையையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து சோதித்துக்கொண்டிருப்பது நல்ல அறிகுறியல்ல. ஒரு சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே உருவாக்கி, அதற்கு நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்று பரிசோதித்துப் பார்ப்பவராகக் காதல் துணை இருந்தால், உங்கள் காதலைத் தொடர்வதைப் பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
காதல் உறவில் காதல் துணை ஏமாற்றுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வேளை, ஏமாற்றுவதைச் சாதாரணமான தவறு என்று நினைப்பவராகக் காதல் துணை இருந்தால், அந்த உறவை முறித்துக்கொள்வதே சிறந்தது.
காதல் துணை அவரது பழைய காதல் உறவை முழுவதுமாக முறிக்காமல் தொடர்ந்துகொண்டிருந்தால், அது உங்கள் காதலுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல. பழைய காதல் உறவை முழுமையாக முறிக்காத பட்சத்தில் உங்கள் காதலை அவருடன் தொடர்வது சிக்கலையே உருவாக்கும்.
காதலில் நேர்மை முக்கியம். ஒரு வேளை, நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவராக உங்கள் காதல் துணை இருந்தால் அது சாதாரண விஷயமல்ல. பொய் சொல்வதைச் சாதாரணமாக நினைப்பவராக இருந்தால், அது காலப்போக்கில் உங்கள் காதல் உறவைப் பாதிக்கும்.
வாக்குறுதிகளை எப்போதுமே காற்றில் பறக்கவிடுபவராகக் காதல் துணை இருந்தால், அது உங்கள் காதலுக்கு நல்லதல்ல. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதே ஆரோக்கியமான காதலுக்கான சான்று.
உங்கள் காதல் உறவை ஏதோ போட்டியைப் போன்றோ விளையாட்டைப் போன்றோ உங்கள் காதல் துணை அணுகினால், அது சிக்கலான விஷயம்தான். அவர் எப்போதுமே தான் மட்டுமே எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டுமென்று நினைத்தால், அது உங்கள் உறவின் சமத்துவத்தைப் பாதிக்கும்.